தனக்கென முயலா நோன்றாள் பிறர்கென முயலுநர் உண்மை யானே …..
தமிழீழ விடுதலைப்போராட்டம் சந்தித்த மிக இறுக்கமான நேரங்களில் எல்லாம் ஒரு மைல் கல்லாக, திருப்புமுனையாக போராட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும் பெரும் பலம் பொருந்திய ஆயுதமாக “கரும்புலிகள்” என்ற உயிராயுதங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கினார்.
1987 ஆம் ஆண்டு யூலை 5, “ஒபரேசன் லிபரேசன்” என்ற பெயரில் வடமராட்சி மண்ணை சிறிலங்காப் படைகள் வல்வளைப்புச் செய்த போது ,கொத்துக் கொத்தாய் எம் உறவுகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துகள் அழிக்கப்பட்டன. சொந்த மண்ணிலே வாழ முடியாது மக்கள் ஏதிலிகளாய் பெரும் அவலங்களை சந்தித்தனர்.
இந்த நேரத்திலே, வடமராட்சி மண்ணின் சில பகுதிகள் அரச படைகளால் கைப்பற்றபட்டதோடு, வெற்றி மமதையில் இருந்து கொண்டு மீண்டும் ஒரு பட நடவடிக்கைக்கு தம்மை தயாராக்கினர் சிறிலங்கா படைகள்.
இந்த நிலையிலே,அரச படைகளின் கொட்டத்தை அடக்கி மீண்டும் எமது மண்ணை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் விடுதலைப்புலிகளிடம் இருந்தது.
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் சிறிலங்காப் படைகளால் நிரம்பி வழிந்தது. எந்த நேரத்திலும் இன அழிப்புக்கான அடுத்த கட்ட படை நடவடிக்கை ஆரம்பமாகி விடும்.
இப்படியான ஒரு சூழலில் தான் ஒரு மனிதனால் தன்னுடைய நாட்டுக்காகத் தன்னுடைய மக்களுக்காகச் செய்யக்கூடிய அதி உயர் ஈகமாக கொடையாக தன்னுடைய உயிரை ஆயுதமாக்கி மெய்சிலிர்க்க வைக்கும் ஈக வரலாற்றின் முதல் அத்தியாயத்தை தொடக்கி வைத்தான் கரும்புலி கப்டன் மில்லர். அன்று தொடங்கிய ஈக வரலாறு பின்னாளில் விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரு வெற்றிகளுக்கெல்லாம் திறவுகோலாய் அமைந்தது.
எமது போராட்டம் சந்தித்த பெரும் நெருக்கடிகளில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பதற்காக தேசத்தின் புயல்களாய் வீசிகடல்தனில் காவியமாகி ,காற்றிலே ஏறி விண்ணையும் சாடி, ஊர் பேர் தெரியாத நிழல் கரும்புலிகளாய் மாறி உயிர் கொடைகளை அள்ளித் தந்தவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து நெஞ்சிருத்திக் கொள்ளும் திருநாள் இன்று.
உண்மையிலே பார்ப்பவர்களுக்கு நெருப்பு மனிதராய் தெரியும். இந்தக் கறுப்பு மனிதருக்குள் இருக்கும் மென்மையும் ,ஈரமும் வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லி விட முடியாதவை.
“வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்”
யாரிவர்கள்…………விண்ணில் இருந்து குதித்து வந்த விசித்திர மனிதரல்ல…..எம்மைப் போலவே இரத்தமும் சதையுமாய் ஈழத் தாய்குலத்தின் மடியில் பிறந்து வளர்ந்த சரித்திரங்கள். அவர்களுக்கும் அம்மா,அப்பா ,உடன் பிறந்தோர், சொந்தம், சுற்றம் என பந்தங்கள் பல இருந்தன. துன்பங்கள் தெரியாத சுகமான வாழ்வு இருந்தது. பள்ளிப் படிப்பும், நண்பர் கூட்டமும் இருந்தன. இளமைக்கால வண்ணக் கனவுகள் இருந்தன. ஏன் ஒரு சிலருக்குள் அழகான காதல் கூட இருந்தது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த மக்களையும் ,தேசத்தலைவனையும் அவர்கள் நேசித்தார்கள். தமிழீழ மண்ணின் விடுதலையைத் தம் இலட்சியமாக கொண்டார்கள். அதனால் தான் கரும்புலிகள் என்ற உயரிய ,உன்னதமான இலட்சியக் கனவை அவர்களால் நிறைவேற்ற முடிந்தது.
இந்த இலட்சியக்கனவை நிறைவேற்றுவதற்காக எத்தனை நாள் காத்திருப்பு ……வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கடின பயிற்சிகள்….ஓய்வு உறக்கமின்றிப் போன எத்தனையோ இரவுகள் ….பசிகூட மறந்து போன பொழுதுகள்,தம் இலக்கை நோக்கிச் செல்வதற்குள் எத்தனையோ தடைகள் ,அத்தனையும் ,கடந்து பகை அழித்து வென்றவர்கள் இவர்கள்.
இந்த இடத்தில ஒரு சிறிய சம்பவம் ஒன்றைப் பதிவாக்க நினைக்கிறேன் . இன்று தன்னுடைய ஆளுமையாலும், போரியல் நுட்பத்தாலும், மனித நேயத்தாலும்,சுய ஒழுக்கத்தாலும் உலகமே வியந்து பார்க்கும் எம் தலைவர் அவர்கள்,தாக்குதலுக்காகப் புறப்படும் கரும்புலிகளிடம் ஒரேயொரு விடயத்தை மட்டும் மிகவும் வலியுறுத்தி சொல்லுவார் .
“ நீங்கள் தேடிச் செல்லும் இலக்கு எதிரிகள் மட்டும் தான். எதிரி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த மக்களும் எங்களுடைய நேசிப்புக்கு உரியவர்கள். அவர்களுக்கு எந்தவொரு சிறு தீங்கோ இழப்போ ஏற்படக் கூடாது. இந்த விடயத்தில் அனைவருமே மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.”
எங்கள் தேசத்தலைவனின் அந்த வாக்கு இலக்கைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு கரும்புலிக்குள்ளும் இருந்தது.
அப்படித்தான் அவனுக்கான இலக்கு பகை வாழும் இடத்தில இருந்தது. எத்தனையோ நாள் காத்திருப்பு. எத்தனையோ பல முயற்சியின் பின் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம். எதிரியை மிக நெருங்கி விட்டான். அந்த நேரம் சிறுவர்கள் விளையாடுவதற்காக அந்த இடத்துக்குள் வந்துவிட்டார்கள். அவன் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடும்.
ஒரு நொடி அவனது மனதில் தலைவரின் அறிவுறுத்தல் நினைவுக்கு வருகின்றது. அந்த கணமே அவன் பின் வாங்குகிறான். ஆனால் எதிரிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவன் சுற்றி வளைக்கப்படப் போகின்றான். எதிரியிடம் பிடிபடக் கூடாது. அதே நேரம் பொதுமக்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது. உடனே மக்கள் நட மாட்டம் இல்லாத பகுதியை நோக்கி அவன் ஓடுகின்றான். மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தி விட்டு தன் உடலில் கட்டிய வெடிமருந்தை வெடிக்க வைத்து சாவை அணைத்துக் கொள்கின்றான்.
உண்மையிலே அவனது சாவு என்பது ஒரு சம்பவமாகி விடவில்லை . அவன் தன் உயிரை விட எதிரி இனத்தைச் சேர்ந்த மக்களாக இருந்தாலும் அவர்களையும் எவ்வளவு நேசித்தான் என்பதன் அடையாளம் தான் அவனுடைய சாவு. இது முகம் மறைந்த கரும்புலி வீரன் ஒருவனின் வரலாறு.
இது ஒரு சம்பவம் ஆனால் இப்படி எத்தனையோ வெற்றிச் சரித்திரங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
எதிரியின் குகைக்குள்ளே இருந்து, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ,பகையோடு உறவாடி, சாதுரியமாய் தமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி, வெளியே தன் முகம் மறைத்து ,உள்ளே தன் இலக்கழித்து வெற்றிகளைத் தந்து விட்டு நினைவுகள் கல் கூட இன்றி, ஏன்ஆணா, பெண்ணா என்று கூட தெரியாது வீரச் சாவுகளின் பின்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிழல் கருவேங்கைகளின் ஈகத்தை எப்படி எழுத வேருக்கு மட்டுமே விழுதினைத் தெரியும்.
அழகான காதல்
அவனுக்குள் அழகான காதல் இருந்தது. தன் காதலை எப்படியாவது அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று பல தடவை அவன் முயற்சி எடுத்தான்.அது வாழ்வதற்கான காதல் அல்ல .இலட்சியத்தால் ஒன்று பட்டு வரலாறுகளைப் பதிவதற்கான இலட்சியக் காதல்.
அவன் யார் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவன் தன்னை விரும்புகிறான் என்பதும் அவளுக்குத் தெரியும். ஆனால் ஒரு போதும் அவனது காதலை அவள் ஏற்க வில்லை.
அவனுக்கான இலக்கு கிடைத்து விட்டது் அவன் புறப் படப் போகின்றான். இறுதி விடை பெறுவதற்காக அவளிடம் வருகின்றான். அப்போதும் அவனைச் சந்திக்க அவள் மறுத்து விடுகின்றாள் . அவன் வழமையான தன் புன்னகையோடே புறப்பட்டு விட்டான். அன்று இரவே சிறிலங்கா கடற்படையின் கப்பல் தகர்த்து கடலிலே காவியம் படைக்கின்றான். அவனும் கூடவே 3 தோழ தோழியருமாக
தொலைத்தொடர்பு சாதனம் காற்றலையில் அவனது வீரச்சாவு செய்தியை தாங்கி வருகின்றது. அவள் விழிகளில் நீர் கோர்த்தது. தோழிகள் அவளிடம் கேட்கின்றனர் . “ அவன் உன்னிடம் பேச நினைத்த போதெல்லாம் நீ பேச வில்லை, இப்போது எதற்காகக் கவலைப்படுகின்றாய்” என அதற்கு அவள் சொல்கிறாள் “ நான் காதலிக்கிறேன் என்ற அந்த ஒற்றைச் சொல் ,அவரது இலக்கு நோக்கிய பயணத்தில் ஒரு சிறிய தடுமாற்றத்தைக் கூட ஏற்படுத்தி விடக் கூடாது. சில வேளை இலக்குச் சரியாக அமையாமல் அவர் திரும்பி வந்தால் கூட என்ர மனது குற்ற உணர்வில் துடித்துப் போய்விடும். எப்போதும் அவர் தன்னுடைய இலட்சியத்தில் வெற்றி அடையவேண்டும் இது தான் என்னுடைய ஆசை. உண்மையிலே நானும் அவரை மனதார நேசிக்கின்றேன்.அவரை மட்டுமல்ல ,அவரது இலட்சியங்களையும் சேர்த்து வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல செயலிலும் அவள் நிரூபித்துக் காட்டினாள்.
விளையாட்டுப் பிள்ளை
அவன் ஒரு குழப்படிக்காரன் . ஒரு இடத்தில இரு என்றால் அது அவனால் முடியாத காரியம். சின்ன வயதிலேயே அப்பாவை இழந்ததனாலோ என்னவோ அவனுக்கு அளவுக்கு அதிகமான செல்லம்.
அம்மாவுடன் சேர்ந்து குடும்பச்சுமையை மூத்தவர்கள் சுமக்க வீட்டில் நிற்கும் இவனோ ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பிரச்சனைகளை அம்மாவின் தலையில் ஏற்றி வைப்பான். அந்தளவுக்கு குறும்புக்காரன் . வேலை முடித்து களைத்து வரும் அம்மா ஏக்கத்தோடே வீட்டுக்கு வருவார். இன்றைக்கு என்ன செய்து வைத்திருக்கின்றானோ என்ற பதபதப்பு அம்மாவுக்குள் எப்போதும் இருக்கும்.
ஒரு நாளைக்கு விழுந்து கைய முறிச்சிருப்பான் இல்ல காலில் அடிபட்டிருப்பான் ,இல்ல எதோ வெட்ட எடுத்த கத்தி கைய பதம் பார்த்திருக்கும். அதுகும் இல்லை என்றால் அயல் வீட்டுச் சிறுவர்களோடு அடிபட்டு பிரச்சனையை இழுத்து வைத்திருப்பான் . அப்படியொரு விளையாட்டுப் பிள்ளை அவன்.
ஆனால் இப்போது அவன் ஒரு கரும்புலி வீரன் , அதுகும் நீரடி நீச்சல் கரும்புலி. மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோல்களில் ஒருவனாக அவன்.
சாவுக்கு நாள் குறித்த அவர்கள் பயணம் தொடங்குகின்றது. இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருக்க, நீரின் அடியால் வெடிமருந்துகளைச் சுமந்த படி அவர்கள் ……..
திருமலைத் துறை முகம் பலத்த பாதுகாப்பு நிறைந்த கோட்டையாக இறுமாப்புடன் இருந்தது.
அந்தக் கோட்டைக்குள் அலையோடு அலையாக எதிரி விழிப்படையா வண்ணம் மெல்ல மெல்ல நகர்ந்து , எதிரியின் பாதுகாப்பு வேலிகளைக் கடந்து உள்நுழைந்து ,தமக்கான இலக்கைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள்.
இன்னும் 30 நிமிடங்கள் மிக நிதானமாக கப்பலில் குண்டினைப் பொருத்தி எதிரி விழிப்படையா வண்ணம் மிக அமைதியாகத் தம் கைகளால் அதைத் தாங்கியபடி அவர்கள் நேரங்கள் மெல்ல மெல்ல நகர்கின்றன. தம் சாவுக்கான ஒவ்வொரு மணித்துளிகளையும் எண்ணிய படி தேசத்தலைவனும், தாம் நேசித்த மக்களும் , மலரப் போகும் தமிழீழத் தேசமும் மனக் கண்ணில் நிலைத்து நிற்க ,ஆடாமல் ,அசையாமல் ,விலகாமல் குண்டை அணைத்த படி அவன்.அந்தக் கடைசி மணித்துளி ……..” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” திருமலைத்துறைமுகம் அதிர்கின்றது. கப்பல் தகர்கிறது. ஒரு நிமிடம் கூட ஓய்ந்திருக்கத் தெரியாத அந்தத் தீராத விளையாட்டுப்பிள்ளை நம் தேச விடுதலைக்காக போரியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி மூன்றாம் கட்ட ஈழப் போரின் திறவுகோலாக வரலாற்றைப் படைத்தான் கடற்கரும்புலி மேஜர் கதிரவன்.
அக்கினிக் குஞ்சுகள்
அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு ஆண், பெண் கரும்புலிகள் தயாராகின்றனர். இலக்கை அழிப்பதற்கான ஓயாத பயிற்சிகள் எல்லாம் நிறைவடைந்து விட்டன. தேசத்தின் புயல்கள் புறப்படுவதற்கான பொழுது நெருங்கி விட்டது.
தாய்க் குருவியோடு சேய்க்குருவிகள் மகிழ்ந்திருக்கும் அந்த அழகான தருணத்துக்கான காத்திருப்பு கறுப்புவரிச் சீருடைக்குள் புன்னகை வீசிய படி குதூகலத்துடன் அந்த உயிராயுதங்கள் அணிவகுத்து நின்றார்கள் . எங்கும் அமைதி ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றது. தலைவர் அவர்கள் உள்ளே நுழைகின்றார்.
“ அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அதை ஆங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு……”
என்ற பாரதியாரின் கவிதை வரிகளைச் சொல்லிக் கொள்கிறார்.
“உண்மையிலே எங்கட விடுதலைப் போராட்டத்தில் நீங்களும் அப்படித்தான் . கரும்புலி என்கின்ற பொறி ,இன்று எங்கட மண்ணிலும் , புலம்பெயர் தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்கள் மக்களுடைய மனங்களில் பெரும் விடுதலை தீயை மூட்டியிருக்கின்றது. உலகம் எங்கும் எமது விடுதலைப் போராட்டத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றது. என்ற தலைவர் அவர்களின் எண்ணத்தை தாங்கியவர்களாய், இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் , எமக்காக வாழ்ந்து தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த இந்தக் கரும்புலிகள் நினைவு சுமந்த நாளில் , அவர்களின் கனவாகிய தாயகக் கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்கின்ற தார்மீகப் பொறுப்புணர்ந்து அனைவரும் ஒன்றுபட்டு பயணிப்போமாக.
நன்றி
மூலம் – தாரகம்