விடுதலை பெற்ற இலங்கையில் நாட்டை கட்டியெழுப்பும் சிறந்த கொள்கையுடைய, நேர்மையான, ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள் உருவாகியிருக்கவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். அதிலும் ஆட்சிக்கதிரையில் அமர்ந்த தலைவர்கள் மிகவும் கொள்கைப்பஞ்சம் உள்ளவர்களாகவும், தங்கள் ஆட்சியை அல்லது அரசியல் வாழ்க்கையை தக்கவைக்க எந்த வழியையும் முன்வைக்கும் தவறான போக்குடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதேவேளை வெற்றி பெற்ற ஒருகட்சி அல்லது கட்சிகளின் கூட்டு ஆட்சி நடாத்தும்போது மற்றைய கட்சிகள் அந்த ஆட்சியை வீழ்த்துவதிலும், அந்த ஆட்சியின் மூலம் தமிழ்மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அடித்தளங்களை இடுவதிலும் மிகவும் கவனமாக தொழிற்பட்டுக்கொண்டிருக்கும். இதனை நாம் நுட்பமாக கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆட்சியிலிருக்கும் ஓர் அரசு தேர்தலில் தோல்வியுற்று இறங்கியவுடன் அடுத்தகட்சி வந்து செய்யும் செயல்பாடுகள் மூலம் இதனை தெளிவாக கண்டுகொள்ளமுடியும். உதாரணமாக 1970 – 1977 ஆட்சியின்போது சிறிமாவோ தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தமிழர் எதிர்ப்பு செயல்பாடுகளை ஊக்குவித்த ஐக்கிய தேசிய கட்சி, 1977 ல் ஆட்சியை கைப்பற்றியதும் மிகவும் தீவிரமான தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. பொதுவாகவே சிங்கள அரசியல் கட்சிகளின் கொள்கைப்பஞ்சம் காரணமாக அவர்கள் முன்னெடுத்த/முன்னெடுக்கும் ஆயுதம் தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை. அதனை செயற்படுத்தும் கருவிகள் தனிச்சிங்களம், பௌத்தம் என்பன என்றே சொல்லமுடியும்.
பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருந்து வந்தது. இந்தநிலை இலங்கையின் விடுதலையின் பின் 1956 யூலை 6 வரை நீடித்தது. யூனியஸ் ரிச்சட் யெயவர்த்தனா அவர்கள் 1944 இல் சிங்களத்தை ஆட்சிமொழியாக மாற்றவேண்டும் என்று கேட்டிருக்கின்றார். ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பின்பு ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து, பிரிந்துவந்து, 1956 தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியமைத்த சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க என்பவரே தனிச்சிங்கள சட்டத்தை 1956 யூலை 5 இல் சபையில் நிறைவேற்றினார். 1956 யூலை 6 இல் செனட் சபையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. விடுதலையின்பின் தமிழர்களிடையே எதிர்ப்புணர்வு ஊட்டிய முக்கிய சட்டமாக இதனைக்கொள்ளமுடியும். இந்த சட்டமூலத்தை எதிர்த்து குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதிகளும் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள் என்பது உண்மையான செய்தி. இந்த சட்டமூலம் ஏற்கமுடியாதது என தமிழ் அரசியல்வாதிகளாலும் தமிழர்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சட்ட மூலத்தை உருவாக்கிய பண்டாரநாயக்க பின்னாளில் பௌத்தபிக்கு ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனவே அரசியல் தலைவர்களை துப்பாக்கியால் சுடும் கலாசாரத்தை உருவாக்கியவர்கள் இந்த பௌத்தர்கள்தான். அதிலும் புத்தபிக்குகள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்வதும், சனநாயக அரசியல் தலைவர்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்கின்றார்கள் என்பதும் எவ்வளவு நகைப்பானது என்றும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மேலும் இங்கு சொல்லப்பட்ட இரு தலைவர்களதும் பெயர்கள் முழுப்பெயர்களாக சொல்லியுள்ளேன் அதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
உண்மையான சிங்களப்பெயர்களில் ஆங்கில வருகைப்பெயர்கள் கலந்திருக்காது. அவ்வாறு ஆங்கில வருகைப்பெயர்கள் கலந்திருப்பின் அவர்கள் கிறித்தவத்தை தழுவியிருக்கவேண்டும். கிறித்தவத்தை தழுவியவர்கள் தங்களை உண்மையான சிங்கள விரும்பிகளாக காட்ட விரும்புவது நேர்மையான செயல் அல்ல. காரணம் அன்றைய நாட்களில் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் ஆங்கிலமொழியில் கல்வி கற்பதை நோக்காக கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் சிங்களமொழி நேசர்களாகவோ அல்லது பௌத்த விரும்பிகளாகவோ இருப்பார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏனென்றால் தனது மொழியையும் மதத்தையும் தீவிரமாக நேசிக்கும் ஒருவர் எப்படி இன்னொரு மதத்திற்கு மாறமுடியும். பண்டாரநாயக்காவை பொறுத்தவரையில் அவருக்கு சிங்களம் நன்கு பேசவோ எழுதவோ வரமாட்டாது என்பது யாபேரும் அறிந்த உண்மை. ஆனால் பிரித்தானியாவரை சென்று கல்விகற்று இருக்கின்றார். அங்கிருந்து வந்தே அரசியலில் இறங்கியுள்ளார் அவரின் திட்டம்தான் தனிச்சிங்கள சட்டம். ஒரு மொழி எனின் இரண்டுநாடுகள், இருமொழிகள் எனின் ஒருநாடு என்பது அன்று கொல்வின்.ஆர்.டீ.சில்வா என்பவரால் சொல்லப்பட்ட பிரதான கூற்று. தனிச்சிங்கள சட்டம் என்பது மொழியின்பால் அல்லது மக்களின்மீது கொண்ட பற்று அல்ல தான் ஆட்சியை கைப்பற்ற கண்டுபிடித்த வழி என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சிங்களத்தை விடுத்து ஆங்கிலத்தில் கற்றுத்தேறிய ஒருவர் எல்லா மொழிகளையும் மதிப்பவர் எனின் தமிழ்மொழி பேசும் மக்களையும் மதித்து இருக்கவேண்டும். அவ்வாறு தமிழ்மக்களின் மொழி உணர்வினை மதிக்காது சட்டம் இயற்றியது என்பது தன்னை ஒரு தீவிர சிங்களர் எனக்காட்ட எடுத்த முயற்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன்பின் வந்த எல்லா தலைவர்களும் இதே வழிமுறையை கையாண்டனரே தவிர நாட்டைப்பற்றியோ அதன் எதிர்காலம் பற்றியோ சிந்திக்க தலைப்படவில்லை என்பதே உண்மை.
சில அரசியல் தலைவர்கள் கொள்கை வகுத்து அந்தக்கொள்கையின் அடிப்படையில் ஆட்சியை நடைமுறைப்படுத்துவர். எந்த நிலையிலும் கொள்கையை மாற்ற விரும்பமாட்டார்கள். இலங்கையில் எந்த நிலையிலும் கொண்ட கொள்கையை மாற்றாது வாழ்ந்த ஒரு தலைவர் என்றால் அது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டும்தான் என்று சொல்லமுடியும். இது நான் சொல்லும் செய்தியோ அல்லது மிகைப்படுத்தப்பட்ட செய்தியோ அல்ல இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளாலேயே ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் சிலர் தங்கள் அரசியல் வாழ்க்கையை தடங்கலின்றி நடாத்தி செல்வதற்கும், மக்கள் செல்வாக்கை தக்கவைக்கவும், தங்கள் அரசியல் கொள்கைகளை பயன்படுத்திக்கொள்வர். இவர்கள்தான் அரசியல்வாதிகள் என்ற வகுதிக்குள் வருவர்.
இலங்கையில் விடுதலையின் முன் இருந்த நிலைவேறு. ஆனால் அந்நியர் ஆட்சியின் பின் இலங்கையின் நிலை மாறுபட்டுவிட்டது. ஒன்றுபட்ட இலங்கை என்று வந்தபோதும் தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி வடக்கு, கிழக்கு என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. விடுதலையின் பின்பு ஈழம் என்ற ஒரு நாடு பெறவேண்டும் அல்லது தமிழர்கள் பிரிந்து தனியரசு அமைத்து வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டை உருவாக்கியவர்கள் உண்மையில் சிங்கள அரசியல் தலைவர்களே தவிர தமிழ்தலைமைகளோ அல்லது தமிழர்களோ அல்ல. ஏனென்றால் விடுதலை வழங்கப்பட்ட நாளாகிய ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டு பெப்ரவரி நான்காம் திகதியில், அதன்முன் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழில் இருந்து நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்ட அடிப்படையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றகூடிய சட்டங்களுக்கு சில வரையறைகள் சொல்லப்பட்டிருந்தன. அவை:
-
எந்த ஒரு மதப் பிரிவினரதும் சமய செயற்பாட்டை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல்.
-
ஏதாவதொரு மக்கள் குழுவையோ அல்லது மதப் பிரிவையோ சேர்ந்த தனிநபர்களை,வேறு பொது மக்கள் குழுவையோ அல்லது மதங்களையோ சேர்ந்தவர்கள் கீழ்ப்படுத்தும் தடைகளுக்கு அல்லது வரையறைகளுக்கு கீழ்ப்படுத்தல்.
-
எந்த ஒரு மக்கட் குழுவையோ அல்லது மதத்தினையோ சேர்ந்த தனியாட்களுக்கு வேறு மக்கட் குழுக்களையோ அல்லது மதங்களையோ சேர்ந்த தனியாட்களுக்கு வழங்கியிராத சலுகைகளை அல்லது நன்மைகளை வழங்குதல்.
-
எந்த ஒரு மத அமைப்பினதும் அமைப்பு விதிகளை அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரிகளின் அங்கீகாரம் இல்லாமல் மாற்றுதல்.
இதனை சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு நடவடிக்கையாகவே பிரித்தானிய உருவாக்கியிருக்கும் என்று முழுமையாக நம்பமுடியும். காரணம் பிரித்தானிய காலனித்துவ நாடுகளையும், அதன் மக்களையும், அங்கு வாழும் தலைவர்களையும் நன்கு அறிந்து வைத்திருந்தவர்கள் பிரித்தானியர்கள். இலங்கையில் இந்த சட்டவரைவானது ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரண்டில் நீக்கப்பட்டது. இதன்பின்பே இலங்கை குடியரசானது. விடுதலை பெற்ற அரசுப்பாராளுமன்றினால் இந்த சட்டமூலத்தை மாற்றும் வல்லமை இதன்முன் எந்த அரசுக்கும் கிடைக்கவில்லை. இடதுசாரிகள், வலதுசாரிகள், சமவுடமைவாதிகள் என்று தங்களை சொல்லிகொண்டோரின் ஆட்சிக்காலத்தில் இந்த பாதுகாப்பு சட்டவடிவம் நீக்கப்பட்டதென்பது அரசியல் ஏமாற்றுத்தனத்தை தெளிவாக காட்டுகின்றது. இதில் “கார்ல்மார்க்’ கருத்தின் அடிப்படையில் கூறின் இவர்கள் அரசியல் தலைமைக்கு தகுதியற்றவர்கள். காரணம் தங்களைப்பற்றியோ, தாங்கள் மக்களுக்கு செய்யவேண்டிய சேவைகள் பற்றியோ விளக்கம் இல்லாதவர்கள். இந்த சட்டவாக்கத்தின்போது சிறுபான்மையினரின் பாதுகாப்பு கவனத்தில் எடுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஆனால் பண்டாரநாயக்கவின் மனைவியான சிறிமாவோ பிரதமராக இருந்து தன் கணவனின் கருத்திலும் ஒருபடி மேலே போய் பௌத்தம் அரசமதம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. இதில் நகைப்புக்கிடமான செய்தி என்னவென்றால் தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்த கொல்வின் இங்கு சட்டநகலை உருவாக்குகின்றார்.
-பரமபுத்திரன்