அரச சேவையில் இருந்து கொண்டு தமது கடமைகளை சரியாக நிறைவேற்றாத அதிகாரிகளுக்கு எதிராக நீதி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில அரச அதிகாரிகள் கடைநிலை ஊழியர் தொடக்கம் கொள்கை வகுக்கும் அதிகாரிகள் வரை உள்ள அனைவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அரச கடமைகளை சரியாகச் செய்வதில்லை. இதில் காவல்துறையினர் ஒரு படி மேல்.
இவ்வாறானவர்களின் அசமந்தப் போக்கே இன்று நாம் அனைவரும் எதிர் கொள்ளும் பாரிய நெருக்கடிகளுக்கு காரணம். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
திருகோணமலையின் எல்லைக்கிராமம் ஒன்றுக்கு பணி நிமிர்த்தம் கடந்த வாரம் சென்றிருந்தேன். அங்கு எனது நணபர் ஒரு பெண்ணைக்காட்டி அண்ணை இந்த பெண்ணை அவதானித்துக் கொள்ளுங்கோ இவாவைப்பற்றி பின்னர் சொல்கிறேன் என்றார். நானும் அந்தப் பெண்ணை அவதானித்து விட்டு இருந்து விட்டேன். சற்று நேரத்தில் நண்பர் சொன்னார் அண்ண நான் காட்டின அந்த பெண் சரியான குடிகாரி. புருசன் வேலைக்குப் போய் வீட்டுக்கு வரும் போது அரைப் போத்தல் சாராயம் வேண்டிக்கொண்டு தான் வரவேணும் இல்லாட்டில் புருசன் வீட்ட வந்ததும் வீட்டில் இருக்கிற சட்டிப்பானைகள் எல்லாம் வெளியே வந்து விழும் போதாக் குறைக்கு புருசனுக்கு அடியும் விழும். அது தான் அவாவை பார்க்கச் சொன்னேன் என்றார்.
உடனே நான் கேட்டேன் இவர்களுக்கு பிள்ளைகள் இல்லையா என்றேன். அதற்கு நண்பர் சொன்னார் இரண்டு பிள்ளைகள் இருக்குதுகள். மூத்தது பெண்பிள்ளை,மற்றையது ஆண்பிள்ளை. அப்படி என்றால் பிள்ளைகள் படிக்கிறார்களா? என்றேன். நண்பர் சொன்னார் அதுகள் எங்கை அண்ண படிக்கிறது தகப்பன் உழைக்கிற காசு இரண்டு பேருக்கும் குடிக்கவே காணாது. தகப்பன் கூலி வேலைக்குத்தான் போவான் அதுவும் தொடர்ந்து போறதில்லை. அப்ப பிள்ளைகளின் சாப்பாடு என்றேன். அதுகள் இப்படி அங்கை இஞ்ச போய் ஆற்றையும் வீடுகளில சாப்பிடுங்கள். எப்போதாவது வீட்டில் சமையல் நடக்கும் என்றார்.
அப்ப மூத்த பிள்ளைக்கு இப்ப எத்தினை வயது என்றேன். அந்தப்பிள்ளைக்கு இப்ப 13,14 இருக்கும். அதுவும் பெரிய பிள்ளையாகிட்டுது. இந்த மனிசிக்கு எங்கட ஊர் சனங்கள் எல்லாம் சொல்லியும் கேக்குதில்ல. பெண்பிள்ளை சின்னவளா இருக்கேக்க குடிச்சாலும் பறவாயில்ல. இப்ப அந்த குமர்ப்பிள்ளையையும் வைத்துக்கொண்டு குடிக்கிறாள். என்ன செய்யதெண்டு தெரியாமல் இருக்கு என்றார்.
அப்போது நான் சொன்னேன் அந்த குடிக்கிற மனிசியும் அவாட புருசனும் எப்படியும் போகட்டும் ஆனால் அந்தப்பிள்ளைகளை பாதுகாக்க வேணும். அதுகளுக்கு படிப்பிக்க வேணும். இங்க உங்கட ஊருக்கு யார் சமூக சேவை உத்தியோகத்தர்,சிறுவர் நன் நடத்தை அதிகாரி என்று கேட்டேன் அதற்கு நண்பர் கேட்டார் ஏன் சமூக சேவை உத்தியோகத்தருக்கும் இதுக்கும் என்ன தொடர்பு என்றார். அப்போது நான் சொன்னேன் அவர்கள் தான் இப்படியான விடயங்களை கவனிக்க வேண்டும். இப்படியான பிள்ளைகளை ஏதாவது சிறுவர் இல்லத்தில் வைத்து பராமரிப்பதுடன் மதுவுக்கு அடிமையாகியுள்ள தாய் தந்தையரை அதிலிருந்து விடுபட வைப்பதற்கும் அவர்களுக்கு அனுமதி உண்டு ஏன் அவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை பார்ப்பதில்லையா என்றேன். அதற்கு நண்பர் சொன்னார் அவங்கள் எங்கை அண்ண ஊருக்க வந்தால் தானே இதெல்லாம் தெரியும். அவங்கள் தானே ஊருக்குள்ள வாரதே இல்ல.
அப்படி என்றால் நீங்களாவது போய் அவர்களிடம் முறையிடலாமே? என்றேன். அதற்கு நண்பர் சொன்னர் நாங்கள் முறையிட்டால் அவங்கள் வரப்போறதில்லை. எங்களைத்தான் குற்றவாளியாப் பார்ப்பாங்கள். எங்களுக்கேன் சோலி எண்டு பார்த்துக்கொண்டிருக்கிறம். இந்தப் பெம்புள் குடிக்க காசில்லாட்டி வீட்டில இருக்கிற உடுப்பு துணிமணிகளைக் கூட விட்டுவைக்காது கொண்டு போய் வித்துப் போட்டு குடிப்பாள். சில வேளை காசு இல்லையெண்டா வேற விசயங்களுக்கும் பொறாள். யாரிட்ட போய் சொல்லுறது என்று சினந்து கொண்டார்.
இப்படித்தன் எங்களுடைய அரச அதிகாரிகள் பெரும்பாலானோரின் செயற்பாடுகள் இருக்கின்றன. உண்மையில் ஒரு இடத்தில் ஏதாவது ஒரு குற்றச்செயல் நடக்கிறது என்றால் அங்கு இருக்கின்ற அசர இயந்திரம் சரியாக செயற்படவில்லை என்றே அர்த்தம். வெளிக்கள உத்தியோகத்தர் பலர் அலுவலகங்களில் தூங்கிக்கிடக்கின்றனர். அப்படி இல்லாவிடின் வெளிக்களப்பணி என்று மேலதிகாரிக்கு கூறிவிட்டு தமது வீட்டுப்பணி செய்கின்றனர். அரச அதிகாரிகள் மக்களை நோக்கி செல்ல வேண்டும் கிராமங்களுக்கு செல்ல வேண்டும் நாள் தோறும் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க வேண்டும் அவ்வாறு இல்லாது போனால் சுழிபுரம் சம்பவம் போன்ற பல சம்பவங்களை தடுக்க முடியாது.