வடதமிழீழம், பிரதேச சபைகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகள் அனைத்தும் இராணுவப் புலனாய்வாளர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டு எழுப்பப்படுகின்றது. நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்று நடைபெற்றபோது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
‘‘சபை அமர்வில் யார் யார் என்னென்ன பிரேரணைகள் கொண்டு வருகின்றார்கள்? யார் என்ன பேசவுள்ளனர்? என்பதை சபை அமர்வுக்கு முன்னதாக இராணுவப் புலனாய்வாளர்கள் அறிந்துகொள்கின்றனர்’’ என்று நேற்றைய அமர்வில் பேசிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச சபை அமர்வு நேற்று சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது சபைக்குள் இராணுவப் புலனாய்வாளர்களின் ஊடுருவல் ஏற்பட்டிருப்பது சபை உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாகியுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டது.
‘‘தன்னை இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தொலைபேசியில் அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் நாளைய அமர்வில் இராணுவக் காணியை திரும்பப் பெறவேண்டும் என்ற பிரேரணையை தவிசாளர் கொண்டுவரப்போகின்றாராமே! ஏன் திரும்பப் திரும்பக் கொண்டு வருகின்றார்? என்று கேட்டார். நீரும் அதற்குப் பின்னணியா? என்றார்.’’ இவ்வாறு உறுப்பினர் சிவலோகநாதன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இப்படியான சம்பங்கள் இடம்பெற்றால் அவை தொடர்பில் தீவிர நடவடிக்கை எடுப்பது என்று இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.