இந்த வாரம் சென்னையில் சிறுமி ஒன்று பாதுகாவலர்களாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவத்தையடுத்து, அந்த அடுக்குமாடி வளாகத்தில் குடியிருக்கும் பெண்களே பாதுகாவல் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
அந்த வளாகத்தில் வசித்துவந்த காது கேளாத, 11 வயது குழந்தை ஒன்று அங்கு இருந்த பாதுகாவலர்கள், பணியாளர்கள், மின்தூக்கி இயக்குவோர் உள்ளிட்டோரால் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் இந்த வாரத் துவக்கத்தில் வெளியில் வந்தது.
உடனடியாக பணியிலிருந்த பாதுகாவலர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, பெண்களே வாசலைக் காக்கும் வேலையைத் துவங்கினர். இப்போது நான்காவது நாளாக இந்த பாதுகாவல் பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
அங்கு வசிக்கும் ஆண்கள், அவ்வப்போது உதவிக்கு வந்தாலும் பெரும்பாலும் பெண்களே அனைவரையும் விசாரித்து உள்ளே அனுப்புகின்றனர்.
“காவலர்களான நாங்கள் கூட உள்ளே போவதில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் மட்டும் உள்ளே சென்று விசாரணை நடத்திவருகிறார்கள்” என்கிறார் வாயிலில் உள்ள துணை – ஆய்வாளர் ஒருவர்.
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு ஆறுதல் தெரிவிக்கவந்த அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதனும் வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டார்.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்தபோதும் பாதுகாவல் பணியில் இருந்த பெண்கள், அவரிடம் நிலைமையை விளக்கி இப்போது உள்ளே வர வேண்டாம் என்று கூறினர்.
சுமார் 15 பெண்கள், இரவு பகலாக இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒவ்வொரு ‘ப்ளாக்’கும் 15 மாடிகளைக் கொண்டது.
சுமார் 450 வீடுகள் இங்கே இருக்கின்றன. எல்லா இடங்களிலிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக வாசலில் உள்ள பலகை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 17 பேர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
23 வயது இளைஞரிலிருந்து 66 வயது வரையிலான முதியவர் வரை இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி), 506 (மிரட்டுதல்), போக்சோ சட்டத்தின் பிரிவு 5, 10, 12, தண்டனைச் சட்டத்தின் 328 (போதை ஏற்படுத்தி சேதம் விளைவித்தல்), 341 (அடைத்துவைத்தல்), 376 ஏபி (12 வயதுக்குட்பட்ட குழந்தையை பலாத்காரம் செய்தல்), 376 டிபி (குழந்தையை குழுவாக பலாத்காரம் செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் குழந்தைகள் நலன், பாதுகாப்பு ஆகியவை சரியாக கவனிக்கப்படாத ஒரு விஷயமாகவே உள்ளது என்கிறார் சென்னையில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக இயங்கிவரும் ‘தோழமை‘ அமைப்பின் தேவநேயன்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெண்கள் பாதுகாப்பு பணியில் அதிகளவில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.