மனிதனின் இயல்பு வாழ்வு சிதறிடும் போது உடலியல் மற்றும் உளவியல்ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றான்.
கடந்தகால யுத்தத்தின் தாக்கம், குடும்பப் பிரச்சினைகள், அதனுடன் ஒத்த பொருளாதாரப் பிரச்சினைகள், சமூக அந்தஸ்து, பாலியல் தொந்தரவு ஆகியவற்றினால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி அவற்றிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடுவோர்களின் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதுடன், பல உளவியல் ரீதியான தாக்கத்திற்கு முகம் கொடுக்கும் மானிடரில் தன்னைத் தானே மாய்த்துக் கொள்வோரின் எண்ணிக்கை தற்போது கணிசமானானளவு உலகலாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது.
ஆரம்ப காலம் தொட்டு இற்றை வரை மனித குல வராலற்றில் குறிப்பாக இலங்கையில் தற்கொலை புரிவோரின் வீதமானது அதிகரித்து வருவதனை மறுக்கவோ மறைக்கவோ முடியாதென்பது கண்ஊடக. இத் தற்கொலைக்கான முக்கிய காரணிகளாக கடன் தொல்லை. காதல் தோல்வி, உடல் மற்றும் உளம் சார்ந்த நோய் நிலைகள் இடப்பெயர்வு, யுத்தத்தின் அழிவுகள், கல்வியில் தோல்வி, போதைப்பொருள் பாவனை, வன்முறைக்குள்ளாகுதல், உயிர், உடைமை இழப்புக்கள், பிரிவு, அடிமைவாழ்வு, பாலியல் துஸ்பிரயோகம், நாட்பட்ட குணமாக்கமுடியாத நோய்கள் போன்ற இன்னோரன்ன பல காரணங்களினால் பலர். தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
சிலர் தாம் இனி இவ்வுலகில் வாழ்வதில் எவ்வித பயனுமில்லை என்று எண்ணி தம்மை தாமே மடித்துக் கொள்வோம். எனும் நோக்கில் சந்தர்ப்பம் இட்டும்வரை காத்திருப்போரும் உண்டு. இன்னும் சிலர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்து அக்கணத்திலே தம்முயிர போக்கிக் கொள்வோரும் காணப்படுகின்றனர்.
இதே போல் பூமியிலே பிறந்த யாவரும் இன்பம், துன்பம் வெற்றி, தோல்வி போன்ற பல இணைப்புக்களுடன் பிணைக்கப்பட்ட சுழலும் சக்கரம் போன்று சுழன்று கொண்டே இருக்கின்றோம். இதில் எத்தனையோ ஆயிரம் பேர் தம் வாழ்வில் சொல்ல முடியாத பல சோகங்களை சமந்தவர்களாய், தோல்வி மேல் தோல்வி மேல் தோல்வியுடன் தாங்கிக் கொள்ள முடியாத வேதனைகளும் இழப்புக்களும் ஏற்பட்ட போதிலும் தாம் இறந்து போய் விடக்கூடாது என்பதனைக் கருத்தாழமாய் கொண்டு தற்கொலை முயற்சியிலிருந்து தூர விலகி ஆரோக்கியமான சமாளிப்பு ஆற்றல்களைத் தம்முள்ளே உருவாக்கி பயன்படுத்தி வாழ்வில் ஒரு அர்த்தமுள்ள பிடிப்புடன் மனம் தளராது வாழ்பவர்கள் இன்றும் எம்மத்தியில் இல்லாமலில்லை இவர்கள் திட்சயமாய் பாராட்டப்பட வேண்டியவர்களே.
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய யுத்த அனர்த்தம் கொண்டு வந்துள்ள தற்கொலை முயற்சிகளும் தற்கொலையைத் தூண்டும் எண்ணங்களுமே வடிவங்களாக உருப்பெற்றுள்ளமையைக் காணக்கூடியதாயுள்ளது. இவற்றில் நலன்புரி நிலைய வாழ்க்கை, கலாசார வறுமை, பொருளாதார நெருக்கடி, வன்முறை, பாலியல் சுரண்டல்கள், துஸ்பிரயோகங்கள், சுதந்திரமற்ற வாழ்வு, ஏதிலிக் கலாசாரம், கல்விகற்கும் சூழல் இன்மை, எதிர்காலம் தொடர்பான அச்சம், சமய கலாசார நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், தனிமை, சித்திரவதைக்குள்ளாதல், நீன்டகால சிறை வாழ்வு , புனர்வாழ்வு என பல வருடங்கள் கால வரையறையற்ற தடுப்பு காவல் ,கடத்தப்பட்டு மீள்வாழ்தல் , உயிர் அச்சுறுத்தல் ,அடிமை வாழ்க்கை முறை போன்ற பல காரணங்கள் மேலும் அதனையே ஊக்குவிக்கின்ற சம்பவங்களே அதிகமாக காணப்படுகிறது.
உலக சுகாதா ஸ்தாபன அறிக்கையின்படி தற்போது பெண்களைவிட ஆண்களே நான்கு (4) மடங்கு அதிகமாக தற்கொலையில் ஈடுபடுகின்றனர். முன்னர் முதுமை நிலையில் தற்கொலை புரிவோரின் தொகை அதிகரித்துக் காணப்பட்டது ஆனால் இன்று இளவயதினரே அதிகம் ஈடுபடுகின்றனர். இன்றைய தடுப்புக் காவல் வாழ்க்கை, நலன்புரி நிலைய வாழ்வு என்பனவே இதன் தூண்டுகோலாக அமைகின்றன எனலாம்.
பாரிய குணமாக்க முடியாத உடல் நோய்களான குறிப்பாக எயிட்ஸ், புற்றுநோய் போன்ற வற்றினால் அவதியுறுவோர் தம் வேதனையைத் தாங்க முடியாது தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்கொலை புரிவோரில் அதிகமானவர்கள் ஏதோவொரு மனநலக் கோளாறு காரணமாகவே ஈடுபடுகின்றனர். இவற்றில் மனச்சோர்வு (Depression), மனச்சிதைவு நோய் (Sechzohoenia) காரணமாகவும் தற்கொலை புரிகின்றனர்.
இவற்றைவிட மதுபோதைப் பாவனையினால் ஏற்படும் மனக்குழப்பம, நெருக்கீட்டிற்கு பிற்பட்ட மனவடு நோய், உளப்பிளவை நோய், பதகளிப்பு, போன்றன காரணமாக தற்கொலைகள் வயது குறைந்தவரிடத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. மனச்சோர்வினால் அவதிப்படுவோர் தகுந்த குறிப்பான சிகிச்சை முறைகளைப் பின்பற்றாவிடில் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
இன்றைய உலகியே ஈடு செய்ய முடியாத இழப்புக்களினாலும் பிரிவுகளினாலும் போரின் மறுவடிவமாய் உயிர் தப்பிய குற்றவுணர்வுடன் எதிர்பார்ப்புக்கள் அத்தனையும் உடைந்து போன நிலையிலே தனிமையில் ஏங்கித் தவித்திடும் உறவுகளிடத்திலும், மனம் வெந்து மழை போல் கண்ணீரைச் சொரிந்து தேடிடும் வாழ்வு இனி மலருமா எனும் வினாவுடன் ஏக்கப் பெருமூச்சினை தவிப்புடன் வெளியேற்றும் மாந்தரிடத்திலும் உருவாகும் தற்கொலை தொடர்பான எண்ண ஓட்டம் செயல்வடிவம் தொடர்பாக சிறிது
சிந்திப்போம்…………..
தரணியில் மானிடராய் பிறந்திட்ட நாம் நமது பிறப்பின் நோக்கத்தினையும் அர்த்தத்தினையும் விளங்கிக் கொள்வதற்கு முயற்சிப்போம் எம் சாதனைப் பாதையில் வரும் இடர்களைக் களைந்து அறிவாற்றல். தூய சிந்தனை, நல்லாசிகள் நிறை மானிடராய் வாழ எத்தணிப்போம் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கiயுடன் வரும் பாதை புதியதாய் புத்துணர்வுடன் மலரவும் கடந்ததை மறந்து எதிர் நீச்சல் போட்டு இடர் தரும் தடைகளை உடைத்து என்னால் வாழ முடியும் எனும் மன தைரியத்துடன் மலர்ந்திடும் புது அகஉலகில் உரமூட்டப்பட்டு நிஐ உலகில் கால்பதித்து வளமாக வாழ்வோம் என்றும் நலமுடன்.
-நிலவன்