எடித்தாராவை ” எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல.பழமையும் – பெருமையும் – செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான்.
எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு.விநியோகங்களும் , போக்குவரத்திற்கும் , வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது.
இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு. லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது மக்களினதும் பாவனையிலிருந்து தடைசெய்யப்பட்டது.
‘ கடல் கண்காணிப்பு வலையம் ‘ என்ற பெயரில் தமிழீழக் கடல் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் கண்காணிப்பு வலையத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் , தமிழக் கடலில் நிரந்தரமாகச் சில கப்பல்கள் நங்கூரமிட்டன. இவை தாய்க்கபல்கள் அல்லது கட்டளைக் கப்பல்கள் என அழைக்கப்பட்டன. சாதாரண சரக்குக் கப்பல்களைக் கடற் கண்காணிப்புக்கு ஏற்றபடி சிறு மாற்றங்களை செய்து , சில சாதனங்களையும் பொருத்தி அவற்றைக் கட்டளைக்கப்பல்களாக சிங்கள அரசு மாற்றியுள்ளது. றேடார் சாதனங்களும் , சிறுரக பீரங்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்களின் பணி , கடலில் தமிழர்களின் படகுகள் எவையாவது தென்படுகின்றனவா என்பதை வேவு பார்ப்பதும் அப்படித் தென்பட்டால் அந்தச் செய்தியை கடற்படையின் அதிவேக விசைப்படகுகளுக்கு அறிவித்து குறித்த படகுகளை முழ்கடிப்பதுமாகும்.
இவ்விதம் இக்கட்டளைக் கப்பல்கள் தமிழீழக்கடலில் நங்கூரமிட்டபின் , கடலில் பயணம் போன நூறுக்கும் மேற்ப்பட்ட விடுதலைப்புலிவீரர்கள் கடலிலே வீரச்சாவடைந்தனர். 14.04.1985 அன்று விடுதலைப்புலிகள் இயக்கம் கடலிலே தனது முதலாவது இழப்பைச் சந்தித்தது. அதில் 14 விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர். அத்துடன் பல நூற்றுக்கணக்கான மீனவர்களும் , பிரயாணம் செய்த மக்களும் கடலிலே பலியானார்கள். இந்த இழப்புக்களுக்கெல்லாம் யாழ் குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கட்டளைக் கப்பல்களே மூலகாரணியாகும். ” அபித்தா ” – ” எடித்தாரா ” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று காங்கேசன்துறைக்கும் – பருத்தித்துறைக்கும் இடையில் உள்ள கடலில் நிறுத்தப்பட்டிருக்கும். மற்றையது வெற்றிலைக்கேணிக்க்கு நேரே நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரண்டு கப்பல்களையும் அப்புறப்படுத்தாவிட்டால் தொடர்ந்தும் விடுதலைப்புலிவீரர்களை இழக்க நேரிடும் என்பதுடன் , போராட்டப் பணிகளும் பெருத்த சிரமங்களையும் தடைகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும்.
ஆனால் , விடுதலைப்புலிகள் இயக்கத்திடமிருக்கும் சிறிய படகுகளின் உதவியுடன் இக்கட்டளைக் கப்பல்களை அடித்து விரட்ட முடியாது. எனவேதான் கரும்புலித் தாக்குதல்கள் மூலம் அந்த , ” கடல் திமிங்கிலங்களை ” அகற்ற விடுதலைப்புலிகள் தீர்மானித்தனர்.
10.07.1990 அன்று , வடமராட்சிக் கடலில் நங்கூரமிட்டிருந்த ” எடித்தாரா ” என்ற பெயருடைய கட்டளைக் கப்பல் மீது , ஒரு கரும்புலித்தாக்குதல் நடாத்தப்பட்டது.
இத்தாக்குதலில் மேஜர் காந்தரூபன் , கப்டன் வினோத் , கப்டன் கொலின்ஸ் ஆகிய கடற்கரும்புலிகள் சிங்களத்தின் கட்டளைக்கப்பலில் பெருடியாக அலை மீது ஏறி காவியமாகினர்.
கரும்புலி மேஜர் காந்தரூபன்
” காந்தரூபன் அறிவிச் சோலைக்கு ” வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்.
1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில் , எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது , காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால் , அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டான்.
இருந்தபோதும் – சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென , மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
1988ம் – 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.
காந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும் – சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர் , வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை , காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது.
தலைவரின் துணைவியார் , ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.
அந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.
ஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு , காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.
” அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ… ” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. ” அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர். ” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா , அம்மா இல்லாம , சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம , படிக்க வசதி இல்லாமல் , எவ்வளவோ ஏக்கங்களோடையும் – துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை , நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை…. ” ” நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து , அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து – அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின் தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது. அவ்வாறான இல்ல மொன்றை ஆரம்பித்து – காந்தரூபனின் நினைவாக , அதனை ” காந்தரூபன் அறிவுச்சோலை ” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார் – ” அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம் , கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு , பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக , சோர்ந்துபோய் வந்தார”
” வீட்டுக்குள்ள வந்தவர் – ‘ எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் ‘ என்று சொல்லிப் போட்டு அழுதார். யோகராசா அண்ணரும் , மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் ( காந்தர்ரூபன் ) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின் , அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் …. ” காந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். ” இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு , சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து , கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். ” சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி , எழுதக் கற்றுக் கொடுப்பாள் . ‘ அ ‘ எழுதி , ‘ ஆ ‘ எழுதி ‘ இ ‘ எழுதும் போது , ” இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை ” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். ” அப்படிப்பட்டவன் , பிறகு இயக்கத்திற்குப் போய் கோக்ஞ்சக்காலத்தில திரும்பி வரேக்க பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. ” பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.
” கப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ” ‘ தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ ‘ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.
‘ நான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா ‘ என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே ?…. என்று ஆலோசனை சொன்னேன். ‘ …. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்… ‘ என்றான் .
” சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா ” என்று நான் சொல்ல – அவன் திரும்பிச் சொன்னான் –
‘ சுகமாய் போவேன் பெரியம்மா ….. அதில பிரசினையில்ல ….. ஆனா ….. திரும்பி வாறதென்கிறது தான் ….. சரிபார்ப்பம் …. என்றான்.
அதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.
அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ….
” அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு ” : கடற்கரும்புலி கப்டன் வினோத்தின் அப்பா.
அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம்.
” இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம். ” என்று , ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம்.
” அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்பான் ” என்று கொஞ்சச்சனம் ஊரை விட்டுக் கிளம்பி விட்டினம். நல்லாய் இருண்டதுக்குப் பிறகு ஊர்ச்சனங்கள் கொஞ்சம் கப்பல் அடிக்கிறதைப் பார்ப்பதென்று கடற்கரைக்குப் போனார்கள் , நாங்களும் போனம். கடலில் இருந்து கூப்பிடு தூரம்தான் எங்கள் வீடு. ” முகபாவத்தில் கவலையும் மகிழ்வும் மாறி மாறி வெளிப்பட , அந்த அக்கா சொல்லிக்கொண்டிருந்தா.
” அம்மாவும் அப்பாவும் கரைக்கு வரேல்லை , அவை வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர். கரையில் நாங்கள் போய் பார்த்துக் கொண்டு நின்றம். படகுகள் வெளிக்கிட்டுப் போனது. நாங்கள் கொஞ்சம் தூரத்தில் நிண்டனாங்கள் – இருள் வேறு. ஆட்களை அடையாளம் தெரியேலை… படகுகள் வெளிக்கிட்டன. கொஞ்ச நேரத்தில் இருளுக்குள் மறந்து போய்விட்டது. இருளைப் போலவே மெளனமும் நிலவியது.
நாங்கள் இருளுக்கால கடலைப் பார்த்துக் கொண்டு நின்றம்.
தீடிரென பெரிய வெளிட்சமாய் நெருப்புச்சுவாலை கடலுக்குள் எரிய , நிலம் நடுங்கிற மாதிரி ஒரு வெடிச்சத்தம் கடலுக்குள் இருந்து வந்தது. எங்களை அறியாமலேயே கண்ணால கண்ணீர் வந்தது. மெதுவான குரலில் அம்மா… ஐயோ… என்ற சத்தங்கள் எல்லோர் வாயிலிருந்தும் உதிர்த்தன.
‘ யாரார் பொடியள் போச்சுதுகளோ ‘ என்று நாங்கள் சொல்லி கவலைப்பட்டோம்.
ஒரு கனம் நிறுத்தி அக்கா தொடர்ந்து சொன்னாள்.
” அடுத்த நாள் நேவி அடிப்பானென்று சனம் எல்லாம் வெளிக்கிட்டதால் நாங்களும் கொஞ்சம் தூரத்தில இருக்கிற சொந்தக்காரற்ற வீட்டுக்குப் போயிற்று , இரண்டு நாள்ள நிலைமையைப் பார்த்திட்டுத் திரும்புவம் என்று இரவிரவாய்ப் போனம். போறவழியில ” காம்ப் ” ஒன்றுக்கு முன்னால , எங்கட தம்பி ஓடித் திரிகிற மோட்டார் சைக்கிள் நின்றது.
அம்மா சொன்னா , ” உங்க தம்பி நிற்பான் போல கிடக்கு… ஒருக்கா கேட்டுப்பார் ” என்று. தொடர்ந்து அம்மா கதைக்கத் தொடங்கினாள்….
நாங்கள் கூப்பிடக் கூப்பிட ஆள்மாறி ஆள்மாறி வந்து எட்டிப் பார்த்திட்டுப் போறினமே தவிர வெளியால ஒருத்தருமே வரேல்லை.
” வினோத்தின்ர அம்மாவடா…. வினோத்தின்ர அம்மாவடா…. ” என்று மாறி மாறிச் சொல்லிக் கேட்கிறது…. இருளுக்குள் ஒன்றும் தெரியவுமில்லை. ஏன் இவர்கள் ஒளியிறார்கள் என்று எனக்குள்ள நினைத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு , ஒருத்தர் பதுங்கிப் பதுங்கி வெளியில் வந்தார்…..
” வினோத் நிற்கிறானா தம்பி…? ”
” இல்லை…. அம்மா…. நீங்கள் எங்க நிற்பீர்கள் என்று சொல்லுங்கோ… நாங்கள் அவரை வரச் சொல்லிவிடுறம்… ”
” அந்தா அவரின்ற மோட்டார் சைக்கிள் நிக்கிறது… பொய் சொள்ளதேங்க்கடா , எங்க போட்டான்..? ”
” அது சரியாச் சொல்லேலாதம்மா… நீங்கள் நிற்கிற இடத்தைச் சொல்லிப் போட்டுப் போங்கோ , காலையில் அனுப்பிவிடுறம்… ”
‘ என்னடா இவன் , கேட்கிரதுக்கெல்லாம் ஒரு மாதிரியா மறுமொழி சொல்லுறான்…? என்ன கேட்டாலும் நாங்கள் நிக்கிற வீடு எது என்று கேட்கிறான் ? ‘ என்று எனக்குள்ள நினைத்துக்கொண்டு , நாங்கள் போற வீட்டுப் பாதையைச் சொல்லிப் போட்டுப் போனோம்.
சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு அம்மா ஆறுதலாகத் தொடர்ந்தாள்.
” அடுத்த நாள்தான் மோனை தெரிஞ்சிது , எங்கட பொடியும் போட்டானேன்று. நிக்கிற வீடு எதென்று அந்தப் பெடியன் திரும்பத் திரும்பக் கேட்டது ஏன் என்று , அப்பத்தான் விளங்கியது. ”
வினோத்தின் அப்பா சொன்னார்….
” குண்டுச்சத்தம் கடலுக்குள் பெரிதாகக் கேட்க்கக் கேட்க்க , வீட்டு வாசலில நான் குந்தியிருந்தனான் …. யாரார் பெற்ற பிள்ளைகளோ என்று எனக்குள்ள நினைத்தேன் ; ஆனால் அடுத்த நாள்த்தான் தம்பி தெரிஞ்சது , அதில நான் பெற்ற குஞ்சுவும் ஒன்று என்று . ”
கடற்கரும்புலி கப்டன் வினோத்
நீங்காத நினைவுகள் …..
1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில் , வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான்.
மேலேயிருந்து – ” சயனைட் ” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத்.
வினோத்தின் அக்கா சொல்கிறாள் ….
” அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘ கானு ‘ களுக்குள்ள ( கொள்கலன் ) என்னவோ கொண்டு வந்து , வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான்.
‘ என்னடா இது ‘ என்று கேட்டால் , ‘ அதுக்குள்ளே தண்ணீர் அக்கா… ‘ என்றுவிட்டு போயிடுவான்.
அவன் போனதுக்குப் பிறகு தூக்கிப் பார்த்தா , அது தண்ணீர் இல்லை – இறுக்கமாக , பாரமாகக் கணக்கும் …. எங்களுக்கும் அது என்னென்று தெரியவில்லை. ”
யாரும் எதிர்பாராத ஓர் அதிகாலைப் பொழுதில் – திடீரென வீட்டிற்குள் நூலைந்த இந்தியர்களிடம் , வினோத் சர்ந்தப்பவசமாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு , அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
வினோத்தின் அப்பா சொல்கிறார் ….
” அவனொரு பயங்கரச் சுழியனடா தம்பி…. அவனை இந்தியன் புடிச்சுக் கொண்டு போய காம்பில் வைத்திருக்கேக்க ஒரு நாள்…. வீட்டு விராந்தையில் கிடந்த வாங்கில படுத்திருந்தான் – தற்செயலா லேனைப்பார்த்தேன் , சுவரோட சேர்த்துப் பூட்டியிருக்கிற லைற்றின்ர கோப்பைக்கு மேலால , சாதுவா , கறுப்பா என்னவோ தெரிஞ்சுது. கதிரையைக் கொண்டுபோய் வைத்திட்டு ஏறி எடுத்தனடா மோனை – அது ஒரு கிறனைட். அப்படியே நிண்டு எட்டிப் பாத்தன் , பக்கத்த பக்கத்தை இருக்குற நாலு லைற்றுக்கையும் கிறனைட் வைத்திட்டு போயிருக்கிறான்.
இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி – அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்த வினோத்தின் அப்பா தன பிள்ளை பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
” இந்தியனிடம் பிடிபட்டு காங்கேசன்துறை காம்பில இருக்கேக்க – நாங்கள் அவனைப் பார்க்கப் போறனாங்கள். அங்கபோற நேரமெல்லாம் , வீட்டில தான் வைத்துவிட்டுப்போன சாமான்களைப் பற்றித்தான் தம்பி சொல்லுவான்…. எங்களைப் பற்றி இல்லை. அதுகளைப் பத்திரமா எடுத்துப் பெடியளிட்டை குடுத்து விடோணும் என்கிறதிலதான் அவன்ர கவனமெல்லாம் இருக்கும். ”
இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது , ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டான்.
‘ தமிபி வந்திட்டான் ‘ என எல்லோரும் மகிழ்ட்சியடைந்திருந்த போது , 22ம் நாள் வினோத் திரும்பவும் காணாமல் போய்விட்டான். அதன் பின் அவன் இடைக்கிடை வீட்டுக்கு வந்து போவான்.
திரும்பவும் சிங்களப் படையினருடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களே நகர்ந்திருந்தன….
ஒரு நாள் வினோத் வீட்டிற்கு வந்தான்.
வரிப்புலிச் சீருடையில் , ” மிலிற்றறி ” சப்பாத்துப் போட்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் , மறுகையில் புகைப்படக் கருவி ஒன்றையும் கொண்டு வந்தான். வீடில் எல்லோருடனும் சேர்ந்து படம் எடுத்தான். அக்காமாரைக் கட்டிப்பிடித்தபடி…. அக்காமாரின் குழந்தைகளைத் தோளில் வைத்தபடி … ஆச்சியோடு நின்று… எல்லாவிதமாகவும் படமெடுத்தான்.
” என்னடா புதினமாக இன்றைக்கு எல்லோரையும் படம் எடுக்கிறாய்…? ” அக்கா கேட்டாள்.
” ஒன்றுமில்லை அக்கா …. நானொரு வேலையாகத் தூர இடத்திற்குப் போறான்… திரும்பி வரமாட்டன்… ” சிரித்துக்கொண்டு சொன்னான்.
அண்ணனின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு ,
” உன்ர சித்தப்பா இனி வரமாட்டான்…. இறுக்கிக் கொஞ்சிவிடு…. என்று சொல்லிக் கொஞ்சினான். ”
‘… எங்களுக்கு அது அப்போது அவ்வளவு விளங்கேல்லை..’
வல்வெட்டித்துறையில் கடற்கரையோரமாக அவர்களுடைய வீடு இருந்தது. அங்கு பீரங்கிக் கப்பல்களின் தொடர்சியான தாக்குதல்கள் நிகழும். இதன் காரணமாக , கொடிகாமம் சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்மாவையும் , அப்பாவையும் வினோத் சென்று பார்த்தான்.
கட்டி அனைத்துக் கொண்டு படம் எடுத்த்தான்.
அம்மா கேட்டபோது – அக்காவுக்குச் சொன்ன அதே காரணத்தை இங்கேயும் சொன்னான். அவர்களாலும் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை.
” நேவி அடிக்கிறான்னேன்று அலைந்து திரியாதீங்கள் அம்மா…. ஊரிலே போய் இருங்கோ…. ஒரு நாளைக்கு…. எங்களின் கடல் எங்களிடம் வரும் ” என்று சொல்லிவிட்டுப் போனான்.
அதன் பிறகு ஒரு நாள் கூடத் தங்களுடைய செல்வத்தை அவர்கள் காணவில்லை. இனிமேல் காணவுமாட்டார்கள்.
இப்போதும் வினோத்தின் அம்மா அவனைத் துயரத்தோடு நினைவு கூறுகிறார்.
” சின்னவனாய் இருக்கேக்க , என்னை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அண்ணை , அக்காமார் எல்லோரும் கலியாணம் செய்து போனதுக்குப் பிறகு , அம்மாவையும் அப்பாவையும் நான்தான் பார்ப்பன் …… என்று சொல்லுவானடா தம்பி. ”
கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்
” நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது ” : கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்.
அவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் ” நறுவிலிக்குளம் ” என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலியாய் இருப்பது , இதற்க்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால் இவன் எங்கே…?
இவர்களுக்கே தெரியும் , இவன் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும் – காற்றிலும் இன்று கந்து வாழ்கிறான் என்பது. எனவேதான் இவனது தாய் தன துயரைத் துடைக்க பேரக் குழந்தைக்கு ( மூத்த மகளின் மகனுக்கு ) ” கொலின்ஸ் ” என்று பெயரிட்டு அழைக்கிறாள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும் , துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக்கிடைத்த போது உணர முடிந்தது.
அந்தச் சூழலில் அவனது வயோதிபத் தந்தை கூறினார்….
” இவன் தம்பி , வலு கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். அவன் படித்துக் கொண்டிருந்த வேளை எங்கள் ஊரிலையும் சிங்கள ஆமிக்காரங்கள் சுத்தி வளைத்து கனபேரை பிடித்துக் கொண்டு போனாங்கள்.
அதனால் நாங்கள் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தம். இது இவனுக்கு சரியான கவலை. அவன் தம்பி , ” ஆமியின்ர கையில பிடிபட்டு சாவதைவிட ஒரு ஆமிக்காரனைத் தானும் சுட்டுட்டு சாகலாம் ” என்று சொல்லுவான்.
” இவன் வெளிநாடு செல்ல விரும்ப இல்லை , சொன்னபடி இயக்கத்தில்தான் சேர்ந்தான் ” – இது அங்கிருந்த தாயாரின் வார்த்தை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்தத் தந்தையாய் கூறத்தொடங்கினார்.
” தம்பி இவன் விடுமுறை முடிந்து செல்வதற்கு முதல் நாள் தாயப் பார்த்து , அம்மா …. நான் இயக்க வேலையாக ஒரு இடத்திற்கு போக இருக்கிறன். இது முக்கியமான வேளை , இந்த வேலையின் உழைப்பு வீட்டிற்கு வராது – அது நாட்டிற்கு மட்டும்தான் ” என்று சொன்னான். – நாங்கள் அப்போது அதனை பெருதாக கருதவில்லை. ”
ஆனால் கொலின்ஸ் அம்முறை ஊருக்கு வந்தபோது அவனுக்கு தனது சாவு…. அதன் திகதி கூடத் தெரிந்திருந்தது. வந்தவன் தான் படித்த பாடசாலை , பழகிய இடங்கள் எங்கும் சென்றான். கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தான்.
அவனோடு படித்த கூடித்திரிந்த நண்பன் இவனைப்பற்றிச் சொல்லும்போது ….
” அண்ணை நாங்கள் ஒரு நாள் பொழுதுபடுகிற நேரம் சந்தி மதவடியில் கதைத்துக் கொண்டு நன்றனாங்கள். அப்ப கொலின்ஸ் எங்களைக் கண்டிட்டு வந்து மதவடியில இருந்து எங்களோட கதைத்துக் கொண்டிருந்தான். ” நாட்டுக்காகச் சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது ” என்ற கொலின்சின் வார்த்தை இப்பதான் எனக்கு விளங்குது….. என்றான்.
இந்த 21 வயது இளைஞன் – கரும்புலி கொலின்ஸ் – தன சாவினால் இனத்திற்குச் சாதித்தது என்ன என்பதை சரியாக உணர வேண்டின் அவன் தன்னைத் தானே தற்கொடையாக்கிய 10.07.1990 க்கு சற்று முன்னைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அங்கு வடமராட்சியைச் சார்ந்த பகுதியில் தன்கூரிய பார்வையைச் செலுத்தியபடி எதிரியின் பாரிய கப்பல் ஒன்று நிலைகொண்டு நிற்கிறது. அதன் ஆதிக்கக் கண்ணோட்டம் எங்கும் செல்லும். அது கடற்படைப் படகுகளுக்கு வேவு பார்க்கும் – தகவல் கொடுக்கும். ‘ எமது படகுகளை , படகோட்டிகளை , ஊர்மனைகளை அழிக்கவும் அடக்கவும் அது உதவிகள் செய்யும். இதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் வடபகுதிக் கடற்கரைக்கு வருவோம்.
அங்கு….
” பொடியல் கரும்புலியாகிக் கப்பலை அடிக்கப் போறாங்களாம் ” என கதை பரவுகிறது.
கரையில் வரிப்புலிச் சீருடைகளுக்கு நடுவில் கரியநிற சீருடை தரித்த மூவர். அச்சீருடையுடன் நின்றவர்களில் கொலின்ஸ் ஒருவன். கடலலை இந்த மூன்று கரும்புலிகளின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றது.
அக் கரிய இருளில் கையசைத்து கூடியிருந்தவர்களிடமிருந்து விடை பெறுவது தெரிகிறது.
படகு புறப்பட்டு……. பின் மறைகிறது.
கண்கள் கடலை ஊடுருவுகின்றன.
சிறிது நேரத்தில் கடலில் பெரிய ஒளிப்பிளம்பு….
அதோடு வெடியோசை ….
அந்த உப்புக்காற்று அவர்களை அனைத்துக் கொண்டது.