பொன்னாலை நீர்விநியோகத் திட்டத்தில் மினி முகாம் அமைத்துள்ள கடற்படையினரின் மின் விநியோகத்திற்கான கட்டணம் வலி.மேற்கு பிரதேச சபையால் செலுத்தப்படுவதை அன்று தொடக்கம் இன்றுவரை பதவியில் இருந்த 9 செயலாளர்களும் ஒரு தவிசாளரும் அறிந்திருந்தும் அதைத் தடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என, சபையில் உறுப்பினர் ந.பொன்ராசா கேள்வி எழுப்பினார்.
ஒரு ரூபாவுக்குக்கூட கணக்குப் பார்க்கவேண்டிய நிதிக் கட்டமைப்பைக் கொண்டுள்ள பிரதேச சபை நிர்வாகம் 2003 ஆம் ஆண்டில் இருந்து கடற்படைக்கு எவ்வாறு பல லட்சம் ரூபாவை மின்கட்டணமாகச் செலுத்தியிருக்கின்றது என்றும் அவர் கேட்டார்.
இதுவரை கடற்படைக்கு செலுத்தப்பட்ட மின் கட்டணத்தை மீள அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
வலி.மேற்கு பிரதேச சபையின் 5 ஆவது கூட்டம் நேற்று 10 ஆம் திகதி தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோதே இக்கேள்வி எழுப்பப்பட்டது.
பொன்னாலை நீர் விநியோகத் திட்டத்திற்கு 2003 ஆம் ஆண்டு தொடக்கம் மின்சார விநியோகம் நடைபெற்றது. அன்று தொடக்கம் இன்றுவரை கடற்படையினர் தண்ணீர் எடுப்பதற்கும் தமது மினி முகாம் பாவனைக்குமான மின்சாரக் கட்டணமாக எனது கணிப்பீட்டின்படி ஆகக்குறைந்தது 07 லட்சம் ரூபா வரையிலான பணத்தை பிரதேச சபை செலுத்தியிருக்கின்றது.
2003 ஆம் ஆண்டில் இருந்து செயலாளர்களாக திருமதி ஜே.சோமராஜ், திருமதி பு.சிவலிங்கம், ஈ.ராஜதுரை, எஸ்.குமாரசாமி, கே.பாலசுப்பிரமணியம், எஸ்.புத்திசிகாமணி, திருமதி சா.உருத்திரசாம்பவசிவன், ஜி.சண்முகலிங்கம், எஸ்.சந்திரமௌலி ஆகியோரும் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திருமதி நாகரஞ்சினி ஐங்கரனும் பணியாற்றியுள்ளனர்.
எனினும், கடற்படைக்கான மின்சார விநியோகத்தை தடுத்து நிறுத்து இவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய நீர் விநியோக தாங்கிக்கு தினமும் 10 ஆயிரம் லீற்றர் தண்ணீர் ஏற்றுவதற்கு மாதாந்தம் 850 ரூபாவுக்குள் மின் கட்டணம் வருகின்றது.
கடற்படையினர் வசம் இருக்கும் பழைய நீர் விநியோகத் திட்டத்தில் உள்ள தாங்கிக்கு தினமும் 15 ஆயிரம் லீற்றர் தண்ணீரை ஏற்றுவதற்கு மாதாந்தம் 7 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின்சாரக் கட்டமாக செலுத்தப்படுகின்றது. இந்த வேறுபாட்டை செயலாளர்கள் ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த தற்போதைய செயலாளர் எஸ்.சந்திரமௌலி, தான் 2017 ஜீலை முதலாம் திகதியே புதிதாகப் பதவியேற்றதாகவும் கடற்படைக்கு எவ்வாறு மின்சார விநியோகம் நடைபெறுகின்றது என்பதை தன்னால் அறிய முடியவில்லை எனவும் கூறினார். முன்னர் இருந்த செயலாளர்கள் தொடர்பாக தன்னால் பதிலளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, கருத்துக் கூறிய தவிசாளர் த.நடனேந்திரன், கடந்த கூட்டத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, புதிதாக மின் இணைப்பைப் பெறுமாறு கடற்படைக்கு தான் கடிதம் அனுப்பியுள்ளார் எனவும் கூறினார்.
கடற்படை புதிய இணைப்பைப் பெற்று இரு மாதங்களின் பின்னர் பிரதேச சபைக்கு வருகின்ற மின் கட்டணத்தையும் கடற்படையினரின் மின் கட்டணத்தையும் ஒப்பீடு செய்து இதுவரை கடற்படைக்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளரும் செயலாளரும் தெரிவித்தனர்.