முல்லையில் மாணவர்கள் போராட்டம்
வடதமிழீழம், சுழிபுரம் சிறுமி றெஜினாவின் கொலையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டம் செம்மலையில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
றெஜினாவின் கொலைக்கு நீதி வேண்டி நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அயலில் இருந்த பாடசாலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் கல்வி அமைச்சு அனுமதி வழங்காது மாணவர்களை அனுமதிக்க முடியாது என்று பாடசாலையின் அதிபர் மறுத்திருந்தார் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் தெரிவித்தனர்.
தமது அயல் பாடசாலைகளிலேயே இத்தகைய நிலை இருக்கும்போதும் சிறுமி றெஜீனாவிற்கு நீதிகேட்டு செம்மலை மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்குத் தாம் தலை வணங்குகிறார்கள் என்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவானவர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட செம்மலை மாணவர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்திருந்தனர். வீதியின் இரு மருங்கிலும் அணியாகத்திரண்டு நின்று தமது எதிர்ப்பை அவர்கள் வெளியிட்டனர்.
செங்கலடியிலும் போராட்டம்!
தென்தமிழீழம், யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி றெஜினா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று சனிக்கிழமை (30) செங்கலடி நகரில் கவனயீரப்பு போராட்டம் நடைபெற்றது. முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் செங்கலடி எல்லை வீதியில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்- “காவல்துறையினரே கடமையில் ஈடுபடுங்கள்“, “வேண்டும் வேண்டும் றெஜினாவுக்கு நீதி வேண்டும்“, “அன்று வித்தியா சேயா இன்று றெஜினா நாளை?“, “நல்லாட்சி அரசே றெஜினாவின் படுகொலைக்கு நீதி வழங்கு“, “அரசே சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா, றெஜினாவின் படுகொலைக்கு தண்டனை வழங்கு“, “றெஜினாவின் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறோம், நல்லாட்சி அரசில் காவல்துறை தூங்குகின்றதா?“ போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களையெழுப்பினர்