ஈழத்து பாடல்கள் என்பது 1970களில் உச்சம் பெற்ற கலைமரபாக சிறப்புப் பெற்று இருந்திருக்கிறது. இலங்கை வானொலியும் பொது மேடைகளும், ஈழத்து சினிமாக்களும், நாடகங்களும் இக்கலை மரபின் விளைகளங்களாகத் திகழ்ந்திருக்கின்றன.
பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பக்கவாத்தியக்கலைஞர்கள், ஒலிப்பதிவு மற்றும், ஒலித்தொகுப்புக் கலைஞர்கள், நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள், ஒலிப்பரப்பாளர்கள், உதவியாளர்கள், ஆர்வலர்களெனஇயல்பான இயக்கமாகவே இது இயங்கிவந்திருக்கிறது. கேட்டு இரசிக்கத் தூண்டும் இசையமைப்பு, இரசித்து சிந்திக்க வைக்கும் பாடல் வரிகள், நேரகாலமறிந்து தேவையான விளக்கங்களுடன் அழகான மொழியில் அளவாகச் செய்யும் அறிவிப்புகள் என இக்காலம் சிறப்புற்று இருந்திருக்கிறது.
ஆயினும் இது சமூகத்தால் கொண்டாடப்படாத ஒரு விடயமாகப் போய்விட்டிருப்பது துயரத்திற்கும், வெட்கத்திற்கும் உரியது. இந்தக் கலைஞர்களின் ஆளுமை அறியப்படாததாகவும், ஆற்றல் மதிக்கப்படாததாகவும் போய்விட்டிருப்பது ஈழத்தமிழ்ச் சமூகங்கள் கொண்டிருக்கும் பண்பாட்டுச் சிக்கல்களுக்கு மிகச்சிறந்ததொரு உதாரணமாக இருக்கிறது.
இந்தப் பண்பாட்டுச் சிக்கல்களை அவிழ்த்து அதிலிருந்து மீண்டெழுவது ஆரோக்கியமான சமூகங்களின் உருவாக்கங்களுக்கு அடிப்படையான விடயமாகும்.
இன்றும் வணிக, விளம்பர மற்றும் நட்சத்திர மோகங்களுள்ளும், மயக்கங்களுள்ளும் திளைத்தொரு பெருஞ்சமூகம் புலத்திலும், பெயர்விடங்களிலும் வாழ்ந்திருப்பினும் உள்ளுர் ஆற்றல்கள், ஆக்கங்கள் வளம்பெறும் வகைசெய்யும் முயற்சிகளும் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் வான் நிறைத்திருக்கும் நட்சத்திரங்களாக மின்னிமிளிரத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது.
தமது முதுமைக் காலங்களிலும், ஆதரவு அங்கீகாரம் பெரிதுமற்ற நிலைமைகளிலும் ஈழத்து பாடல்கள் என்னும் இயக்கத்திற்கு உயிர்மூச்சுக் கொடுத்து வருபவர்களாக இக்கலைவல்லார்கள் வாழ்ந்து வருவது அவர்களது துறைசார் ஆர்வத்தையும், அர்பணிப்பையும் உணர்ந்து கொள்ள வைக்கின்றது.
உண்மையில் இத்தகைய இயல்பான ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் இளமையில் இனங்காணப்பட்டு அவர்களுக்குரிய பயில்களங்களில் பயிற்சிபெறும் வாய்ப்புகள் உருவாக்கப்படுவதே செயற்திறன் மிக்க அடுத்த தலைமுறைகளை உருவாக்கவல்ல அர்த்தமுள்ள வழிமுறையாக அமையும். ஆயினும் நடைமுறையில் இயங்குநிலையில் உள்ள அறிவியல் மற்றும் கலை மையங்களுள்ளும் இவற்றிற்கான சாத்தியப்பாடுகளை ஏற்படுத்துவது ஒரு இடைமாறு கால நடவடிக்கையாக முயற்சிக்கலாம். இந்த வகையிலேயே சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ஈழத்துப் பாடல்களுக்கான இசையணி அல்லது இசைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இம்முயற்சியினை நடைமுறைச் சாத்தியமாக்கும் உயிர்நிலையாக எமது நிறுவகத்தின் யூட் நிரோசன் இயங்கி வருகின்றார். கிழக்கிலங்கையில் பெயர்பெற்ற தீபம்ஸ் இசைக்குழுவின் இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் யூட் நிரோசன் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. பல இளம் ஆற்றல்களுக்கு களமமைக்கும் யூட் நிரோசனது இசைக்குழு பிரசித்தி பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்தும் இசை நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடப்படவேண்டியது.
இந்தவகையில் கலை ஆற்றலும், முகாமைத்துவ வல்லபமும் கொண்ட யூட் நிரோசன் என்னும் இளம் ஆளுமை எமது நிறுவக இசையணியின் உயிர்நிலையாக இயங்கி மிகச் சிறப்புமிக்க பல இசை ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு கால்கோளிட்டிருக்கிறார். இவருடன் எமது விரிவுரையாளர்களான க. மோகனதாசன், உமா சிறீசங்கர் ஆகிய இளம் பல்துறை கலையாளுமைகளின் பொறுப்பில் ஈழத்துப் பாடல்களின் மீளெழுச்சிக்கும், தொழில்முறை இசைக்குழு உருவாக்கத்திற்குமான இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது நிறுவக விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தினர், மாணவர்கள், ஊழியர்களின் இணைவில் நிறுவக இசையணியின் செயற்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன. அறிவிப்புகள் மும்மொழிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கான தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்படி நிறுவக – சமூக ஒன்றிணைவில் இயங்கிவரும் கையிலேயே இந்த நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தவகையில் பாடகர்களாக கலாநிதி.தெ.பிரதீபன், திருமதி.பிரியதர்ஷினி ஜெதீஸ்வரன், திருமதி. உமா ஸ்ரீசங்கர், திரு.க.மோகனதாசன், திரு.ரி.வாகீசன், திருமதி.வி.கிஸ்னவேணி,செல்வி.ம.லாவண்யா, திரு.சு.சபேசன், திரு.பி.செ.கிளிப்டன், செல்வி.கிசானிக்கா மற்றும்;அறிவிப்பாளர்களாக திரு.க.ஸஜீவன், திரு.சி.துஜான், திரு.ஆ.ஆ.முகமட் நாசிப், செல்வி.ஆ.றிவ்கா ஆகியோருடன் எமது நிறுவக வாத்தியக்கலைஞர்களாக திருகு.ஜூட் நிரோசன், கலாநிதி.தெ.பிரதீபன், திரு.தி.பகீரதன், திரு.க.மோகனதாசன் ஆகியோரும் தொடர்ந்து எமது இசைக்குழுவிற்கு நிறுவகம் சாராத வாத்தியக்கலைஞரும் ஆழுமையாளருமான திரு.பிரசன்னா அவர்களும் இணைந்து இவ்வணிக்கு வலுச்சேர்த்து வருகின்றனர்.
ஈழத்துப் பாடல்கள் கலை இயக்கத்தின் முன்னோடிகள் அழைப்பாளர்களாக இணைக்கப்பட்டு, மாண்பு செய்யப்பட்டு அவர்களது ஆற்றல்களை மதிப்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வதற்குமான செயல்மைய ஆய்வறிவுக் களமாக இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறையாகி வருகின்றது.
தொழில்முறையிலான குழுவாக உருவாக்கம் பெற்று வரும் நிறுவக இசையணியானது சமூகங்களுள் நுழைந்து, மக்களுடன் இணைந்து உள ஆற்றுப்படுத்தலுக்கான இசைச் செயற்பாடுகளை முன்னெடுக்கவல்ல நகரும் இசையணியாகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஈழத்து பாடல்களின் மீள் அறிமுகத்திற்கும், புத்தாக்கங்களுக்குமான இளந்தலைமுறை இசைக்கலை ஆளுமைகளதும், நிகழ்ச்சித்தயாரிப்பு, முகாமைத்துவம் மற்றும் பரவலாக்கம் என்பவற்றிற்கான பயில்களமாக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக இசையணி இயங்கும் வகை செய்யப்பட்டிருக்கிறது.
கலாநிதி. சி. ஜெயசங்கர்.