சிங்கள ஆட்சிபீடத்தின், நன்கு திட்டமிட்ட நடவடிக்கையாக, அரங்கேற்றப்பட்ட இந்தக் கொடுமைக்கு பல்லாயிரம் தமிழர்கள் பலியாக்கப்பட்டனர்.
தமது கடுமையான உழைப்பால் தமிழர்கள் சேர்த்துவைத்த வளங்களை, செல்வங்களை, சொத்துக்களை, சிங்களக் காடையர்கள் கொள்ளையிட்டனர். தீவைத்து மகிழ்ந்தனர். தமிழ்மக்களின் பொருளாதார வளம் முற்றாக அழிக்கப்பட்டது.
சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து, தென்பகுதியில் இருந்தும், மலையகப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள், தமது தாயகம் நோக்கி அகதிகளாக விரட்டப்பட்டனர்.
எமக்கென்றோர் தாயகம் உண்டென்ற உண்மை வெளிப்பட்ட தருணம் அது. துன்பதுயரங்களுடன், உடல்காயங்களுடனும் மனக்காயங்களுடனும் வந்த தனது மக்களை, தமிழர் தாயகம், வரவேற்று மருந்திட்டது, உணவிட்டது. ஆதரவாய்த் தாங்கியது.
பல்லாயிரக்கணக்கானோர், இலங்கைத் தீவைவிட்டு, இந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் அகதிகளாக வெளியேறினர்.
வெலிக்கடைச் சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் ஐம்பத்திமூன்று பேர், சிறைச்சாலைக்குள் வைத்து இரண்டு கட்டங்களாக, மிருகத்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழ் மக்களுக்கெதிரான இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த சிங்கள அரசு, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் சுயாதீனமான நீதி விசாரணைக் கோரிக்கைகளை முற்றாக நிராகரித்தது.
மாறாக, வெலிக்கடைச் சிறையிலும், ஏனைய பகுதிகளிலும், இனப்படுகொலையை முன்னின்று நடத்திய சிங்களக் காடையர்களுக்கு, வீடுகள், வசதிகள் வழங்கி, தமிழர் தாயகப் பகுதியில் குடியேற்றியது சிங்கள அரசு.
இருபத்தெட்டு ஆண்டுகளுக்குமுன், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கறுப்பு யூலைக் கொடுமைகளை தட்டிக்கேட்க மறந்த, சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற போக்கே, இன்று பன்மடங்கு கொடூரத்தை, கொடுமையை எம்மினம் முள்ளிவாய்க்காலில் அனுபவிக்க நேர்ந்தது.
எண்பத்தி மூன்றாம் ஆண்டு, ஆடிக் கொடுமையைத் தொடர்ந்து, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் இதுபோன்ற காட்டு மிராண்டிச் செயல்கள் மீண்டும் ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
ஆனால், இன்று, முள்ளிவாய்க்காலை வெறிகொண்டு நடத்திமுடித்திருக்கும் சிங்கள இனவெறி அரசு, இந்தியாவின் யுத்தத்தையே தாம் நடத்திமுடித்திருப்பதாக உரிமையோடு பெருமை பேசுகின்றது.
கறுப்பு யூலையுடன் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை சர்சதேச சமூகம் இட்டிருந்தால், தமிழர்களுக்கு எதிரான கட்டற்ற வெறித்தனத்தை சிங்களம் முள்ளிவாய்க்கால்வரை தொடர்ந்திருக்காது.
இன்று சிங்கள அரசு, தனது திட்டத்தின் அடுத்த கட்டம் நோக்கி நகர ஆரம்பித்திருக்கின்றது. தமிழர் தாயகத்தை முற்றாக ஆக்கிரமித்து, தமிழ் இனத்தை முற்றாக, சிங்களத்துள் கரையவைக்கின்ற திட்டத்துடன் அது தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இராணுவ முற்றுகைக்குள் தமிழர் தாயகத்தை வைத்தபடி, தமிழ் மக்களின் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களில் கைவைத்துள்ளது சிங்களஅரசு. பௌத்த மதத்திணிப்பை தீவிரமாய் மேற்கொண்டுள்ளது. சிங்களக் குடியேற்றங்களைத் தாராளமாய் மேற்கொண்டுவருகின்றது.
கறுப்பு யூலைகள் மீண்டும் இடம்பெறாமலும், முள்ளிவாய்க்கால்கள் தொடராமலும், தமிழர் தாயகத்தில், தமிழினம், தன் அடையாளங்களுடன், சுதந்திரமாக வாழுகின்ற ஒரு நிலைமையை உருவாக்கின்ற ஒரு காலமாக இக்காலம் அமைய புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தீவிரமாய் உழைக்கவேண்டிய காலம் இது.
தமிழ்மக்கள் மீதான இனஅழிப்புக்கொடுமைகள், சர்வதேச சமூகத்தால், இயல்பாகத் தட்டிக் கேட்கப்படமாட்டாது என்பதும், தடுத்துநிறுத்தப்படமாட்டாது என்பதும் கசப்பான வரலாற்று உண்மையாகும்.
சர்வதேச சமூகத்தை எம்பால் திரும்பிப்பார்க்கவைப்பதும், செயற்பாடுகள் நோக்கி அதனை நகரவைப்பதும் புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள், தமிழர் அமைப்புக்களின் முழுமையான கவனமும், செயற்பாடுகளும் தாயக மக்களின் பால் திரும்பட்டும்.
ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, கறுப்பு யூலைக் கனத்த நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.