தமிழர் படுகொலைகள்: நீர்த்தாங்கி அமைப்பதற்காக செம்மணியில் நிலத்தை தோண்டியபோது நேற்று முன்தினம் மனித எலும்புக் கூடு மீட்கப்பட்டிருந்தது.
இதனை நேரில் சென்று பார்வையிட்ட நீதிவான், அந்தப் பகுதியில் அகழப்பட்ட மண்ணையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
எலும்புக்கூட்டின் எச்சங்கள் சில நேற்றுமுன்தினம் மாலை கண்டறியப்பட்டது. இது தொடர்பில் சிறிலங்கா கலவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட நீதிவான் சதீஸ்கரன் சம்பவ இடத்துக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
எலும்புக்கூட்டின் சில பாகங்கள் மாத்திரம் மண்ணில் காணப்படுவதால், எஞ்சிய பாகங்கள் அகழப்பட்ட மண்ணோடு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில், அகழப்பட்ட மண்ணையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிவான் பணித்துள்ளார். சட்ட மருத்துவ அதிகாரியின் பரிசோதனையின் பின்னரே ஏனைய முடிவுகளை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரையில் எலும்புக் கூட்டுச் எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியைத் தவிர்த்து ஏனைய பகுதிகளில் பணிகளைத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 சிறிலங்கா கலவல்துறையினர் பாதுகாப்புக்கு அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.