மகிந்த ராஜபக்ஷ என்றவுடன் நாட்டுப் பிரிவினைவாதிகளிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றியவர் என்றும் வெளிநாட்டு அல்லது உலக ஆதிக்க சக்திகளுக்கு அடிபணியாத ஏகாதிபத்திய விரோதி என்றும் தேசபக்தர் என்று மதிப்பிடுமளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில் படிமம் கட்டப்பட்டுள்ளது. அதேவேளை அவர் நவ பழைமை வாத, நவபாசிதவாத சிங்கள பௌத்த மேலாதிக்கவாதி என்றும் அவரின் ஏகாதிபத்திய விரோதம் என்பது போலியான அவரது சிங்கள பௌத்த மேலாதிக்க நிலைப்பாட்டிற்கு உட்பட்டது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர் நிலைநாட்டிய பாசிசத்திற்கும், இனமேலாதிக்கத்திற்கும் நடத்தி முடித்த யுத்தத்திற்கும் பதிலளிக்க வேண்டியவராக பொறுப்புக்கூற வேண்டியவராக இருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவராக ‘இருப்பதற்கு அளவாக அவருடைய ஏகாதிபத்திய எதிர்ப்பும், தேசபக்தியும் அமைந்துள்ளது என்பதே அம்மதிப்பீடாகும்.
இந்தியாவையும், அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் சமாளிப்பதற்காக யுத்தப் பாதிப்புக் குறித்தும் பொறுப்புக் கூறுவதாகவும் நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையிலான அரசியல் யாப்பை ஏற்படுத்துவதாகவும் உறுதி அளித்திருந்தாலும் மகிந்த ராஜபக்ஷ அந்நாடுகளை ஏமாற்றி வந்துள்ளார்.
அவரின் ஜனநாயக விரோதமும் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்கலும், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் அவர் மீதான அதிருப்தியும் அவரால் 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியவில்லை.
ஆனால் பெரும்பான்மை இனத்தை ஆகர்சித்த அவரது இன மேலாதிக்கம் அவரைத் தொடர்ந்து அரசியலில் இருக்க வைத்துள்ளது. அத்துடன் அவரதும், அவரது சகாக்களினதும் தொடர்ச்சியான செயற்பாடும், நல்லாட்சி என்ற மைத்திரி ரணில் கூட்டாட்சியின் கையாலாக நிலையும், ராஜபக்ஷவிற்கும், அவரது சகாக்களுக்கும் எதிராக மோசடி தொடர்பான குற்றச் சாட்டுதல்கள் இருந்தபோதும் உரிய நடவடிக்கைகளை எடுக்காமையும், மைத்திரியும் ரணிலும் எதிரும் புதிருமாக நடந்து கொள்வதும் ராஜபக்ஷவையும் அவரது அணியையும் பலப்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டுள்ளது என்ற தோற்றப்பாடு எதிர்வரும் காலத்தில் மாகாணசபை, ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று விடலாம் என்ற அவாவை ராஜபக்ஷக்களுக்கு அதிகரிக்கச் செய்துள்ளது. அந்த நோக்கில் தான் கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான கருத்துகள் வெளியாகி வருகின்றன.
அந்தக் கருத்துகள் வெளிவந்துள்ள நிலையில்தான் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் அமெரிக்கத் தூதுவர் அத்துல் கேஷப் கோத்தாபய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை அமெரிக்காவும், ஐரோப்பாவும் விரும்பாது என்று மகிந்தவிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. இச் செய்தியை உறுதி செய்வதாக அமெரிக்கத் தூதுவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தபோது தெரிவித்ததாக வெளியான செய்தி அமைந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 30 வீதமான மக்களே மகிந்த அணியை ஆதரிப்பர் என்பதால் அவ்வணியினர் வெற்றி பெறுவது கடினம் என்று அமெரிக்கத் தூதுவர் விக்னேஸ்வரனிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோத்தாபய அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறப்பதில் சிக்கலான நடைமுறைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக ஆதிக்க சக்திகள் உலக நாடுகளின் அரசியல் தலைமைகளிலும், அரசாங்கங்கள் அமைவதிலும், அரசாங்கங்கள் பதவி ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதிலும் பாரிய அழுத்தங்களைப் பிரயோகித்து வருவது புதிய கண்டுபிடிப்பல்ல. அதிலும் இலங்கை அரசியலில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகமாகவே அழுத்தங்களைக் கொடுத்துவந்துள்ளன. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் பலவிதமான வழிகளில் நிதியை வழங்கியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது மட்டுமன்றி அவரைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை அமைப்பதிலும் அமெரிக்காவும், ஐரோப்பாவும் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்த அழுத்தங்கள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவிடம் இருந்து மட்டுமே வருகின்றன. அல்லது அவற்றின் தலையீடுகள் மட்டுமே இருக்கின்றன என்று சிலர் பிழையான அறிவூட்டல்களை செய்கின்றனர்.
அவர்களுக்கு தற்போதைய ஒழுங்கில் ஏகாதிபத்தியம் பற்றிய சரியான புரிதல் இல்லை அல்லது புரிதல் இருந்தும் பிழையாக மக்களை வழிநடத்த முற்படுகிறார்கள் எனலாம். லெனின் முதலாளித்துவத்தின் உயர் கட்ட வளர்ச்சியே ஏகாதிபத்தியம். அந்த ஏகாதிபத்தியம் ஒரு சில நாடுகளாகவன்றி பொது பொறிமுறையை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாக பல நாடுகளை உள்வாங்கியுள்ளது.
ஏகாதிபத்தியம் பிச்சைக்காரர்கள் இல்லாத அல்லது குறைந்த பிறநாடுகள் மீது இராணுவ ஆதிக்கம் செலுத்தக்கூடிய நேரடியான கொலனிநாடுகளை வைத்திருக்கும் நாடென்பதாகாது. மூலதனம் உள்நாட்டில் பலமடைந்து வெளிநாடுகளையும் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் நிலையையே முதலாளித்துவத்தின் உயர் கட்டமான ஏகாதிபத்தியம் என்பதே லெனினின் ஆய்வின் அடிப்படை.
அந்த அடிப்படை இன்றும் மாறவில்லை ஆனால் ஏகாதிபத்திய நாடுகள், அமைப்புகள் பெருகியுள்ளன. அவற்றிடையே போட்டி இருப்பினும் அவை ஒரு ஒழுங்கில் பொறிமுறையில் இணைக்கப்பட்டுள்ள அதன் தத்துவம் நவதாராளவாதம் நவகொலனித்துவத்தை பூகோளமயமாக்குவதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது ஒரு முனையாகவன்றி பல முனைகளாக ஏகாதிபத்தியம் செயற்படுகின்றது.
அந்தப் பொறிமுறையில் பலமாகவும் தலைமையாகவும் சீனா இருந்து வருகின்றது. அது நவ ஏகாதிபத்தியத்தின் லட்சணமாக இருந்து வருகின்றது. அதனது மூலதனத்தின் செயற்பாட்டை விரிவுபடுத்தியுள்ளது. ஆபிரிக்க ஆசிய நாடுகளில் மட்டுமன்றி அமெரிக்காவிலும் சீன மூலதனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சீனாவின் கடன் திட்டங்களுக்கு மிகவும் மோசமாகப் பலியாகியுள்ள நாடு இலங்கை. அதிகமான வட்டிக்கு கடன் கொடுத்தும் விமான, துறைமுக, அதிவேக பாதை நிர்மாணங்களில் ஈடுபட்டும் இலங்கையின் பொருளாதாரத்தை சீனா இல்லாது நகர்த்த முடியாது என்ற நிலைமையை நிலைநிறுத்தியுள்ளது.
புவியியல் அமைவிடத்தைப் பொறுத்தவரையில் முக்கிய இடத்தை வகிக்கும் இலங்கை உலக மேலாதிக்க சக்திகளுக்கு இன்றியமையாததாகும். சீனாவின் பொருளாதார கொள்கை இலங்கையை கவ்விக் கொண்டுள்ளது. இந்த உண்மையை ஏற்க விரும்பமில்லாத சிலர் இன்றும் அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் மற்றும் இந்தியாவையே ஏகாதிபத்திய நாடுகளாகவும், இலங்கையின் எதிரிகளாகவும் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக காட்டும் தந்திரோபாயத்தைக் கொண்டுள்ளனர்.
சீனா ஏகாதிபத்திய நாடுகள் போலன்றி அபிவிருத்தி திட்டங்களுக்கே நிதி உதவி வழங்குவதாகக் கூறி சீன பொருளாதார மேலாதிக்கத்திற்கு சப்பை கட்டுகின்றன. சீன மூலதனம் அபிவிருத்தித் திட்டங்களுக்கு மட்டுமன்றி தனியார் துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அம்பாந்தோட்டை துறைமுக, விமான நிலையத்தையும் கொழும்பில் அமைக்கும், தீவையும் தனக்கே தரும்படி சீனா இலங்கையை நிர்ப்பந்தித்து வருகிறது.
அம்பாந்தோட்டையில் தீவொன்றை அமைக்கவும் அந்தத் தீவை தனக்கு தரும்படியும் கேட்டு நிர்ப்பந்திக்கிறது. இது புதுவகையான ஆக்கிரமிப்பு. சீனாவின் புதிய பட்டுப்பாதை என்ற உலக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான உலக துறைமுகங்களை அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதன் தந்திரோபாயத்தில் இலங்கையை வீழ்த்துவதில் சீனா வெற்றியைக் கண்டுள்ளது.
இவ்விடயங்களை இன்னும் பொருளாதார உதவி என்றும், அபிவிருத்திக்கான நிதியுதவி என்றும் கூறுவதுடன், ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலல்ல என்றும் அந்த சிலர் கூறுகின்றனர். வடக்கில் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்தத்தையும் சீன கம்பனி பெற்றுக்கொண்டுள்ளது. இதுவும் உதவி என்றும் கூறுபவர்கள்.
சீன நிதியில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் சீனர்களே வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இன்று சீனர்களின் நடமாட்டம அதிகரித்துள்ளதுடன் சீனர்களால் நடத்தப்படும் கடைகளும் பெருகியுள்ளன. சிறு, இடைத்தர வியாபாரங்களில் வெளிநாட்டவர்கள் ஈடுபடுவதை முதலீட்டுச்சபை சட்டங்கள் இடமளிக்காத போதும் சீனர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் சில சீனர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இவை இலங்கைக்கு சவாலான விடயங்களாக மாறலாம்.
இலங்கையில் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் இராணுவ நோக்கத்தைக் கொண்டதல்லவென்று சீனா மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறிவருகிறது. இதனை மீள உச்சரிக்கும் அந்த சிலர் சீனாவின் இராணுவம் எந்தவொருநாட்டிலும் நிலை கொண்டிராதபடியால் அது ஏகாதிபத்திய நாடல்ல என்கின்றனர்.
மூலதனத்தின் உச்ச செயற்பாடே ஏகாதிபத்திய செயற்பாடு என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்க முடியாது. முன்னாள் சோவியத் யூனியனைப் போன்றும், சில ஐரோப்பா நாடுகள் போன்றும் அபிவிருத்தித் திட்டங்களை சீனா இனாமாக செய்யவில்லை என்பது தெரிந்ததே. இன்றிருக்கும் சீனா மாசேதுங் காலத்துக்கு சோஷலிஸ சீனா அல்ல.
ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை என்று சீனாவும், சீனாவை ஆதரிப்போரும் கூறுவதுண்டு. பர்மாவின் இராணுவ ஆட்சிக்கு சீனாவின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருப்பது ரகசியமல்ல. ஐ.நா. வில் சீனா அதற்கு ஆதரவான நாடுகளை பாதுகாக்காமலும் இல்லை. இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் நெருக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமையாலேயே ராஜபக்ஷ சீனாவை நாடினார் என்றும் சீனாவை நாடியமை ராஜபக்ஷவின் சிறந்த ராஜதந்திரம் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். சீனாவிடம் இலங்கையை வீழ்த்தும் நோக்கமும் நிகழ்ச்சி நிரலும் இருக்கவில்லை என்று கூறமுடியாது. இருந்திராவிடின் ராஜபக்ஷ சீனாவை நாடியிருக்க முடியாது.
அபிவிருத்திக் கடன் மட்டும் மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் இருப்பிற்கும் சீனா நிதி வழங்கியுள்ளமையை ‘நியூயோர்க் டைம்ஸ்’ கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை மகிந்த ராஜபக்ஷவின் 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக சீனா வழங்கி இருந்ததாக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இந்நிதி சீன துறைமுக கம்பனியால் வழங்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு 3.7 அமெரிக்க டொலர்கள் காசோலைகளாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 678,000 அமெரிக்க டொலர்கள் ரிசேட் அச்சிடவும் வேறு பிரசாரப் பொருட்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சேலைகள் உட்பட பரிசு பொருட்களுக்காக 297,000 அமெரிக்க டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், 38,000 அமெரிக்க டொலர்கள் ராஜபக்ஷவின் பிரசாரத்தை முன்னெடுத்த ஒரு பௌத்த பிக்குவிற்கு கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மேற்கத்தேய ஊடகங்களின் பொறுப்பற்ற பொய்கள் என்று கூறுகின்றன.
மோசடிகள், ஊழல்கள், குற்றச்சாட்டுகள் மகிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மட்டுமன்றி தற்போதைய மைத்திரி ரணில் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இருக்கின்றன. அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்கும் அரசியல் பிரசாரங்களுக்கும் உள்நாட்டு, வெளிநாட்டுக் கம்பெனிகளும், வெளிநாடுகளும் வழங்கிவந்தன என்பன பழைய செய்திகளாகும். ஏகாதிபத்திய நாடாக இல்லாத வேறுநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது என்று கூறப்படும் நம்பப்படும் சீனா ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தலுக்கு (உள்ளூராட்சி தேர்தலுக்கும்) நிதியுதவி வழங்கியுள்ளதா என்பது தான் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒரு நாடு ஏகாதிபத்திய நாடாகிவிட்டால் அடுத்த நாடுகளின் பொருளாதாரம், அரசியல், இராணுவ விடயங்களில் தலையிடாவிட்டால் அந்நாட்டின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இதுவரை சீனாவின் பொருளாதார தலையீடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இன அரசியல் தலையீடும் நிரூபிக்கப்பட்டால் இராணுவ தலையீடும் இருந்தால் தான் சீனா ஏகாதிபத்திய நாடென்றும் இலங்கை சீனாவின் நவகொலனி என்றும் கூற சிலர் இருந்து கொண்டே இருப்பர்.