கொட்டிக் கொட்டி நார் எடுத்து
கூடு கட்டும் குருவி -அது
எட்டித் தொடும் தூரமதன்
கீழோடும் அருவி
நீரடித்து செல்லும் காலம்
அறிந்திருக்கும் பறவை -அது
போரடித்து பிழைத்து விட்டால்
இழந்து விடும் உறவை
மண்ணிடையே எதிரி என்று
நீர் மேலே கட்டும் -அதன்
கண்ணிடையே குஞ்சின் உடல்
கரையேறித் தட்டும்
விதி எண்ணித் தாய்ப் பறவை
சிறகுடைத்து கத்தும்-அது
சதி எண்ணி மறு படியும்
நாருடைத்து சுத்தும்
குடியேறும் மறுபடியும்
குளத்தடியில் குருவி -அதன்
மடியேறும் மீண்டுமொரு
தலைமுறையின் தகுதி
இழந்தாலும் இறந்தாலும்
இனம் காக்கும் உருவில் -அதன்
உண்மைக்கும் உணர்வுக்கும்
சிரம் தாழ்த்தும் மனதில்
இழந்தாலும் குருவியதன்
இன உணர்வு தூண்டும்-புலி
விழுந்தாலும் உருவிலதன்
சனம் திரளல் வேண்டும்
இருண்டு மனம் மயங்கியதால்
சிதைந்ததில்லை குருவி -அட
திரண்டு பகை எழுந்தமையால்
புதைந்ததில்லை கருவி
காலமது களம் வந்து எமைக்
கொல்லப் பார்க்கும் -அட
ஈழமது உளம் நின்று அதை
வெல்லத் தீர்க்கும்
குஞ்சிழந்த குருவியதன் மனம்
சிதைந்ததில்லை -அதன்
கூடிழந்த வலியதனை தினம்
நினைந்ததில்லை
வென்றெழுந்து தினம் ஆளும்
காலம் ஒன்று வேணும் -எம்
சினமெழுந்து பகை நீக்கித்
தமிழ் ஈழம் தோணும் …..
– கவிப்புயல் தமிழ் சரண்