வடக்கில் ஆவா குழுவினர் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர் என்று பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வடக்கில் ஆவா குழு ஒரு பயங்கரவாத குழுவல்ல என்றும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களே இந்தக் குழுவில் உள்ளனர். இவர்களில் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் தென் இந்தியத் திரைப்படங்களை பார்த்து, அதில் உள்ளவாறு செயற்பட்டுள்ளனர். இவர்கள் எந்தவொரு படுகொலையையும் செய்யவில்லை என்றும் தாக்குதல்களை மாத்திரமே மேற்கொண்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதாள உலக கோஷ்டியினருக்கு தற்போதைய அரசாங்கம் ஆதரவு அளிக்கவில்லை எனவும் இவ்வாறானவர்களுக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் கடந்த அரசாங்கமே ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.