காஸா முனையில் இருந்தவாறு தாக்குதல் நடத்தும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
காஸா முனையின் மேற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது.
எகிப்து நாட்டின் சமரச திட்டத்தை ஏற்று இஸ்ரேல் அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக காஸா பகுதியில் இயங்கிவரும் ஹமாஸ் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஃபவ்ஸி பர்ஹோம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த தகவலை உறுதிப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகள் மறுத்துள்ளனர். இனி நடைபெறும் சம்பவங்கள் மற்றும் களநிலவரங்களின் அடிப்படையில்தான் இந்த போர்நிறுத்தம் விவகாரத்தில் இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை தீர்மானிக்க முடியும் என அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டார்.