உண்மைதான்
நான் எப்பொழுதும் மறுபரிசீலனை செய்கிறேன்
எண்ணற்ற மூலைகளில் பேச விழைகிறேன்
நாம் முன்கூட்டியே மங்கலாகி விடுகிறோம்
கடிகாரங்கள் உருகும்வரை
வாழ்க்கையென்றும் கனவுகளென்றும்
பேசிக்கொண்டிருக்கிறோம்
அதனால் நான் பேச விழைகிறேன்
பேனா முனையின் கூர்மை கொண்டு
தகரக்கூரையில் மழையைப் பொழிகிறேன்
சில மூச்சுத் திணறல்களை மறக்கமுடிவதில்லை
சில துயரத் தோல்விகளை ஏற்கமுடிவதில்லை
வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது
வீழ்ந்த உடல்களுடன் ஒப்பிடும்போது
சில வடுக்களின் எடை அவசியமாகிறது
இது ஓர் நினைவூட்டல்
நச்சரிக்கும் விழிப்புணர்வு
இதை நாம் விட்டுவிட முடியாது
கதவு வெளியே
காலன் வெளியேறும்வரை
இதை நாம் விட்டுவிட முடியாது
வீரர்கள் பேர் சொன்ன
ஓர் நிலத்தின் கதை
இன்று வீணாகிப் போகின்றது
பாதுகாப்பு அரண்களும்
மண்ணின் சரணாலயங்களும்
இன்று காணாமல் போகின்றன
அடக்குமுறை
முட்கம்பி அரசியல்
வெற்றுக் களஞ்சியம்
இவற்றின்மீது
வீண் விவாதங்கள் நடக்கின்றன
சுதந்திரம் என்பது கண்டுபிடிப்பல்ல
சுதந்திரம் என்பது பந்தயமல்ல
அது எம்முடைய நிலம்
நம் வலிசுமந்த சுயம்
அதை மீட்பது ஒன்றே சாத்தியம்
மண்ணின் இடிபாட்டுக்குள்
மனிதச்சாம்பல் நிரம்பியுள்ளது
தோலைக் கிழித்த பின்பு
வெற்றுக் கால்கள் தொங்குகின்றன
கனவுகள் வேண்டாமென்று
கண்கள் விழித்திருக்கின்றன
கனத்த இதயத்தை வெளிப்படுத்த
வார்த்தைமீது வார்த்தை வைத்து
ஆத்துமாக்கள் கெடுகின்றன
யுத்தம் அளித்த வரம்
அகதிகளாய் பறக்கின்றன
இத்தனை காலம் மின்னிய நட்சத்திரங்கள்
சூரியனைவிட்டு விலகுகின்றன
வெள்ளைக் காகிதம் கூவியழைத்தும்
விரல்களுக்கிடையில் நெளியும் பேனா
பேச மறுக்கின்றது
கனமான இடைநிறுத்தம்
தலையில் ஓர் ஈரப்பதம்
மேல்நோக்கிப் பார்க்கும் சமாதானம்
புதிய வானங்கள் பூமியில் உருவாக
திரைச்சீலைகள் மூடப்படுகின்றன
நாம் போராடவில்லை
எங்கள் வானில் குண்டுகள் விழவில்லை
இழப்பை நாம் வெளிப்படையாய் உணரவில்லை
அவர்கள் வளர்த்த அனைத்தும் அழிந்தன
அவர்களைச் சுற்றிய மரணம்
இரத்தத்தை எலும்பிற்குத் தூண்டியது
வாழ்வதற்கு நீண்ட நேரம் இருக்கவில்லை
மனிதர்கள் இறந்துவிட்டார்கள்
மேலே பறிகொடுத்த நட்சத்திரம்
கீழே தூங்க மறுக்கும் கற்கள்
வானத்தில் கொந்தளிக்கும் உயிர்
கண்களில் அடங்கமறுக்கும் கனவு
உதவியற்ற கைகள்
காதைத் துளைக்கும் அலறல்கள்
நினைவுகள் மெதுவாகக் கரைய
போர் மூழ்கிய மண்ணில்
மன்னிப்பு ஒலிகள் கேட்கின்றன
சிலர் பழங்கதை பேச
சிலர் புனிதப் புகையில் காணாமல் போக
வீடுகளை விண்மீன்கள் நிரப்ப
தேசமெங்கும் மனிதச் சிலைகள்
உள்ளே எரிந்து
சருமத்தின் வழியே வெப்பத்தை உணர்ந்து
சிலைகள் மீண்டும் உயிர் பெறவேண்டும்
உறங்க மனசின்றி
ஆன்மீகச் சடலங்கள் காத்திருக்கின்றன
– சௌந்தரி கணேசன்