விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவி யிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்குத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவர் மைத்திரிபால சிறி சேனவுக்குப் பரிந்துரைத்துள்ளார் என தகவலகள் வெளியாகியுள்ளன. எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
நேற்று முன்தினம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சியினரின் அழுத்தங்களை அடுத்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துத் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதே ரணிலின் நோக்கம் எனக் கூறப்படுகின்றது.
அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தில் அரசமைப்போ அல்லது தற்போதைய சட்டமோ மீறப்பட்டிருக்குமாயின் அது குறித்து ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டார் என்று சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.