சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில், இதுவரை காலமும் நடைபெற்ற சண்டைகளில், யாழ் குடாநாட்டைக் கைப்பற்ற அரசாங்கம் நடத்திய “முன்னோக்கிப் பாய்தல்” இராணுவ நடவடிக்கை பல்வேறு காரணங்களினால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய இராணுவம் குடாநாட்டின் மீது நடத்திய “பவான்” இராணுவ நடவடிக்கையை விட இது அழிப்பிலும், ஆக்ரோஷத்திலும் குறைவாகவும், சிறிலங்காவின் “ஒப்பரேஷன் லிபரேஷனை” விடப் பாரியதாகவும் இருந்துள்ளது. “பவான்” நடவடிக்கையில் உலங்க்குவானுர்த்திகளால், ஏவப்பட்ட எறிகணைகளாலும், பீரங்கித் தாக்குதல்களாலும், முன்னேறிய படையினராலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் கொல்லப்பட்ட, 6000 – 8000கும் இடைப்பட்ட பொதுமக்களில், “பவான்” நடவடிக்கையின் போதே பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் தரைப்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டது எல்லாக் கொலைகளுக்கும் சிகரமாய் அமைந்தது. “முன்னோக்கிப் பாய்தல்” நடவடிக்கையில், ஷெல் வீச்சுக்களினாலும் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு நிமிடத்துக்கு ஒரு ஷெல்லாவது விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. நவாலி சென்பீற்றர் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொலைச் செயல்களுக்கு மகுடம் வைத்தது போல் இருந்தது. இந்திய அரசாங்கத்தின் பூரண ஆசியுடனேயே இக்கொலைகளும் நடத்தப்பட்டன என்பது முக்கிய விடயமாக உள்ளது. இவ் இராணுவ நடவடிக்கையின் போது 247 பொதுமக்கள் கொல்லப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் 470 பேர் படுகாயம் அடைந்து உடல் உறுப்புக்களை இழந்தார்கள். கொல்லப்பட்டவர்களில், 65 பேர் குழந்தைகளாக உள்ளனர். இறந்து, காயமடைந்தவர்களில் அரைவாசிக்கு மேல் பெண்களும், வயது முதிர்ந்தோர்களும் ஆவார். தேவாலயம் மீதான தாக்குதலில் மட்டும் 120 பொதுமக்கள் இறந்தனர். அங்கு இறந்த 20 சிறார்களில் 13 பேர் கைக்குழந்தைகளாகவும் உள்ளனர்.
யாழ். குடாநாட்டில் சிறிலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பலாலியிலிருந்து அச்சுவேலி, சங்கானை, சண்டிலிப்பாய், அளவெட்டிக்கூடாக ஒரு பெரும் அணியும், மாதகலிலிருந்து இன்னொரு பேரணி, கரையோரமாக காரைநகருக்கூடாகவும், ஊர்காவற்துறையிலிருந்து அராலிக்கூடாகவும் இன்னொரு அணியும் வந்து வட்டுக்கோட்டை, துணாவி ஆகிய இடங்களில் சந்திப்பதே முதற்கட்ட நடவடிக்கையாகும். பின்னர் அராலியிலிருந்து, அனைத்து அணிகளும் கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளிக்கூடாக யாழ். நகரை நோக்கி வந்து அதனைக் கைப்பற்றுவதாக இராணுவ திட்டம் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 09ம் திகதி காலை “முன்னோக்கிப் பாய்தல்” என்ற குறியீட்டுப் பெயருடன், 4 பிரிகேட் படைப் பிரிவுகளைக் கொண்டதான 10000க்கு மேற்ப்பட்ட இராணுவத்தின் இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகியது. அப்போதே இப்போர் நடவடிக்கையின் தோல்வியைத் தேசியத் தலைவர் பிரபாகரன் தீர்மானித்து விட்டதாகக் கருதுகிறேன். பின்னர், எப்படி, எங்கு, எந்த நேரத்தில் இராணுவத் தோல்வியை முற்றுப் பெறச்செய்ய வேண்டும் என்ற அம்சங்களை தலைவர் தீர்மானிப்பதும், அதனை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துவதுமே எஞ்சி இருந்தன.
முதலில், இராணுவ நடவடிக்கை தமிழ் இனப்பிரச்சினையோடு மட்டும் தொடர்புடையதாக இருக்கவில்லை. கொழும்பில் உள்ளூர் அரசியலோடும் நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. தென்பகுதியில் போர் ஆயத்தங்களின் விளைவாக ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள், வேலை நிறுத்தங்கள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலும் ஜனாதிபதிப் பதவியை அகற்றப் போவதாக தேர்தல் காலத்தில் பகிரங்கமாக கூறிய போதிலும், சகல வல்லமை பொருந்திய அப் பதவியை விட்டுவிட ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு மனம் ஒப்பவில்லை. ஜூலை 15ம் திகதிக்குள் அதனைச் செய்வதான காலக்கெடு நெருங்கிவந்து கொண்டிருந்தது. எனவே இப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பவும், இராணுவ வெற்றி ஒன்றுடன் ஏனைய பிரச்சினைகளைச் சமாளித்து தனது அரசியல் நிலையைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஜனாதிபதி சந்திரிக்கா விரும்பினார். எனவே தான் உக்ரேனிலிருந்து வருவதாக இருந்த AN – 32 துருப்புக்காகவும் விமானங்கள் போன்ற இராணுவத் தளபாடங்கள் முழுமையாகா வந்திறங்கும் முன்னரே இராணுவ நடவடிக்கையைத் தொடங்க அரசாங்கம் விரும்பியது. எனவே தான் “இந்தியா டுடே”க்கு அளித்த பெட்டியில் சந்திரிக்கா கூறியிருந்தது போன்று, “ஏராளமான உயிரிழப்புக்கள் ஏற்படும். அப் பகுதியே துடைத்தழிக்கப்படும்” என்று தெரிந்தும் இராணுவ நடவடிக்கையை அவர் அவசரப்படுத்தித் தொடங்கினார். இத்தகையதொரு இராணுவ நடவடிக்கை குடாநாட்டின் மீது ஆரம்பமாகப் போவது. மேற்கூறிய உள்ளூர் அரசியல் நோக்குக் காரணமாக ஏற்கனவே வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. எந்தத் திகதி என்பது தான் தெரியாது இருந்தது. எனவே இதனை எதிர்கொள்ள புதிய போராளிகள் ஏராளமானோரைச் சேர்த்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தையும், சர்ந்தர்ப்பத்தையும் விடுதலைப் புலிகளுக்குக் கொடுத்தது. மேலும் மண்டைதீவு மீதான முன் எச்சரிக்கையான தாக்குதல், அரசாங்கத்தின் இராணுவ தந்திரோபாயத்தில் பெரும் ஒரு அடியாகவும், ஓட்டையாகவும் அமைந்தது. (மண்டைதீவு தாக்குதல் தொடர்பான கட்டுரையை நோக்கவும் விரைவில் தேசக்காற்றில் இணைக்கப்படும்) எனவே, இராணுவம் பலாலியிலிருந்து பெரும் படை நகர்வை, கிடுக்கி போன்ற வடிவமைப்பில் (pincermovemenr) நடத்த வேண்டியிருந்தது. மண்டைதீவில் இருந்தோ ஏனைய முகாம்களில் இருந்தோ ஒரே நேரத்தில் புறப்படும் கடந்த கால நடவடிக்கை, இம் முறை கைக்கொள்ளப்படாது, பலாலியிலிருந்து பெரும்படை நகர்வை திட்டமிட்ட ரீதியில் வழிநடத்துவது என்ற நோக்கத்தின் பாற்பட்டதாக இருக்கலாம். இங்கு தான் இப்படை எடுப்பின் தோல்விக்கான பலவீனம் இருந்தது. அப்பலவீனத்தை தேசியத் தலைவர் மிக நுட்பமகா, அவகாசமாக பயன்படுத்திக் கொண்டதே, போர் நடவடிக்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அது சிறீலங்காவின் “முன்னோக்கிப் பாய்தல்” என்ற தாக்குதல் நடவடிக்கை, விடுதலைப் புலிகளின் “புலிப்பாய்ச்சல்” என்ற தாக்குதல் நடவடிக்கைக்கு வழிவகுத்தது
போர் நடவடிக்கையில் விநியோகம் என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மரபு ரீதியான போர்முறையில் இதன் பங்கு இன்னும் அதிகமானது. படை எடுக்கும் இராணுவப் பேரணி, எவ்வளவு நீளமாக்கப்படுகின்றதோ, எவ்வளவு பரவலாக்கப்படுகின்றதோ அவ்வளவத்துக்கு விநியோகம் என்பது சிக்கலடைகிறது. புதிய துருப்புக்கள், புதிய ஆயுத தளபாடங்கள், வெடிபொருட்கள், உணவு வகைகள் ஆகியவை தொடர்ந்து சண்டைக்களத்துக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருத்தல் வேண்டும். அல்லது படையணிகளில் சீர்குலைவு ஏற்பட்டு விடும். சிறீலங்காவை பொறுத்தவரை, கடற்புலிகளின் செயற்பாட்டால், மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டே விநியோகங்கள் ஓரிருமுறை குடாநாட்டு முகாம்களுக்கு வழங்கப்பட்டன. (Avro) அவ்ரோ விமானங்கள் வீழ்ந்ததன் காரணமாக விமானப் போக்குவரத்துக்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தன. தரைவழிப் போக்குவரத்து முற்றாக இல்லை. எனவே ஓர் அளவில் தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட விநியோகங்கள், படையணிகள் கடக்கிற தூரம், காலம் என்பதைப் பொறுத்து குறையத் தொடங்குகின்றன. இப்படியான ஒரு நிலையே சிறீலங்கா இராணுவத்துக்கு 14ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அதாவது நடவடிக்கை தொடங்கி 6ம் நாள் ஏற்பட்டிருந்தது. இச் சர்ந்தப்பத்தையும், பொருத்தமான இடத்தையும் தக்கியதில்தான் பிரபாகரனின் போர்த்தந்திரம் அடங்கியுள்ளது. தாக்கிய இடங்கள், இராணுவப் பேரணியின் கட்டளை, விநியோக மையமாக மாற்றப்பட்டு, தற்காலிக முகாம்களாக அமைந்திருந்த அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளாகும். இதில் அடிப்பது தலையிலும், வயிற்றிலும் அடிப்பதைப் போன்றது. இதன் போது 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், 4 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 17 கனரக கவசவாகனங்கள் இராணுவ விநியோகங்களோடு புலிகளால் கைப்பற்றப்பட்டன. அங்கிருந்த இராணுவ விநோயோகங்கள் அனைத்தையும் புலிகள் எடுத்துச் சென்றுவிட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார். மிகவும் தேவையான நேரத்தில் தமது விநியோகங்களை இழப்பது மட்டுமல்ல, எதிரிக்குக் கொடுப்பதும் இரண்டு தரம் தற்கொலை செய்வதற்கு ஒப்பானது. புலிகளின் இத்தாக்குதலோடு, முதுகெலும்பு முறிந்து நகர முடியாத நிலை அரச படைகளுக்கு ஏற்பட்டுவிட்டது. இதன் பிறகு பின்னோக்கிப் பாய்தலைத் தவிர வேறுவழி இருக்கவில்லை. முன்னோக்கி மேலும் நகர முடியாத நிலைமைக்கு அன்றையதினம் புக்காரா குண்டுவீச்சு விமானம் விடுதலைப்புலிகளால் வீழ்த்தப்பட்டதும் முக்கிய காரணம். வழமையாக மரபு இராணுவங்கள் செய்வது போன்றே, முன்னேற உள்ள பகுதிகள் மீது இடைவிடாத எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, சிறீலங்கா இராணுவ அணிகளும் முதல் 6 நாட்கள் முன்னேறின. அரசாங்கம் திட்டமிட்டவாறு, 3 இராணுவ அணிகளும் வட்டுக்கோட்டைப் பகுதியில் சந்தித்துக் கொண்டன. இனிமேல், யாழ்நகர் மீது தாக்குதல் நடத்துவது குறித்த ஆயுதங்களைச் செய்துகொண்டிருக்கும் போதே திருப்புமுனையான, சண்டையின் திசையே முற்றாகத் திரும்பிவிடும்படியான விடுதலைப்புலிகள் தாக்குதல் இடம்பெற்றது. உணவு தளபாட விநியோகம், புதிய துருப்புக்களை பொருத்தமான இடங்களில் இறக்குதல், காயப்பட்டோரை அப்புறப்படுத்தல், இராணுவ அதிகாரிகளின் போக்குவரத்து ஆகியவற்றிற்கு விமானங்களை, உலங்குவானூர்திகளை பயன்படுத்த முடியாத நிலை, புக்காராவின் வீழ்ச்சியுடன் ஏற்பட்டது. புக்காரா வீழ்ந்ததன் பின்னர், குடாநாட்டு காலப்பகுதிகளில் எவ்வித விமானங்களும் பறக்காதது குறிப்பிடத்தக்கது.
ஒரு சண்டையின் வெற்றிக்கு, எதிர்பாராத திடீர்தாக்குதல் கணிசமான பங்கை வகிக்கிறது. முதற்கட்ட நடவடிக்கை பெரும் இழப்புக்களின்றி முடிவுற்ற திருப்தியில் இராணுவம் இருந்தது. இராணுவ அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் யாழ்ப்பாண நகரைப் பிடிக்கும் கனவுகளில் மிதந்தனர். “விடுவிக்கப்பட்ட” பகுதிகளுக்கு எண்ணை, மின்சாரம், உணவுப்பொருட்களை, புனர்வாழ்வு அமைச்சரை அனுப்பி அவர் மூலமே விநியோகிக்க அரசாங்கம் முடிவெடுத்தது. புலிகள் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளில் உணவுப் பொருட்களைக் கொண்டுபோய் வைத்தால், சனங்கள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து, அவர்களை மீறிக்கொண்டு உணவுக்காக இராணுவப் பகுதிகளுக்கு ஓடிவருவார்கள் என்ற கருத்தும் அப்போது சந்திரிக்கா அம்மையாரால் வைக்கப்பட்டது. புலிகள் எல்லோரும் ஓடிப்போய் அகதி முகாம்களில் இருப்பதாகவும் ஒரு கதை பரப்பப்பட்டது. பிரபாகரன் வெள்ளைக் கொடியைத் தூக்கிக் கொண்டு அரசாங்கத்தின் காலில் விழுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வாறு பலூன் போன்று பூரித்த இராணுவத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. பலாலியில் இருந்து புறப்பட்ட பிரதான அணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் கரையோரமாக உள் நுழைந்த அணிமீதும், ஊர்காவற்துறையிலிருந்து அராலிக்கூடாக உள் நுழைந்த இராணுவ அணிமீதும் “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கை என்ற பேரில் பிரபாகரனின் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இச் சண்டைகள் வலிகாமம் மேற்குப் பகுதியில் நடந்தன. கடுமையான எதிர்த்தாக்குதல்களைத் தாங்கமுடியாத இராணுவம் பின்வாங்கி தமது முன்னைய நிலைகளுக்குள் சென்று முடங்கிக்கொண்டது. இச் சண்டைகளின் போது 150க்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இத்துடன் சிறீலங்காவின் (முன்னோக்கிப்பாய்தல்) நடவடிக்கை தோல்வியில் முற்றுப்பெற்றது. ஆயினும் 16ம் திகதி ஞாயிறு காலை, “புலிப்பாய்ச்சல்” ன் ஒரு அம்சமாக காங்கேசன் துறைமுகத்தினுள் தரித்து நின்ற கடற்படைக் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டன.
மண்டைதீவுத் தாக்குதல், சிறீலங்கா இராணுவ நடவடிக்கைக்கு முன் எச்சரிககியாக நடத்தப்பட்டது என்று கூறினால், காங்க்கேசந்துரைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பின்வரக் கூடிய தாக்குதல்களை எச்சரிக்கையாகக் கொண்டு நடத்தப்பட்டது என்று கருதுகிறேன். கடற்புலிகள் என்ற படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 4 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த மிகப்பெரிய கடற்சண்டை இதுவென வர்ணிக்கப்படுகிறது.
இதனை கடற்புலிகள், கடற்கரும்புலிகள் அணி, சுலோஜன் நீரடி நீச்சல் அணி ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன. ராடர் பொருத்தப்பட்டு கண்காணிக்கும், கட்டுப்பாட்டுக்கும் பயன்பட்ட “எடித்தாரா” என்ற கட்டளைக் கப்பலும், இராணுவத்தினரை கடல்மார்க்கமாகத் தரையிறக்கும் பாரிய கப்பலுமே தெரிந்தெடுத்து மூழ்கடிக்கப்பட்டுள்ளன. கடற்சண்டையின்போது பல கப்பல்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சிறீலங்காவின் கடல் வழிச்செயல்பாட்டை, இனிவரும் காலங்களில் கணிசமான அளவு குறைக்கும் நோக்குடனேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக ஊகித்துக் கொள்ளலாம். அரச ஆயுதப்படைகளின் மனவுறுதி இவற்றால் தளர்ந்துள்ளதையும் அவதானிக்கலாம். இவ் இராணுவ நடவடிக்கையால், அரசாங்கம் சாதித்தது ஒன்றுமில்லை. சிறீலங்காவின் முன்னைய இனவாத தலைமைகளைப் போன்றே, இராணுவத் தீர்வை பரிசீலித்துப் பார்த்து தோல்வி கண்ட நிலையில் சந்திரிக்கா உள்ளார். அவரது அரசியல் சத்திரம் மேலும் பலவீனமடைந்துள்ளது. சமாதானத் தூதுவர் என்ற தோற்றம் அகன்று, மரண தேவதை என்ற உண்மைத் தோற்றம் வெளிப்பட்டுள்ளது. தமிழ் மக்களை புலிகளிடமிருந்து பிரித்து, அவர்களின் மனங்களை வென்று, அவர்கள் விரும்பும் தீர்வை வழங்குதல் என்ற என்ற அவரின் வார்த்தைகள் இரத்தக் குளிப்பாள் முழ்கடிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை விடுதலை செய்தல் என்பது அவர்களைப் பரலோகத்துக்கு அனுப்புதல் என்றும், அமைதி என்பது தமிழ்பகுதிகளில் மயான அமைதியைத் தோற்றுவித்தல் என்றும் அர்த்தங்களை இந்த இராணுவ நடவடிக்கை தந்துள்ளது. இராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகளிலும், அவசரகால பொதுத்தொண்டு நடவடிக்கைகளிலும், தமிழ் மக்களின் செயல்ப்பாடுகள் பூரணமாக இருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதியே தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமை, மனிதாபிமான அமைப்புக்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றின் பலத்த கண்டனத்தை சந்திரிக்கா அரசாங்கம் சம்பாதித்துக் கொண்டது. இனப்படுகொலையும், சிங்கள மேலாதிக்கமும் தான் சந்திரிக்கா அரசாங்கத்தினதும்தீர்வு என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டது.
நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் அதேவேளை, கிளர்ச்சிக்காரரையும் அவர்களது தலைவர்களையும், ஆதரவளிக்கும் பொதுமக்களையும் எவ்வளவு கொல்ல முடியுமோ அவ்வளவுக்கு கொல்ல வேண்டும். இதுவே இறுதி வெற்றிக்கு வழி என்றரீதியில் அரச இராணுவம் செயற்பட்டது. மிகப்பெரும்ippadai எடுப்பை மிகக் குறுகிய நாளில் மிகக்குறைந்த போராளிகளின் (80 போராளிகள்) இழப்புக்களுடன் முறியடித்தது, போர்க்கலை பற்றிய ஆய்வாளர்களின் ஆய்வுக்கு உட்படப் போவது உண்மை. நவீன உலகின் தலை சிறந்த கொரில்லாத் தலைவர் என்ற பெருமையும் எமது தேசியத் தலைவருக்கு இரு பெற்றுத்தரும் என்று நிச்சயம் நம்பலாம்.
“முன்னோக்குப் பாய்தல்” நடவடிக்கையின் போது, விடுதலைப் புலிகள் மரபு ரீதியான இராணுவம் போன்று செயல்படவில்லை என்று எதிரான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் தன்னளவில், மரபுரீதியான, ஒழுங்கமைந்த இராணுவமாக வளர்ச்சிபெற்று வருகின்ற போதிலும், சிங்கள இராணுவத்துடனான பாரிய சண்டைகளின் போது கெரில்லா உத்தி ரீதியிலேயே சண்டையிட வேண்டும். எப்போதுமே ஆயுதபலம், ஆட்பலம் கூடிய நிலையில் உள்ள சிறீலங்கா இராணுவத்துடன் குறைந்த ஆள், ஆயுத என்னிக்கையுடனான போராளிகள் மரபுரீதியில் மோதுதல் தற்கொலைக்கு ஒப்பாகும். இவ்வாறு சர்ந்தப்பத்துக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றும் தன்மை (flexibility) கொரில்லா இராணுவத்தின் சிறப்புத் தன்மையே தவிர குறைபாடு அல்ல. விடுதலைப் புலிகள், சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பகுதிகளை விட்டு விலகியது உத்தி ரீதியான (tactical) பின் வாங்களே தவிர, தந்திரோபாயத் திட்ட அடிப்படையிலான (strategic) நகரவே. சிலீலங்கா இராணுவப்படைகள், தமது இராணுவ நடவடிக்கையின் இலக்கை அடையமுடியாது (யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுதல்) தமது பலாலித் தளத்துக்கு பின் வாங்கியதையே நாம் தந்திரோபாயத் திட்ட அடிப்படையிலான பின்வாங்கல் என்று கூறலாம்.
நினைவுப்பகிர்வு– வளவன்.
வெளியீடு :எரிமலை இதழ் 1995