வடதமிழீழம், அதிகாரம் செலுத்துபவன் தலைவன் அல்ல. பணி செய்பவனே உண்மையான தலைவன் என்று புனர்வாழ்வு மீள்குடியேற்ற வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராகப் பதவியேற்ற காதர் மஸ்தானை வரவேற்கும் நிகழ்வு நேற்று வவுனியாவில் நடைபெற்றது.
வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் பொது அமைப்புகள் இதனை ஏற்பாடு செய்திருந்தது. குருமன்காடு கலைமகள் மைதானத்தில் வர்த்தக சங்க செயலாளர் கோ. சிறிஸ்கந்தராஜா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் சர்வ மதத்தினர், அரச தலைவரின் இணைப்பு செயலர் அபய குணசேகர, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம. தியாகராஜா, அரச தலைவரின் வன்னி மாவட்ட இணைப்பாளர் வாசல, வவுனியா மருத்துவனைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் கருணாதாச, தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் வே. மகேந்திரன், வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி, அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கண்டி வீதியில் உள்ள சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இருந்து திறந்த வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பிரதி அமைச்சர் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டனர். நகரப் பெரிய பள்ளிவாசலிலும் வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பின்னர் குருமன்காட்டுச் சந்தியில் இருந்து கலைமகள் விளையாட்டு மைதானம்வரை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-:
மீள்குடியேற்றச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சரியான பிரதி அமைச்சு இல்லாத காரணத்தாலேயே அரச தலைவர் என்னை நியமித்தார். ஊழல் இல்லாத செயற்றிறன் மிக்க வடக்குக்கான அமைச்சராக அதைச் செயற்படுத்தவேண்டும்.
இந்த அமைச்சனூடாக ஒரு நேர்மையான சூழ் நிலையை ஏற்படுத்துவதற்கு உங் களுடைய ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றேன்.
அதிகாரம் செலுத்துபவன் தலைவன் அல்ல பணி செய்பவனே உண்மையான தலைவன் என்று சான்றோர்கள் கூறி இருக்கிறார்கள் அந்த ஒரு நிலையை நாங்கள் ஏற்படுத்தவேண்டும். அரசியல் வாதிகளைக் கண்டு பயப்படும் நிலையை மாற்றவேண்டும் – என்றார்.