வட தமிழீழம்,முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி கடந்த வருடம் பங்குனி மாதம் 8 ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரமமைத்து ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று (18) 500 ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் இறுதி யுத்தம் முடிவடைந்து சிறிலங்கா இராணுவத்தின் கையில் ஒப்படைத்த தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி பெற்றுத்தருமாறும் கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை பத்துமணிக்கு ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மாவட்ட செயலகத்துக்கு சிறிலங்கா காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு மேலதிக பொலிசாரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்
இன்று மாலை 2 மணிவரை போராட்டம் இடம்பெறவுள்ளதோடு தொடர் போராட்டத்தை இன்றுடன் நிறுத்தி மாதாந்தம் ஒருநாள் சர்வதேசத்தூடாக தமக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டப்போவதாக உறவுகள் அறிவித்துள்ளனர்
இன்றைய போராட்டத்தில் உறவுகளுடன் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளென பலரும் கலந்துகொண்டனர்
மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் தமிழர் தாயக மாவட்டங்களில் போராட்டங்கள் நடாத்திவருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.