தமக்கான காணியைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு காணி பெற்றுக்கொள்வதற்கு பண உதவி செய்யுமாறு கோரி கிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்று குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள்,
“நாம் 1990ம் ஆண்டுமுதல் குறித்த காணியில் குடியிருந்து வருகின்றோம். குறித்த காணி வேறு ஒருவருடையது. காணி உரிமையாளர் இல்லாத நிலையில் விடுதலைப்புலிகள் காணியில்லாது நாதியற்று இருந்த எமக்கு மேற்படி காணியினை குடியிருக்க வழங்கியிருந்தனர். சுமார் 27 வருடங்கள் குறித்த காணியில் வாழ்ந்து வருகின்றோம்.
நீண்ட காலமாக வாழ்ந்து வரும் நாம் நிரந்தர காணியில் வாழ்கிறோம் என்ற சிந்தனையிலேயே இருக்கின்றோம். இந்நிலையில் காணி உரிமையாளர் தர சம்மதிக்காத நிலையில் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்து வருகின்றோம்.
தற்போது காணி உரிமையாளர் ஏக்கர் ஒன்றிற்கு 10 லட்சம் பெறுமதியில் எமக்கு விற்பனை செய்ய சம்மதித்துள்ளார். கால் ஏக்கர் காணியில் வாழும் எமக்கு 2லட்சத்து ஐம்பதினாயிரம் கொடுத்து பெற்றுக்கொள்ள உடனடியாக முடியாதுள்ளது.
மேலும் அரச திணைக்களங்களான சமுர்த்தி, வீடமைப்பு அதிகார சபைகளின் ஊடாக காணியை இலகு கொடுப்பனவு மூலம் அல்லது வட்டியில்லா கடன் மூலமோ பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும். அத்துடன் குறித்த காணியை பெற்றுக்கொள்ள புலம்பெயர் உறவுகள் எமக்கு உதவி செய்ய வேண்டுமென உங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றோம்” என பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர்.