இருள் சூழ்ந்த முகமாலை முன்னரண்களிற்குள்ளால் நாங்கள் நகர்ந்து கொண்டிருந்தோம். நகர்வகழியின் திருப்பங்கள் வளைவுகள் எங்கிருக்கின்றன என்பதை ஊகித்து விட முடியாமல் அதன் புருவங்களுடன் மோதிக் கொண்டோம்.
இருள் சூழ்ந்த பொழுதுகளில் நகர்வகழிக்குள்ளால் நகர்ந்து கொள்வது என்பது எங்களிற்கு களமுனையின் கடினமான பணிகளில் ஒன்று போல இருந்தது. சுடருடன் கதைத்தபடி சென்று கொண்டிருக்க எங்களிற்கு எதிரே யாரே வருவது போல சத்தம் கேட்க சுடர் ஏதோ ஒரு வேற்று நாட்டு மொழியில் கதைப்பவன் போல கதையைத்தொடுக்க அதன் பதிலும் அப்படியே கிடைத்தது.
சரி சரி வாங்கோடாப்பா என்றபடி சுடர் அந்தப் போராளிகளைக் கூப்பிட அவர்களும் வந்து எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். களமுனையில் இருள் சூழ்ந்த பொழுதை நாங்கள் இப்போது தான் முதலாவதாக எதிர்கொள்கிறோம்.
ஒவ்வொரு காலடிகளையும் வைக்கின்ற போதும் மனதில் ஒவ்வொரு புதிய எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டன. பகற் பொழுது மறைந்து இருள் கவ்விக் கொண்டதும் எங்களிற்கு சினைப்பர் பற்றிய அச்ச உணர்வு மறைந்து கொண்டது. களத்தில் இரவுப் பொழுது அதிகமாகிக் கொண்டிருக்க எங்களிற்குக் காதுகள் கூர்மையாகிக் கொண்டிருந்தன.
எங்காவது சிறிய சரசரப்புச் சத்தம் வருகிறதா? என்பதை உன்னிப்பாக காதுகளால் அவதானித்துக் கொண்டிருந்தோம். “ஆமிக்காறங்கள் வாறதென்டால் சத்தங்கள் எப்பிடிக்கேக்கும்” என்று சுடரோனிடம் கேட்டுக்கொண்டோம். “அவன் நகர்ந்து வந்தால் இஞ்ச எங்களுக்குச் சத்தம் வடிவாய்த் தெரியும்” என்றான்.
“நாங்கள் இயக்கத்துக்கு வந்து லையினுக்கு வந்த புதுசில கொஞ்ச நாள் இரவு நித்திரையே வராது. சென்றீல நிக்கேக்க எங்கன்ட லையினுக்கு முன்னுக்கு சரசரப்புச் சத்தம் கேட்டால் காணும் ஆமி போல தான் இருக்குது எண்டு எழும்பி ஒரே அவதானிப்புத்தான். எங்களின்ர நித்திரையையும் குழப்பி எழும்பி நல்லாய் அவதனிச்சால் அங்க ஒண்டும் இருக்காது பிறகு நித்திரை கொள்ளுறது.”என்று தங்கள் களமுனையின் ஆரம்பக் காலங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“அப்ப ஒரு நாளுமே இரவு நித்திரை கொண்டிருக்க மாட்டீங்களே” என்று நாங்கள் சொல்லச் சுடர் தொடர்ந்தான். “ஓ… அப்பிடியும் இப்பிடியும் தான்”என்றான். இப்ப பெடியளிட்டப் போய்ப் பாருங்கோ பாப்பம். அவங்கள் இப்ப பண்டி ஓடேக்க எப்பிடிச் சரசரப்புச் சத்தம் வரும.; ஆமிக்காறன் வரேக்க எப்பிடிச் சரசரப்புச் சத்தம் வரும் எண்டு எல்லாம் அத்துப்படியாய்ச் சொல்லுவாங்கள்.
என்று நீண்ட விளக்கம் ஒன்றைத் தந்திருந்தான். அப்ப பண்டியளும் உங்களுக்கு இடக்கிட அலேட் பண்ணியிருக்கும் என்ன?” என்றோம். “வந்த புதிசில அப்பிடித்தான் அண்ண சில நேரம் பண்டி வெருண்டடிச்சு எங்களின்ர பொயின்ருக்கு பக்கத்தால எல்லாம் ஓடும் அப்ப திடீர் திடீரெண்டு எழும்புவம் என்றான்.
“இப்ப பண்டி வந்து பொயின்ர இடிச்சாலும் இது பண்டி எடாப்பா எண்டு பெடியள் சொல்லிப்போட்டுச் சிம்பிளாய் இருப்பாங்கள்” என்றான். “ஓ… அப்பிடி எண்டால் நீங்கள் பண்டி எண்டு நினைச்சுக் கொண்டிருக்க ஆமிக்காறன் வருவான் அப்பேக்க தான் தெரியும்” என்றோம். நாங்கள் சொல்லி முடிப்பதற்கிடையில் “சீ… பண்டி இல்ல இப்ப எல்லாச் சத்தத்;தையும் பெடியள் வடிவாய்ச் சொல்லுவாங்கள்” என்றான்.
இப்பிடி ஆமிக்காறன் வரரேக்க சத்தத்தை வைச்சே பெடியள் அடிச்சிருக்கிறாங்கள்” என்றான் மிகவும் உறுதியாக. களத்தில் ‘செல்’ சத்தத்தை வைத்துப் போராளிகள் ஒவ்வொரு ‘செல்’லையும் எப்படி இனங்காண்கிறார்களோ? அதனைப் போல இரவில் கேட்கின்ற சரசரப்புச ;சத்தங்களையும் வைச்சு இது ஆமியினுடையது என்றும் இது பண்டியினுடையது என்றும் மிகவும் நுட்பமாகப் பிரித்துக் கொள்கிறார்கள்.
போராளிகளின் இந்த உணர்திறனை களத்தின் நேரடியான சூழலுக்குள் இருந்து பார்க்கின்ற போது எங்களிற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அந்த இருள் சூழ்ந்;த பொழுதுகளிற்குள்ளால் எங்களைக் சுட்டிக்கொண்டு செல்கின்ற சுடரோன் எங்களைவிட்டுச் சற்றுத் தூரம் முன்னுக்குச் சென்றுவிட எங்களிற்கு சுடரோணைப் பார்க்கவும் ஆமி போலவே தெரிந்தது. களத்தின் எல்லாச் சத்தங்களும் எங்களிற்கு ஆமியின் அசைவுச் சத்தம் போலவே தெரிந்தது.
சுடர் என்ன கடும் வேகமாய்ப் போறியள் என்று நாங்கள் கேட்க தனது வேகத்தைச் சற்றுக் குறைத்தக் கொண்டான். இருளால் நிறைந்திருக்கும் போராளிகளின் காவல் நிலைகளில் இருந்து ஆக்கிரமிப்புப் படைகளின் பக்கம் எங்கள் பார்வையைச் செலுத்திக்கொண்டோம். திருவிழக்கோலம் கொண்டு ஒளிவீசிக் கொண்டிருந்தது எதிரிகளின் காவல்வேலி. இருள் மண்டிய பகுதிக்குள் இருந்து அந்தப் பெரும் ஒளியைப் பார்க்க எங்களிற்கு திகைப்பாகவே இருந்தது.
சுடரிடம் “என்னப்பா அவன் இப்பிடி வெளிச்சம் போட்டிருக்கிறான்”என்றோம். “அவன் இப்பிடித்தான் நெடுகலும் கோயில் திருவிழா மாதிரித்தான் லையிற்றுகள் எல்லாம் போட்டிருப்பான்” என்று இது தான் இஞ்ச வழமை என்பது போலச் சொல்லி முடித்தான். “சூ… என்ன லையிற் வெளிச்சம்” என்று நாங்கள் சொல்லி முடிக்க நாங்கள் இறங்கிப்போடுவம் எண்டு அவனுக்குச் சரியான பயம் அண்ண அது தான் இப்பிடி லையிற் போட்டிருக்கிறான்” என்றான் சுடர். நாங்கள் வெளிச்சம் இல்லாமல் தான் இருக்கிறம் ஏலும் எண்டால் வந்து பாக்கட்டும் பாப்பம்” என்று வீராப்புடன் பேசிக்கொண்டான் சுடர்.
போராளிகளிற்கு களத்தின் இரவுப் பொழுதும் பகல் பொழுது போல ஒன்றாகவே இருக்கிறது என்பதை அவர்களின் செயற்பாடுகளில் இருந்து கண்டு கொண்டோம். இப்படியே களமுனை நகர்வகழிக்குள்ளால் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கத் திடீரென்று எதிரிகளின் ஆக்கிரமிப்புப் பகுதிகளிற்குள் பெரும் வெளிச்சங்கள் திடீர் திடீரென்று அடிக்க சுடரோன் “அண்ண கடுமையான செல் அடிக்கிறான் உதுகள் எல்லாம் எங்கன்ட பக்கம் தான் வருகுது அப்பிடியே மூவிங்ரேஞ்சுக்குள்ள இருங்கோ” என்றான். சுடர் சொல்லி நாங்கள் நகர்வகழிக்குள் அப்படியே இருக்கவும் இராணுவத்தின் எறிகணை வாய்கள் துப்பிவிட்ட கணக்கற்ற எறிகணைகள் போராளிகளின் பகுதிகளிற்குள் எங்களையும் தாண்டி கூவியபடி போய் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன.
ஒன்று இரண்டு தடவைகள் என்று தொடர்ந்த எறிகணைகள் கணக்கற்று அந்தப் பகுதிகளையே அதிரவைத்துக் கொண்டிருந்தன. முதலில் கூவல் ஓசையுடன் எங்களைத்தாண்டிச் சென்ற எறிகணைகள் இப்போது எங்களிற்கும் மிகவும் அருகில் வந்து வீழ்ந்து வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. எறிகணைகள் எங்களிற்கு அருகில் வந்து வீழ்ந்து கொண்டிருக்க “அண்ண இனி இதுக்குள்ள இருக்கிறது ஆபத்து குனிஞ்சு கொண்டு ஓடிவாங்கோ அங்கால இருக்கிற பொயின்ருக்குள்ள போவம் என்றான் சுடர்.
அந்தப் போராளியுடன் கூடவே நாங்களும் அருகில் இருந்த காப்பரணுக்குள் சென்று கொண்டோம். அந்தக் களமுனையே எதிரியின் எறிகணைகளால் அதிர்ந்து கொண்டிருந்தது. அனைத்துத் தொலைத் தொடர்புக்கருவிகளிலும் அலைவரிசைகள் மிகவும் நெருக்கடிமிக்கதாக இருந்தன. கட்டளைப் பணியகத்தில் இருந்து “உங்கன்ட பக்கம் ஏதும் சிக்கலா” என்றவாறு கேட்க வோக்கியை வைத்திருந்த போராளி “எங்களின்ர பக்கம் சிக்கலில்லை” என்றவாறு இராணுவ பாசையில் தகவலை பரிமாறிக்கொண்டான். “ஆக்களைவிட்டுக் கிளியர் பண்ணி;ப்பார்”என்று கட்டளையகத்தில் இருந்து அறிவித்தல் கிடைக்க வோக்கியுடன் நின்ற போராளி “சிக்கலில்லை அண்ண நான் எல்லாம் கிளிய பண்ணிப்போட்டுத்தான் நிக்கிறன்” என்றான். தகவல் பரிமாற்றங்கள் நெருக்கமாகவே இருந்தன. எதிரியின் எறிகணை குறைவதாய்த் தெரியவில்லை.
இன்னும் அதிகரித்துக் கொண்டேயிருந்தன. எங்கும் பரவலாக தாக்குதல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. எறிகணைகளால் மட்டும் தாக்கிய எதிரி இப்போது துப்பாக்கிகளாலும் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டான். முகமாலைக்கும் கிளாலிக்கும் இடைப்பட்ட பகுதி இராணுவத்தின் தாக்குதல் இலக்காக இருந்திருக்க வேண்டும். அந்தப் பகுதியை நோக்கி கடுமையான எறிகணைகளுடன் துப்பாக்கி ரவைகளும் சல்லடை போட்டுக்கொண்டிருந்தன. எங்களிற்குப் புதிய அனுபவம் என்பதால் நாங்கள் புதினம் பார்ப்பது போல எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அப்போது போராளி ஒருவன் என்ன “மச்சான்; கனேயன் எங்களுக்கு அதிஸ்ரமில்லப் போல கிடக்குது.” என்றான். “சீ… அதுதான்ராப்பா நல்ல குடுவை ஒன்டு குடுப்பம் எண்டால் சரிவராது போல கிடக்;குது” என்றார்கள் அந்தக்காப்பரணில் இருந்த போராளிகள். அந்தப் போராளியின் ஆதங்கம் நிறைந்த உரையாடல் எங்களிற்கும் ஒரு மனக் கவலையை ஏற்படுத்தியிருந்தது. துப்பாக்கிச் சத்தங்கள் போராளிகளின் பக்கம் இருந்து எதிரிகளின் பக்கங்களை நோக்கிச் செல்வது போல எங்களிற்கு இருந்தது. “ரவுண்ஸ் எங்களின்ர பெடியளோ அடிக்கிறாங்கள்” என்று கனேயனைப் பார்த்துக் கேட்டோம். எங்களைப்பார்த்த கனேயன் “எங்களின்ர பெடியள் அவன் நல்லாய்க்கிட்ட வந்தால் தான் அடிப்பாங்கள் அண்ண. இது அவன் தான் பி.கே போட்டு அடிக்கிறான்” என்றான்.
“;அவன் ‘செல்’அடிக்க பெடியள் ரவுண்ஸ் அடிக்கிறாங்கள் எண்டு நினைச்சம்” என்று கூறிக்கொள்ள. எதிரியின் எறிகணைகளாலும் கனரக ஆயுதங்களாலும் அதிர்ந்து கொண்டிருக்கும் அந்தக் களத்தில் எங்களின் கதையைக் கேட்டதும் போராளிகள் சிரித்துக்கொண்டார்கள். “நாங்கள் ஆமியக் கண்ணால கண்டால் மட்டும் தான் அடிப்பம். இல்லாட்டில் ஒரு ரவுண்ஸ் கூட அடிக்கமாட்டம்” என்றார்கள். “இது அவன் சும்மா எங்களை ஒருக்கால் வெருட்டிப்பாப்பம் எண்டு தான் அடிக்கிறான். அவனுக்குத் தெரியாது நாங்கள் எப்பிடி இருக்கிறம் எண்டு அதால தான் இப்பிடிச் சும்மா அடிக்கிறான்” என்றார்கள்.
அப்போது திடீரென்று கனேயன் “அண்ண அங்க எங்கன்ட வேலியை எரிச்சுப்போட்டான் என்று கூற சுடரோன் இடைக்குள் புகுந்து “சிமோக் அடிச்சுத்தான் மறைப்பு வேலிய எரிச்சிருக்கிறான்” என்றான். நாங்கள் நிற்கின்ற முகமாலைக் காப்பரணில் இருந்து சில காப்பரண்கள் கடந்து இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. போராளிகளின் முன்னரங்கக் காவல் நிலைகளிற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மறைப்பு வேலி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தொலைத் தொடர்புக்கருவியில் கட்டளைப் பணிமனைக்கு சம்பவம் அனுப்பப்படுகிறது. இப்போதும் தாக்குதல்களை எதிரிகள் நிறுத்திவிடவில்லை. இலக்கற்ற தாக்குதல்களை ஆமிக்காறன் தொடர்ந்து கெண்டேயிருந்தான்.
எதிரியின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்த பகுதிக்குரிய பொறுப்பாளருடன் தளபதி ஜெரி தொலைத்தொடர்புக் கருவியில் தொடர்பு கொண்டு நிலைமைகள் தொடர்பாக கதைத்துவிட்டு “வேகமாய்க் கிளியபண்ணிச் சொல்லுங்கோ மற்றதால ஒருக்கால் குடுப்பம்”என்றார். தளபதி ஜெரி அவர்களின் பேச்சைக்கேட்ட போராளிகள் “அவன் கொஞ்சம் முன்னுக்கு வந்தான் எண்டால் அந்த மாதிரி” “கடவுளே கொஞ்சம் முன்னுக்கு வந்தானெண்டால்” என்ற வேண்டுதல்கள் போராளிகளின் வாய்களிற்குள் இருந்து வந்து கொண்டிருப்பது அந்த எறிகணை அதிர்வுகளிற்குள்ளும் எங்களின் காதுகளிற்குள் வந்து மோதிக்கொண்டன. ஒரு கட்டத்தில் முதல் தடைவை கேட்ட அதே குரல் தொலைத்தொடர்புக் ;கருவியில் மீண்டும் ஒலித்தது. போராளிகள் தங்களிற்குள் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டு அமைதியாக தொலைத் தொடர்புக்கருவியின் அருகில் காதுகளை வைப்பது போல நின்று கொண்டிருந்தார்கள்.
“என்ன மாதிரி எதும் இருக்கா” அதற்கான பதில் எங்களால் புரிந்து கொள்ள முடியாத பரிமாற்றத்தில் சொல்ல மீண்டும் தளபதி ஜெரி அவர்களின் குரல் மீண்டும் ஒலித்தது. “குறிப்பிட்ட போராளிகளின் குறியீட்டு இலக்கங்களைக் கூறி ஆக்களை வைச்சு அதுகளை ஒழுங்குபடுத்துங்கோ” என்றவர் “அவருக்கு சேட்டை கூடிப்போச்சுது நாங்கள் சும்மா தானே இருந்த நாங்கள் இன்டைக்கு எல்லாத்துக்கும் சேத்துக்குடுக்கலாம் கெதியாய் ஒழுங்குபடுத்துங்கோ. சரிதானே நான் இஞ்சால ஒழுங்கு படுத்திறன்” என்று சொல்லி முடித்துவிட போராளிகள் மீண்டும் தீவிரமாக எதிரியின் நிலைகளை அவதானித்தார்கள். அவ்வளவு தான் அதிர்ந்து கொண்டிருந்த அந்தக் களம் சட்டென்று குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாகிக் கொண்டது.
“ஜெரி அண்ணயின்ர செற்றப்போட அவன் பயந்திட்டான்” என்றான் கனேயன். ஏங்களோட வந்து சண்டை பிடிக்கப் பயம் பேந்து சும்மா வந்து சொறியிறது. பார் சும்மா பொழிஞ்;சு கொட்டிப்போட்டுக்கிடக்கிறான்.”என்றார்கள் போராளிகள். உயிர் குடிக்கும் முகமாலைக் களத்தில் வீறாப்புடன் நிற்கும் போராளிகளின் உணர்வுகளுடன் சங்கமித்த எங்களின் முதலாவது போர்முகப் பயணத்தை முடித்துக் கொண்டு நாங்கள் முகமாலை முன்னரண் போராளிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம்.
தொடரும்…..
மூலம் – தாரகம் இணைய இதழ்