இந்தியாவின் ஐஎன்எஸ் டார்சாக் என்ற கிழக்கு கடற்படைக்கு சொந்தமான கப்பல், கடந்த இரண்டு மாதங்களாக இலங்கையின் வெலிகம மற்றும் தென் கரையோரப்பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்துக்கொண்டதாக தி ஹிந்து தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆய்வறிக்கையை கப்பலின் கட்டளை அதிகாரி வைஸ் கெப்டன் பேயுஸ் பாசே, இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஆர் சி விஜேகுணரட்னவிடம் கடந்த வார இறுதியில் கையளித்துள்ளார்.
இந்த ஆய்வு மூன்றுக்கட்டங்களாக கொழும்புக்கும் காலி துறைமுகத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது கப்பல் இரண்டு துறைமுகங்களுக்கும் சென்று திரும்பியது.
இந்த ஆய்வின் போது இலங்கை கடற்படையினருக்கு ஆய்வுகள் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
குறித்த இந்திய கப்பல் ஏற்கனவே மொரீசியஸ், சீசெல்ஸ், மியன்மார், தான்சானியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.