இப் பிரபஞ்சத்தில் ஆயிரம் ஆயிரம் அர்ப்பணிபுக்கள்
அத்தனையும் எம் ஈழ புதல்வர்களின் உன்னத அர்ப்பணிப்புக்கு ஈடாகுமா ?
சத்தியத்தோடு விடை பெற்றுச் சென்ற உன்னத அர்ப்பணிப்புக்களின்
உயிர்க் கொடைகள் வெறும் ஊமைகள் ஆக முடியுமா ?
விடுதலை வேட்கைக்காய் வீட்டையே துறந்தீர்
தமிழ் ஈழம் ஒளிபெற திரியாக எரிந்தீர்.
தமிழீழ தாகத்தினை தீர்திட சென்றீர்
தமிழரின் மனங்களில் என்றும் அழியாமல் வாழ்வீர்
ஈழம் பிறப்பதற்காய் எவ்வளவைச் சுமந்தீர்கள்
எதற்கும் சாயாத சரித்திரப் புயல்கள் நீங்கள்
ஈழ மண்ணுக்கு மட்டும் புரியும் உங்கள் வீரம் பற்றி
தம்மை தம் மண்ணுக்கு விதையாக்கி சென்ற வேங்கைகள் இவர்கள் என்று.
எதிரியை கதிகலங்க வைத்த பிஞ்சுகள் இவர்கள்
புலனுக்குத் தெரியாத புனிதர்கள் இவர்கள்
மரணத்தை மகிழ்வோடு அணைத்த சரித்திர புருசர்கள் இவர்கள்
ஈழத்தை காதலித்தவர்கள் அதனுள் தமிழரின் வீரத்தை கலந்தவர்கள்
கயவனைக் கனவிலும் கலங்கவைத்தஎம் காவற் தெய்வங்கள் இவர்கள்.
மண்ணிற்காய் வீழ்ந்த மறவர்கள் நீங்கள்
வீழ்ந்தாலும் மறையாது வாழ்பவர் நீங்கள்
பூமி சுற்றும் வரை அழியாது உங்கள் பெயர்
மறையாது உங்கள் செயல்.
தோட்டாக்கள் துளைத்து உம் உயிர் மட்டும் பிரியலாம்
பெரும் கணைகொண்டு தகர்த்தாலும் உம் வீரம்
அழியாது தியாகம் மறையாது.
கனல் மீது நீங்கள் நடந்ததை பார்த்துத்தான்
எம் உடலில் உர மேற உயிரில் வீரம் கலந்தது.
நீங்கள் விட்ட இறுதி மூச்சுள்ள காற்று பட்ட
எங்கள் தேகம் சிலிர்க்க
நீங்கள் வீழ்ந்த திசைநோக்கி நடக்கின்றோம்
உங்கள் வேட்கையை அடைக்க .
நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன
சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம்
ஆனாலும் எதிரியின் மனதில் இன்னும் இருப்பதும் உங்கள் செயல்
உங்களால் ஏற்பட்ட பயத்தின் பயன்.
“தம் உயிர் தந்து எம் உயிர் காத்த தயாளர்களே “
உமை வணங்க தடைகள் போட்டாலும்
வணங்கிய தமிழரை சுட்டு வீழ்த்தினாலும்
எம் நெஞ்சில் உமை தாங்கிடுவோம்
எங்கிருந்தாலும் உமை நினைப்போம்
எல்லைகள் தாண்டி கல்லறை வீரரை நெஞ்சில் சுமப்போம்
நீர் எமக்காக செய்த குருதி அர்ச்சனை நிச்சயம் பலிக்கும்
எதிரி அற்ற நிலம் நமக்கு நிச்சயம் கிட்டும்
நீங்கள் அணிவகுத்துக் காத்த ஈழம்
எந்த தடைகளையும் தாண்டி ஒர் நாள் மலரும்
கவிஞர்: பாமினி
– தாரகம்