தமிழீழம், வடக்கு கிழக்கில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநி களான தாய்மார்களுக்கு, அங்கு வைத்து சிங்களப் பிரதிநிதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு மாவட்டங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 5 பெண்கள் மனித உரிமைகள் அமர்வில் கலந்து கொண்டு வாக்கு மூலம் அளிப்பதற்காக அண்மையில் ஜெனிவாவுக்குச் சென்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தெரிவித்ததாவது:
அங்கு, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இரண்டாவது அமர்வுக்காக அழைக்கப்பட்டோம். இதன்போது, சுதந்திரமான முறையில் கருத்துக்களை தெரிவிக்கவிடாது சிங்களப் பிரதிநிதிகள் எம்மை அச்சுறுத்தினர்.
‘‘இலங்கைப் போரில் யாரும் காணாமல் போகவில்லை. இவர்கள் (நாங்கள்) சொல்வதுபோல் தடுப்பு நிலையங்கள் இலங்கையில் இல்லை. நாங்கள் சகோதரத்துடன்தான் பழகுகின்றோம். அதற்கு உதாரணமாக விசுவமடு இடம்பெற்ற இராணுவ அதிகாரியின் பிரியாவிடை வைப்பவத்தை குறிப்பிட லாம். போர் இடம்பெற்ற காலத்தில் இருதரப்புக்கும் இழப்புகள் ஏற்பட்டன.
இங்கு வந்துள்ளவர்கள் புலிகளின் ஆட்கள். அவர்கள் பொய் சொல்கின்றனர்’’ என்று அதிகாரிகளுக்கு சிங்களப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதன்போது நாம், ‘போர் நிறைவடைந்த பின்னர் இலங்கை இராணுவத்திடம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே என்றுதான் நாம் கேட்கின்றோம்’ எனத் தெரிவித்தோம்.
அங்கு நிகழ்வை ஏற்பாடு செய் தவர்களால் சனல்-4 காட்சி காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு இருந்த பிரதிநிதிகளுடன் வாய்தர்க்கம் ஏற்பட்டது. சிங்கள பிரதிநிதிகள் எங்களை அடிப்பது போன்று நெருங்கி வந்தனர். ஆனால் அங்கிருந்தவர்கள் அவர்களை நெருங்க விடவில்லை. பொலிஸார் அழைக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது ‘நீங்கள் அங்கு (இலங்கை) வந்து இருப்பதை பார்த்துக்கொள்கின்றோம்’ என்று எங்களை மிரட்டிச் சென்றனர்.
இந்தப் பதற்றத்தால் அங்கு எங்களுடன் வந்தவர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவருக்கு குறித்த மண்டபத்தில் 2 மணித்தியாலயங்கள் சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் அருகில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. அதனால் அந்த அமர்வு இடையிலேயே நிறுத்தப்பட் டது– -என்றனர்.
இதேவேளை, மனிதவுரிமைப் பேரவை அமர்வில் வாக்குமூலம் அளித்த இலங்கைத் தாய்மார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆவன செய்யும்படி ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் தலைவரிடம் நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.