தமிழீழ சுகாதார சேவைகள் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளரும் தமிழீழ தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பாளருமான மருத்துவர் லெப். கேணல். தமிழ்வாணன் அவர்களின் 10 ம் ஆண்டு நினைவு நாள் – 10/7/2017
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துவப் போராளியான தமிழ்வாணன் அவர்கள் களமுனை துணை மருத்துவ நிலையங்களிலும் தள மருத்துவமனைகளிலும் திறமுடன் கடமையாற்றினார். பின்னர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பொறுப்பாளராக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டு, தமிழ் மக்களின் சுகாதாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சுஜந்தன் , தமிழீழ சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வாமன் ஆகியோருடன் இணைந்து மரு. தமிழ்வாணன் வன்னிப் பகுதியில் தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக தீவிர பணிகளில் இடையறாது செயற்பட்டார். இதன் மூலம் வன்னி பகுதியை மலேரியா நோய்த்தாக்கம் இல்லாத பகுதியாக பாதுகாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மரு. தமிழ்வாணன் பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா, காசம் , வெறிநாய்க்கடி முதலான நோய்த்தொற்றுகளிலிருந்து எமது மக்களை பாதுகாக்க விரிவான செயற்திட்டங்களை தீட்டி அதனை திறம்பட நடைமுறைப்படுத்தினார். மேலும் தமிழீழ சுகாதார சேவையால் உருவாக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் மற்றும் சுதேச மருந்து உற்பத்தி நிலைய கட்டுமானத்தில் மரு. தமிழ்வாணன் காத்திரமான பங்காற்றினார்.
குறைவான போக்குவரத்து வசதிகளையே கொண்டிருந்த எமது பகுதியில் மாவட்ட மருத்துவ மனைகளிலிருந்து தொலைதூரத்தில் இருந்த கிராமங்களில் தமிழீழ சுகாதார சேவைகள் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம்களை நடத்தி மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதாக கிடைக்கச் செய்தது. மேலும் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியான சுகாதாரப் பணிகள் எமது மக்களிடையே மேற்கொள்ளப்பட்டன. இவ்வரிய வேலைத் திட்டங்களை மரு. தமிழ்வாணன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.
தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பாளராக கடமையேற்ற மரு. தமிழ்வாணன் , தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலும் பாதிக்கப்பட்ட மக்களை இனம்கண்டு உடனடி சிகிச்சை அளித்து அப்பகுதியில் நோய்கள் மேலும் பரவாமல் பாதுகாப்பதிலும் முழுவீச்சுடன் செயற்பட்டார். இவ்வாறனதொரு செயற்திட்டத்துடன் 10 -07 -2007 அன்று காலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு மரு. தமிழ்வாணன் தனது குழுவுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளையில், A9 சாலையில் மாங்குளம் அருகே சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் அணியினர் மருத்துவ வாகனத்தின் மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார. அவருடன் பயணித்த தமிழீழ போர் உதவிப்படை வீரர்கள் இராமலிங்கம், திவாதரன் , மருத்துவ போராளிகள் முரசொலி , சங்கீதன் ஆகியோரும் வீரச்சாவடைந்தனர்.
போர் உதவிப் படைவீரர் பெரியண்ணன் இராமலிங்கம் அவர்கள் நீண்ட காலமாக தன்னலம் கருதாது தமிழீழ சுகாதார சேவையில் பணியாற்றியவர் ஆவார். எமது தேசியத் தலைவர் மீதும் போராளிகள் மீதும் எமது மக்கள் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட இராமலிங்கம் அவர்கள் நெருக்கடியான சூழல்களில் தள மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்ட ஒரு மனிதநேயப் பணியாளராவார்.
போர் உதவிப் படைவீரர் சிவபாதம் திவாதரன் அவர்கள் வாகன சாரதியாக கடமையாற்றினார். இரவு பகல் பாராமல், மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் களத்திலும் தளத்திலும் சிறப்பாக கடமையாற்றிய முன்னுதாரணமான செயற்பாட்டாளராக திவாதரன் / தீபன் திகழ்ந்தார்.
வீரவேங்கைகள் முரசொலி , சங்கீதன் இருவரும் அடிப்படை மருத்துவ பயிற்சிகளை பெற்றுக் கொண்டு பூநகரி களமுனையில் களமருத்துவ போராளிகளாக சிறப்புடன் கடமையாற்றினர் . மக்களுக்கான மருத்துவ முகாமில் சேவையாற்றுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக் கொண்டனர்.
இம் மாவீரர்களின் 10 ம் ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்கின்ற இந்த நாளில், இன்றைய சூழலில் தமிழீழத்தில் நிலவும் தொற்று நோய்த் தாக்கங்கள், போதைப்பொருள் பாவனைகள், இதனால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் ஆழ்ந்த கவலையளிப்பவைகளாக உள்ளன. ஆரோக்கியமான வலிமையான தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதற்காக அயராது பாடுபட்ட இம் மாவீரர்களின் கனவை நெஞ்சில் நிறுத்தி, நாம் கடமையாற்ற வேண்டியது தமிழ் மக்கள் அனைவரின் கடமையாகும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்