பால்மணமே மாறாத
பச்சிழமைப் பாலகியே!
புன்னகைப்பூத் தூவிநிற்கும்
கண்ணழகுத் தேவதையே!
பதை பதைக்குதம்மா – நீ
பட்டபாடு நினைக்கையிலே!
எதை நினைத்தழுதிருப்பாய்
விட்டு உயிர் போகையிலே!!.
மொட்டவிழ்ந்து மணம் கமழ்ந்த
முற்றத்து மல்லிகையே! – நீ
பட்டெரிந்து போனதற்குக்
காரணம்தான் யாரம்மா?
தொட்டுந்தன் தொண்டையினைத்
திருகியவர் யாரம்மா? – உன்
பட்டழகுக் கண்ணீரைப்
பருகியவர் கூறம்மா!!.
பட்டுமலர் மேனியினைப்
பாடையிட்டார் யாரம்மா!
கட்டியுன்னைக் கிணற்றினிலே
கொட்டி வைத்தார் யாரம்மா!!.
நட்டுவைத்த நெடுமரமாய்
நிழல் தரருவாயென்றிருக்க
பட்ட மரமாக்கியுன்னைப்
தணல் நடுவே போட்டவர் யார்?
கெட்டுப் போன பூமியிலேன்
பிறப்பெடுத்து வந்தனையோ!
கட்டுக் காவல் போனதனால்
உருவெடுத்த நிந்தனையோ!!.
கட்டிவைத்துக் கழுத்தறுக்கக்
கிட்ட யாரும் இல்லையம்மா!
குட்டியுன்னைக் காப்பாற்றக்
கொட்டி மாமனுன் இல்லையம்மா.
விட்டுப்போன வாழ்க்கையினால்
வந்த வினை கொஞ்சமில்லை.
கெட்டுப் போன நாட்டிலின்று
கொலைகளுக்குப் பஞ்சமில்லை.
சுட்டுப் போட்டுச் சுடலையிலே
சாம்பரள்ள வேணுமம்மா – இவரை
கட்டிப் போட்டுச் சாலையிலே
இழுத்துப் போகத்தோணுதம்மா.
சின்னமயில் உன்சிறகை
சிதைத்தவர் யார் சிங்களரோ!
வண்ணக்குயில் குரல்வளையை
மிதித்தவர் யார் முசுலீமோ?
என்னவிலை கொடுத்தாலும்
எம் நிலைதான் மாறிடுமோ ?
எம்மவரே எம்மைக் கொல்லும்
இந்நிலைதான் தீர்ந்திடுமோ??.
– நன்றி –
உன் ஆன்மா அமைதிபெற
இறைஞ்சுகிறோம் அம்மாவே!
– வன்னியூர்- வரன்
26/06/2018