கடந்த ஜனாதிபதி தேர்தலில் பின்னர் எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து துணிந்து தீர்மானம் எடுக்க அரசாங்கம் பின் நிற்பதும், அவர்கள் தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதுமே மக்களை விசனமடையச் செய்துள்ளதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த அமெரிக்க காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பில் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அதுல் கேஷாப் ஆகியோர், வடக்கு முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து வடக்கு மக்களின் நிலை குறித்து கேட்டறிந்தனர். இதன்போதே தாம் மேற்குறித்த விடயத்தைக் கூறியதாக ஊடகங்களுக்கு வடக்கு முதல்வர் கூறியுள்ளார்.
அத்தோடு, வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டங்கள், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை, காணிகளை மீள கையளிக்காமை தொடர்பாகவும் தாம் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்விடயங்களை செவிமடுத்த அமெரிக்கா பிரதிநிதிகள், அமெரிக்கா எந்த வகையில் உதவலாம் என வினவியுள்ளனர். இதற்கு, இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இரு வருட கால அவகாசம் கோரியுள்ள நிலையில், இக் காலப்பகுதிக்குள் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாக வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்தார்.