பல தசாப்தங்களுக்கு பின்பு தமிழர் ஒருவருக்கு கிடைக்கவிருந்த பிரதிசபாநாயகர் என்ற வரலாற்றின் உயரிய அந்தஸ்து தனி நபர்களின் சூழ்ச்சியினாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரி வஞ்சனை போக்கினாலும் வரலாற்றில் மீணடும் ஒரு கரும்புள்ளியாக பதிவாகியிருக்கிறது என்று தெரிவித்த பிரதி விவசாய அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பிலிங்கர சுதந்திரக்கட்சியின் அங்கஜன் இராமநாதன்; இருந்தாலும் இன்று பிரதியமைச்சராக மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஆயுள் காலம் இன்னும் 16 மாதங்கள் எனச் சொல்லப்பட்டு வரும் நிலையில் பிரதி விவசாய அமைச்சைக்கொண்டு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்……..
முடியாது என்ற வார்த்தைப் பிரயோகம் முடியும் என முயன்று பார்ப்பது எம்மை வரலாற்றில் இடம்பெற செய்யும்.கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வாறானதே.விவசாயம் சார்ந்த பிரதேசமாகவும் பிரதி அமைச்சராகவும் இருப்பது சிறந்ததொரு பாலமாக பலமாக இருக்கும்.அதேவேளை மாதங்கள் என்பதல்ல குறுகிய நாட்களில் இடம் பெறும் பிரயோக மாற்றங்களே முக்கியமானது.
அனைத்து அந்தஸ்துக்களையும் உடைய எனது பிரதி அமைச்சின் ஊடான திணைக்கள வளங்களையும்,அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து விவசாய அமைச்சு மக்களின் ஒருமித்த ஒத்தாசையுடன் யுத்தத்தின் பின்னரான விவசாயத் துறையை வளப்படுத்துவதே.
மேலும் விவசாயப் போதனாசிரியர்களை இணைத்தல்,நவீன முறைமையில் அமைந்த உற்பத்திகளை கையாளுதல்,வினைதிறன் கூடிய உற்பத்தி விதைகளை வழங்குதல், விவசாயிகள் நடைமுறைமையில் கூர்ப்படைந்து கொள்வதற்கு ஆராய்ச்சியாளர்களையும் அனுபவரீதியிலான விவசாயிகளையும் ஒன்றிணைக்கும் செயன்முறையை ஒருமுகப்படுத்தல்.
இவை எமது மரபுரீதியிலான விவசாய நடைமுறைமைகளைப் பாதுகாப்பதோடு இளைய தலைமுறையின் இயற்கையோடு ஒன்றிணைந்த செய்கைக்கு வழிசமைக்கும் எனவும் நம்புகின்றேன்
பிரதி சபாநாயகர் தெரிவின்போது கூட்டமைப்பு எவ்வாறு செயற்பட்டது என எண்ணுகின்றீர்கள்…………….
சுதந்திரக் கட்சி சார்பாக பிரதி சபாநாயகராகப் பரிந்துரை செய்ததன் பின்பு தனி நபர்களின் சுயநலப் பிரதிபலிப்புக்களாகவே இடம்பெற்றிருந்தது.நாடாளுமன்றில் கௌரவ பிரதமர் அவர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வருவதை நீங்கள் தானே தெரிவித்திருந்ததாக கௌரவ எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனை நோக்கி பிரதமரினால் நாடாளுமன்றில் பதிலளிக்கப்பட்ட பொழுது தசாப்த கனவை, கூட்டமைப்பினரின் நிசப்தத்தின் மூலம் மக்களுக்கு நிதர்சனமாகியது. பல அதிர்வுகளையும் மக்களிடத்தே உலகளவில் ஏற்படுத்தியிருந்தது.
பல தசாப்தங்களின் பின்பு தமிழர் ஒருவருக்குக் கிடைக்க விருந்த வரலாற்று உயரிய அந்தஸ்து தனி நபர்களின் சூழ்ச்சியினால் கூட்டமைப்பினரின் வஞ்சனையாகப் பின்பு வரலாற்றில் மீண்டும் ஒரு கரும்புள்ளியாக பதிவாகியிருந்தது.ஆனாலும் பிரதி சபாநாயகராக வரலாற்றில் இடம் பெற்றிருப்பேனே தவிர இன்று பிரதி அமைச்சராக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளேன்.
அமைச்சுப் பதவி உட்பட ஏனைய பதவிகளிலிருந்து இராஜிநாமா செய்துள்ள 16 பேர் மீண்டும் சுதந்திரக்கட்சி ஊடாக ஜனாதிபதிக்குப் பலம் சேர்ப்பார்கள் என எண்ணுகின்றீர்களா…………
சுதந்திரக் கட்சியின் உறுப்பிரிமையோடு இருப்பவர்கள் நிச்சயமாக பலம் சேர்ப்பார்கள்.
இலங்கையின் இரு துருவங்களாக ஆட்சி பீடங்களை கைப்பற்றிய கட்சிகளே ஒன்றிணைந்து நல்லாட்சி அரசை நிறுவினோம்.2020 இல் சுதந்திரக்கட்சி அரசொன்றை அமைப்போம் எனக் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார். மூவின மக்களின் பேராதரவுடன் மீண்டும் நீலக்கரங்களின் கைகளுக்கு மக்கள், ஆட்சி அதிகார ஆணையை நிச்சயம் வழங்குவார்கள்.
அரசாங்கத்திலுள்ள இருகட்சிகளும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் எதிர்வரும் தேர்தலை உங்கள் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளும்……………..
பலமான முறைமையிலே எதிர்நோக்கக் காத்திருக்கின்றேன்.இந்த நாட்டில் பல்வேறு கட்சிகள் சார்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் வகிக்கின்றார்கள்.கட்சி சார்ந்தும்,தனிப்பட்ட கருத்துக்களையும் பதிவுசெய்கின்றார்கள்.இது ஜனநாயக நீரோட்டத்தின் எடுத்துக்காட்டு.புத்தாக்கமான கருத்துக்களை அங்கீகரிக்க வேண்டும். கருத்துருவாக்கம் பெற்றால் தான் எமது செயல்கள் உருப்பெறும்.எனவே இவ்வாறான கருத்தாடல் விமர்சனங்களை அடுத்த தேர்தலோடு தொடர்புபடுத்தி பார்க்கத்தேவையில்லை என்பதே எனது கருத்தாகும்.
யாழ் மாவட்டம் உட்பட வடகிழக்கு பகுதியில் வேலையில்லாப் பிரச்சினை காணப்படும் நிலையில் பிரதி அமைச்சர் என்ற நிலையில் எவ்வாறு செயட் படவுள்ளீர்கள்………………
இளைஞர்கள் விவசாயத்தையும் விரும்பி தமது தொழிலாக மேற்கொள்ள கூடிய வழிவகைகளை விவசாயத் துறை ஊடாக ஏற்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகின்றேன். வடகிழக்கை பொறுத்தளவில் இளைஞர் யுவதிகளுக்கு அரசதுறை,தனியார் துறை,சுயதொழில் போன்றவற்றில் ஏராளமான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.அரச துறை தான் உகந்தது என்ற சிந்தனை மாற்றம் பெற வேண்டும்.அரச துறையில் இருந்தால் தான் வாழ்வில் நிறைவை தரும் என்பதல்ல .
எனது அமைச்சுடன் தொடர்புபட்ட ஒன்று தான் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது. அதிக இலாபத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இதன் அடிப்படையிலே எனது முழு ஈடுபாடும் இளைஞர்களையும் மக்களையும் மையப்படுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுப்பேன்.
எதிர்வரும் வடமாகாண தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும்……………..
கடந்தகால வரலாறுகளை மக்கள் உணர்துள்ளார்கள்.இரண்டாவது மாகாண சபை கரடு முரடாக இல்லாதவாறு மக்கள் தீர்மானிப்பார்கள்.
கடந்த கால தேர்தல் பெறுபேறுகள் மிகத் தெளிவாகக் கோட்பாட்டைக் காட்டுகின்றது.கட்சி பேதமின்றி உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுபவர்களை தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் இருக்கின்றார்கள்.
நாம் பிரதிநிதித்துவம் வகிக்கும் இடத்தில் நமக்கான பாதைகளை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பது நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல்முடிவுகள் நன்றாகவே புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றது.பல பிரதேச சபைகளின் ஆட்சியை அனுமானிக்கும் அளவுக்கு மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றிருந்தது.
மாகாண சபை தேர்தலிலும் ஆட்சியை தீர்மானிப்பவர்களாக எமது சக்தி எடுத்தியம்பப்படும் என்பதில் ஐயமில்லை.எம்மீதான மக்களின் நம்பிக்கைகள் அதிகரிக்கும் போது மக்களின் ஆணைகளும் அபரீதமாகப் பிரதிபலிக்கும்.
அன்றும் இன்றும் நாம் வலியுறுத்துவது எமது பிரதிநிதித்துவம் மக்களின் நலன்சார்ந்ததாகவும் எதிர்கால இளைய சந்ததியினரின் இலங்கையர் என்ற உண்மையான உணர்வலைகளுக்கு உயிரோட்டம் வழங்கவே.அவை உண்மையான புரிதல்களை ஏற்படுத்துவதோடு அபிவிருத்தி மற்றும் பொருளாதார இலக்குகள் சமஉரிமைகளுடன் வாழ்வதற்கான வேற்றுமைகளைக் களைவதோடு நமது பாரிய மாற்ற சிந்தனைக்கான களம் அங்கிருந்து வலுப்பெறும்.
வடக்கில் இராணுவம் வசமுள்ள விவசாயக்காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் எவ்வாறு செயட்படவுள்ளீர்கள்………..
2015 ஆம் ஆண்டிலிருந்து காணி விடுவிப்பின் வரைவு சுருங்கிக்கொண்டே செல்வது கண்கூடு.
எனது வகிபாகம் மக்கள் சார்ந்து முன்னிறுத்தப்படும் வேளை,குறிப்பாக விவசாய காணிகள் விடுவிக்கப்பட்டு எமது விவசாய விளைதிறன் சார் உற்பத்திகளை பெருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.எனவே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
நான் மீள்குடியேற்றப் பகுதியைச் சேர்ந்தவன்.மக்களின் மீள் குடியேற்றம் கருதியே எனது அரசியல் பிரவேசம் அமைந்திருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.விவசாய பிரதி அமைச்சராக தனியே மீள் கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதற்காக எனது அமைச்சு சார்ந்தும்,அதற்கும் அப்பால் ஏனைய அமைச்சுக்களுடன் மையப்படுத்தி எனது கடமைகளை வழங்கவேண்டிய வகிபாக தன்மை பொருந்தியதாக இந்தக் கேள்வி அமைந்துள்ளது.
எனது தேசிய நீரோட்ட தன்மையின் காரணத்தையும் மக்கள் இதனூடாக புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.எமது உரிமைகளையும்,பொருளாதார அபிவிருத்தி இலக்குகளையும் வென்றெடுப்பதற்கு முகவர்கள் இன்றி மக்கள் பிரதிநிதிகளினால் அவற்றை சாத்தியமாக்குவோம்.
மக்களின் மனதில் உள்ள மாற்றங்கள் நாளைய சந்ததியினரை நோக்கி பயணிக்கின்ற வேளையில் அதற்கான ஜனநாயக அடிப்படைக் கட்டமைப்புக்களை மக்கள் புரிந்து புத்தி சாதுரியமாகச் செயற்படுகிறார்கள்.
இலங்கை அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தவே முடியாது என்பது தற்காலத்தில் பொருத்தமற்ற கோட்பாடு.அரசியல் ரீதியாகப் பரிணாமம் பெற்ற ஆண்டாக 2015ஆம் ஆண்டு காலப்பகுதியின் வரலாறுகள் குறித்து நாம் உற்று நோக்க வேண்டும்.
தமிழ் மக்களின் கொள்கைகளை தாம் முன்னெடுப்பதாக தெரிவித்து தமது நலன் சார்ந்த கொள்கைகளையே முன்னெடுத்து வருகின்றனர். 2020 இல் உலகிற்கு முன்னுதாரணமாக இலங்கை சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் அமையும் அவ்வேளை, சமத்துவ பாலத்திற்காகப் பயணித்த எமது மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பலமாக சமமாக பயணிப்பதற்கான பிணைப்பாக பயன்படுத்திக்கொள்வோம் என உறுதியாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.