சீனா வழங்கிய கூடாரங்களை வைத்து, யாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவ முகாமை அமைக்கும் பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றியே இராணுவ முகாம் அமைக்கு பணி தீவிரமாக நடக்கின்றன என்று தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பாலித வீரசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கோட்டை தொல்பொருள் சின்னமாக இருக்கின்றது. தமிழர்களின் போரியல் வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்ததாக யாழ்ப்பாணக் கோட்டை அமைந்துள்ளது. நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் கோட்டை மறுசீரமைப்புச் செய்யப்பட்டது.
கோட்டையின் பாதுகாப்புப் பணிக்காக தகரக் கொட்டகை அமைத்து 10 இராணுவத்தினர் தங்கியிருந்தனர். தற்போது கோட்டைக்குள் அதிகளவான இராணுவத்தினரை நிரந்தரமாக தங்க வைக்கும் வகையில், புதிய இராணுவ முகாம் அமைக்கும் பணியில் கடந்த சில நாள்களாக இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகரில் உள்ள சிறிய முகாம்களை மூடுவதற்கு, கோட்டையினுள் தமக்கு காணி வழங்கவேண்டும் என்று இராணுவத்தினர் கோரிக்கை முன்வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கைக்கு மாவட்டச் செயலகம் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை. தற்போது கோட்டையில் இராணுவம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொல்பொருள் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டையில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு தமது அனுமதி வழங்கப்படவில்லை என்று தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் உறுதியாகத் தெரிவித்தார்.
அத்துமீறிச் செயற்படும் இராணுவத்தினருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை.