புலம்பெயர் மக்களின் பங்களிப்பால் கடந்த காலங்களில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவ உளவியல் சேவை மிகவும் சிறப்பான முறையில் நன்கு திட்டமிட்டு திருப்திகரமான சேவையை ஆற்றி வந்தனர்.இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வாழும் நோயாளர்களும். படுக்கையில் இருக்கும் நோயாளிகளும் , வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல ஆள் உதவி இல்லாத நோயாளிகளுக்கும் அந்த சேவையானது மிகவும் வரப்பிரசாதகமாக அமைந்திருந்தது. பல நோயாளிகள் நன்றியுணர்வுடன் திருப்திகரமாக வீட்டில் இருந்து கொண்டே தமது சிகிச்சையை மனநிறைவுடன் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது. அந்த வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் குழுவில் ஒரு வைத்தியர், ஒரு தாதி, ஒரு உடற்பயிற்சியாளர், ஒரு உளவளத்துணையாளர், மற்றும் உதவியாளர்களும் அடங்கி இருந்தனர்.
அந்த சேவைக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அது இப்போ திடீரென நிறுத்தப்பட்டதால் பல நோயாளிகள் ஏமாற்றம் அடைந்தது மட்டுமல்லாமல் மன உளைச்சலுக்குட்பட்டு செய்வதறியாது தமது மருத்துவ உளவியல் சேவையை தொடர முடியாமல் வீட்டில் இருந்து கண்ணீர் விடும் பரிதாபநிலை ஏற்ப்பட்டுள்ளது.
எனவே தயவுசெய்து அந்த சேவையுடன் சம்மந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மேல் அக்கறையுள்ள நலன் விரும்பிகள், புலம்பெயர் அமைப்புகள் இந்த விடயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த சேவை தொடர்ந்து கிடைப்பதற்கு வழி செய்யுமாறு நோயாளிகளின் நலன் விரும்பி தங்களை மிகவும் அன்பாக வேண்டுகின்றோம்.
புலம்பெயர் நாட்டு நம் தமிழ் உறவுகளிடம் ஓர் அன்பான வேண்டுகோள் நீங்கள் பிறந்ததினம் , திருமணம், பூப்புணித நீராட்டு விழா போன்ற நிகழ்வுகளை அளவுக்கு மிஞ்சி மிகவும் ஆடம்பரமாக செலவு செய்யும் போது தாயகத்தில் பாதிக்கப்பட்ட இவர்களைப்போன்ற நோயாளிகளின் தேவைகளையும் கொஞ்சம் கவணத்தில் எடுப்பது நாம் அவர்களுக்கு செய்யும் செய்நன்றி கடன் தீர்ப்பதாகும்.