மஞ்சத்தில் புரண்டு நிதம் மன்மத பானமுண்டு கொஞ்சிக் குலவிப் பெண் கொங்கை சுவைத்துக்
கண் அஞ்ச அரவணைத்து அடி முடி ஆற்பரிக்க
கெஞ்சித்து நிற்கும் சுக்கிலம்சூலடைய;
என்னென்ன வையுண்டோ எல்லாம் முயற்சித்து
பலகாலம் தவமிருந்தும் பயனின்றிச் செத்தவுடல்
எத்தனை கோடியடா இத்துயரை அறிவாயோ..!
கூழாய் நொளுநொளுப்பாய் திங்கட்கோர்
வடிவமுற்று; கால்கை முளைத்துக் கண்ணொடு
வாய் அமைந்து; தொப்புள் கொடியூடே
பிண்டமுயிர்பெற்றுப் பின் எட்டியுதைத்துப்பெண்
இடுப்பு வலிபெருக்கி கத்திக்கூச்சலிட்டு
தரைவீழும் இவ்வுடலைக் கொத்திக்
கூறுபோட்டு கொலைசெய்தல் முறையோ சொல்.?
பூனையோ நாயோ சிற்றோடைச் சிறுமீனோ
புளுவோ பெருந்தேளோ பொல்லா அரவங்களோ
மானோ மரையோ மதர்த்த யானைகளோ; புலியோ வெள்ளெலியோ வேற்றுநாட்டுப் பறவைகளோ எல்லாமெமை ப்போல உருப்பெற்று உயிர்வாள நல்லா யுரிமை பெற்றே வாழ்கின்ற சிறுவாழ்வை காரணமேது மின்றி சிதைப்பது சரியோ நில்!
குற்றம் இழைத்தவரை கொல்வதுதான் நீதி யென்றால் எல்லா மாந்தரையும் இன்றேகொல் யாவருமே ஏதோவொருவகையில் இழிசெயலைச் செய்துவிட்டு நாறும் சதைமூடி நடிக்கிறார்;
இவ்வுலகில் பாவம் பெருகிப் பகிடிகள் வெற்றியாகி
நல்லொழுக்கம் கரைந்தொழுகி நரமுண்ணும்
மாந்தர்கள் பல்கிப் பெருகியதே பார் முழுதும் கேடு
ஒருநாள் ஒரு பொழுதோர் எறும்பைப்பிடித்து
அதன் அசைவில் பிறக்கின்ற ஆனந்தமறிந்துவிடு! மறுநாள் ஒரு நாயைத் தடவிக்கொடுத்ததில் அதுபுரியும் அன்பில் மனிதங்கள் தோற்கும் பின் உணர்வாய் உயிகளின் உடலுறைந்த உயிர்த் துடிப்பை; கல்லாய் இராதே! கலிகாலம் இதில் உந்தன் பொன்னுயிரும் பாதியிலே போகும்
– அனாதியன்