இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இணையற்ற நட்பு இருப்பதாகவும் அந்த நட்பை யாராலும் மதிப்பிட முடியாதெனவும் தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்திற்கு அவசர ஊர்தி கையளிக்கும் நிகழ்வும், 1990 சுவசெரிய அவசர ஊர்தி சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், யாழ் மாநகர சபை மைதானத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இந் நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இணைய வழியில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்த கொண்டு உரையாற்றுகையிலையே இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார நட்பு ரீதியான தொடர்பு குறித்தும் இந்திய பிரதமர் மோதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,”இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அவசர சிகிச்சையை வழங்கவதற்காக ஊர்திகளை வழங்கியதற்காக இலங்கை மக்கள் சார்பிலும் நானும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.