அடிப்படை வசதிகளின்றி மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும், எனவே வாழ்வதற்கு அவசியமான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கச்சக்கொடி சுவாமி மலைக் கிராம மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசாவிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியிலுள்ள கச்சக்கொடி சுவாமி மலைக் கிராம மக்களை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது குறித்த கிராம மக்களது குறைநிறைகளை அவர் கேட்டறிந்து கொண்டதுடன், இந்த நிலையிலேயே மக்கள் இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதன்போது அந்த மக்கள் தெரிவிக்கையில்,
1990ஆம் அண்டு காலத்தில் 300 குடும்பங்கள் வாழ்ந்த எமது கிராமத்தில் யுத்ததினால் இடம்பெயர்ந்து பலரும் பல திசைகளுக்கும் சென்றுள்ளனர்.
தற்போது 63 குடும்பங்களுடன் வாழ்ந்து வரும் எமது கிராமத்தில் குடிநீர் வசதிகளில்லை, முறையான வீதிப்போக்குவரத்துக்கள் இல்லை.
ஈயாக்காலி வீதி, மற்றும் வங்களாவடி வீதி ஆகியவற்றுக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்படவில்லை, கிராமத்தைச் சூழ அடர்ந்த காடுகள் உள்ளதனால் தினமும் காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும், அதிகரித்த வண்ணமுள்ளன.
எனவே மிகவிரைவில் எமது கிராமத்தில் காணப்படும் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என அந்த கிராம மக்கள் மேற்படி மாகாணசபை உறுப்பினரிடம் கோரிக்கை முன் வைத்தனர்.
இதற்கு பதிலளித்த மாகாணசபை உறுப்பினர்,
கொக்கட்டிச் சோலை பிரதேசசபையுடன் தொடர்பு கொண்டு இக்கிராமத்தின் பிராதான வீதியைச் செப்பனிடுமாறு பணித்ததின் பேரில் வீதிப் புனரமைப்புக்கள் விரைவில் நடைபெறும்.
மின்சாரம் இல்லாத இரண்டு வீதிகளுக்கும் உரிய மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு களுவாஞ்சிகுடி பிரதே மின்சாரசபை அத்தியட்சகருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் விரைவில் அதனை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும் இந்த கிராம மக்களின் எனைய கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க நடிவடக்கை எடுப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மக்களிடம் இதன்போது உறுதியளித்தார்.