தென் தமிழீழம் , ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளரை விடுவிக்கக் கோரி, அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் சற்றுமுன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று 40 ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை, எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
குறித்த தவிசாளரை விடுவிக்கக் கோரி பிரதேச தமிழ் மக்கள் கோசங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று- அம்பாறைவீதி, அக்கரைப்பற்று- சாகமம் வீதி போன்றவற்றில் தமிழ் மக்களும் கல்முனை- அக்கரைப்பற்று வீதியில் முஸ்லிம் மக்களும் முற்றுகையிட்டு காணப்படுகின்றனர்.
நிலமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அக்கரைப்பற்றுப்பிரதேசத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.