சர்வதேச அன்னையர் தினமாகிய இன்றைய நாளில் தனது பெற்ற தாயைத் தொலைத்து மூன்று முதியவர்களின் அரவணைப்பில் வாழும் இரண்டு விசேட தேவையுடைய சிறுவர்களின் அவல நிலை சித்தாண்டி பிரதேசத்தில் ஒரு வரலாறாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி -3 நல்லையா வீதியிலுள்ள கந்தப்பன் நவமணி (வயது 66) எனும் மூதாட்டியின் கவனிப்பில் யோகராசா தயாழினி (வயது 18), யோகராசா விஸ்வரூபன் (வயது 12) எனும் இரண்டு விசேட தேவையுடைய வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த இரண்டு சிறுவர்களும் பிறந்ததில் இருந்து தற்பொழுவரை படுத்த படுக்கையிலே தங்களின் வாழ்க்கையை 18 வருடமாக வாழ்கின்றார்கள்.
இது குறித்து விசேட தேவையுடைய இரு சிறுவர்களின் அம்மம்மாவான நவமணி தெரிவிக்கையில்,
பிறந்த நாளில் இருந்து தற்பொழுது வரை 18 மற்றும் 12 வயதுடைய இரண்டுபேரையும் எனது பிள்ளைகள் போல் பார்த்து வருகின்றேன்.
இருவரும் எழும்பி நடக்கமுடியாது, பேச முடியாது, சாப்பிட மாட்டார்கள், பெட்டிப்பால் மட்டும் குடிப்பார்கள், படுத்த படுக்கைதான்.
இவர்களின் தாய், தந்தை இருவரும் மறு திருமணம் ஆளுக்கொரு பக்கம் சென்று கலியாணம் முடித்துவிட்டார்கள்.
இரு பிள்ளைகளையும் எனது வயது போன கணவர் சாமித்தம்பி வேலாயுதம் (வயது 75), கந்தப்பன் சித்திரம் (வயது 70) ஆகிய வயது சென்ற முதியவர்களான மூவரும் தான் வைத்து இயன்றளவுக்கு பார்த்து கவனித்துவருகின்றோம்.
இவர்களுக்கு பால்மா வாங்குவதற்கு கூட காசு இல்லாத காரணத்தினால் வாராந்த சந்தைகளுக்கு சென்று மரக்கறி வாங்கி விற்று அதில் கிடைக்கும் ஒரு சிறியதொரு காசை வைத்து பால்மா பெட்டி வாங்கி கொடுத்தும் எங்கள் 5 பேரின் அன்றட உணவுக்கான செலவையும் சமாளித்து வருகின்றோம்.
சித்தாண்டியில் வறுமையாக பலர் வாழ்ந்தாலும் அதிலும் வறுமையிலும் வறுமையான இந்த ஐந்து ஜீவன்களும் வாழ்கின்றோம் என அடிக்கடி நினைக்கின்றேன்.
அடிக்கடி முச்சக்கர வண்டி பிடித்து வைத்தியசாலைக்கு போவதற்குகூட பணமில்லாத நிலையில் பல நாட்களாக இருந்திருக்கின்றோம்.
தாயைச் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல்லும் மந்திரம் இல்லை எனும் பாடல் ஞாபகத்துக்கு வருகின்றது.
அது மாதிரி இவர்கள் இருவருக்கும் தாயும் தகப்பனும் நாங்கள் தான். நாங்களும் வயதுபோனவர்கள், இறுதி காலத்தில் இந்த இரு சிறுவர்களின் நிலைமையை யோசித்தால் பெரும் கவலையாகவுள்ளது.
இன்று தாயார்களுடைய தினமென அறிகின்றோம், ஆனால் பெற்ற தாயையும் தகப்பனையும் பல ஆண்டுகளாக தொலைத்து விட்டு இரண்டு பேரப்பிள்ளைகளும் என்னிடம் தான் வாழ்கின்றது.
எனது கவணவருக்கும் சீனி வருத்தம் தற்பொழுவரை வைத்தியசாலையில் தான் படுத்தபடுக்கையாக இருக்கின்றார். இவ்வாறு அல்லல்படும் சமூகமாக வாழ்கின்றோம்.
எனது இரண்டு மக்களுக்கும் பால்பெட்டி கூட வாங்க காசு இல்லை, இருந்துபோட்டு கடையில கடனுக்குத்தான் வாங்கிவந்து கொடுப்பன். மாதத்துக்கு 7 பால்மாபெட்டி வேணும் அதனால் பெரும் கஸ்டத்தில் தான் வாழ்கின்றோம்.
ஒருவருக்கு பால்மா தண்ணீர்தான் வேணும், 18 வயது பெண் பிள்ளை மதிய நேரம் மாத்திரம் ஒரு பிடி சோறு அதுதவிர அவளுக்கும் பால்மா தண்ணீர்தான் வேணும். எங்களின் குடும்பத்தின் நிலையினை அறிந்து வாசம் உதவும் உறவுகள் அமைப்பு ஒருசிறிய உதவிகள் செய்தார்கள்.
எனது குழந்தைகள் இரண்டு பேரும் போசாக்கு குறைபாடு காரணமாகவும், அடிக்கடி வலிப்பு வருத்தம் ஏற்படுவதால் மிகவும் மோசமான நிலையில் உள்ளார்கள்.
உதவி செய்ய நினைக்கும் உறவுகள் எனது பிள்ளைகளுக்கு நாளாந்தம் குடிக்க பால் கொடுப்பதற்கு ஒரு பசுவும் கன்றும் வளர்ப்புக்கு பெற்றுத்தந்தால் மிகவும் பெரும் உதவியாக இருக்கும்.
எனது பிள்ளை 18 வயது குமரி, ஆனால் பிறந்ததில் இருந்து தற்பொழுதுவரை ஒரு குழந்தையாகவே நிலத்தில் படுத்தபடுக்கையில் கிடக்கின்றாள்.
இன்று ஏனையவர்கள் மாதிரி ஆரோக்கியமாக இருந்திருந்தால் அவளும் எவ்வளவோ சாதனைகளை புரிந்திருப்பாள் என மன ஆதங்கத்துடன் நவமணி தெரிவித்தார்.
இன்றைய அன்னையர் தினத்தில் தனது தாயையும் தகப்பனையும் பேற்றும் தனது பிள்ளைகளையும் போற்றும் குடும்பம் இருந்தும் எங்கள் 5 பேரின் வாழ்க்கையொரு போராட்டமாகத்தான் அமைந்துள்ளது.