வடதமிழீழம், 2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பா எங்கே? இவ்வாறு 9வயதுச் சிறுமி உருக்கமாகக் கோரிக்கை விட்டார். இதன்போது அமர்விலிருந்த பலரும் கண்ணீர் விட்டழுதனர்.
கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தினரின் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பங்கேற்றே மேற்படி சிறுமி தனது தந்தை எங்கே என்று கேள்வி எழுப்பினார்.
2009ஆம் ஆண்டு போரின் இறுதியில், அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் நூற்றுக்கணக்கான போராளிகள் உள்படப் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். இவர்களை இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் இராணுவத்தினர் ஏற்றிச் சென்றிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திரைப்படப் பிரிவில் கடமையாற்றிய திலக் என்பவரும் சரணடைந்திருந்தார். அவரது ஒன்பது வயது மகளே மிக உருக்கமாக தனது அப்பாவைத் தேடித்தாருமாறும் தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் கோரியிருந்தார்.
இதன் போது மண்டபத்தில் இருந்த கிராம அலுவலர்கள் உள்படப் பலர் கண்ணீர்விட்டு அழுதனர்.
இந்தச் சிறுமி 2009ஆம் ஆண்டு பதுங்குழிக்குள் பிறந்தாள் என்றும் தனது அப்பாவின் முகத்தை இதுவரை காணாதவர் என்றும் சிறுமியின் அம்மம்மா குறிப்பிட்டார்.