ஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று.
தமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமில்லாமல் அன்பு காட்டுவதே நமது அம்மா.
தனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்துவத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவே இந்த அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் பல உள்ளன.
அந்த வகையில், வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் கொண்டாடிய போது அந்த கொண்டாட்டத்தில் தாய் தெய்வத்தை வணங்குவதையும் ஓர் அங்கமாக கொண்டிருந்தனர்.
அவர்கள் க்ரோனஸின் மனைவி ரேஹாவை தாய் தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். அதே போன்று ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் போது தாய் தெய்வத்தை வணங்குவதையும் அவருக்கு மரியாதை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
இவ்வாறு பண்டைய வரலாற்றின் பின்னணியே அன்னையர் தினம் தோன்றுவதற்கு வித்திட்டது என கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜார்விஸ் என்பவரேயாவார்.
இவர் அமெரிக்காவில் நடந்த யுத்தமொன்றில் பலியாகிய அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து அதற்காகாவே பாடுபட்டு 1904 இல் உயிர்நீத்தார்.
இந்த நிலையில் இவரது மகளான அனா ஜார்விஸ் (Anna Jarvis) தனது தாயின் நினைவாக மே மாதத்தில் ஓர் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு வழிபாட்டினை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.
இருந்தும் இதில் திருப்தியடையாத அவர் அமெரிக்கா முழுவதும் இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.
இந்த கோரிக்கையின் நியாயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த அன்றைய அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ஆம் ஆண்டு தொடக்கம் வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்றைய நாளை விடுமுறை தினமாகவும் அறிவித்தார்.
எமக்கு தூய்மையான அன்பை தரும் அன்னையர்களை மகிழ்விப்பதற்காகவும் அவர்களது மகத்துவத்தையும் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தற்போது அன்னையர் தினம் பரவலாக உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.