ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வான் தாக்குதலில் அப்பாவி மக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
உள்நாட்டுப்போர் நடந்து வரும் ஆப்கானிஸ்தானில், குண்டூஸ் நகரையொட்டிய சர்தரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் வான்தாக்குதல் நடந்தது. இந்த வான்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 14 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த தாக்குதலை நடத்தியது ஆப்கானிஸ்தான் படைகளா அல்லது அமெரிக்க படைகளா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இது குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று கூறுகையில், “இந்த வான்தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு காபூலில் இருந்து புலனாய்வு குழுவினர் சர்தராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் எத்தனை பேர் பலியாகினர் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க முடியாது” என்று குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போரில் பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்து உள்ளதாக ஐ.நா. புள்ளி விவரம் கூறுகிறது.
வான்தாக்குதல்கள் நடத்துகிறபோது அப்பாவி மக்கள் சிக்கி பலியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபை கேட்டுக்கொண்டு உள்ளது.