வன்முறை மற்றும் அரசியல் சர்ச்சைகள் நிறைந்த தேர்தல் பிரசாரத்திற்கு பிறகு பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 27 பேர் இறந்துள்ளனர்.
வாக்குச்சாவடிக்கு மிக அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக பிபிசி உருது செய்தியாளர் முகமது காசிம் தெரிவித்தார்.
இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, இந்த குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
தெற்காசிய நாடான பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்: அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான் இந்தியாவுடன் போட்டிபோடும் நாடு; முக்கியமான வளரும் பொருளாதாரம் மற்றும் உலகின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் ஒன்று.
பாகிஸ்தானின் தேர்தலை பற்றிய முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்.
இந்த பொதுத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுவது ஏன்?
1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவானதில் இருந்து, மக்களாட்சி மற்றும் ராணுவ ஆட்சிக்கு இடையே பாகிஸ்தான் ஊசலாடியது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், தேர்தலில் முறையாக தேர்ந்தெடுக்கப்படும் அரசிடம் ஆட்சியை ஒப்படைப்பது பாகிஸ்தான் வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது என்பதும் இந்த பொதுத்தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.
மக்களில் சிலர் நாட்டின் ஜனநாயக வலிமையைக் கொண்டாடுகின்றனர். ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சிக்கும் ராணுவத்திற்கும் இடையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
- பாகிஸ்தான்: தேர்தல் களத்தில் தலித் வேட்பாளர்கள்
- பாகிஸ்தான் தேர்தல்: என்னவாகும் நவாஸ் ஷெரீஃபின் எதிர்காலம்?
நீதிமன்றத்தின் உதவியுடன் நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பான ராணுவம் தங்களை இலக்கு வைத்து செயல்படுவதாக பி.எம்.எல் கட்சி குற்றம்சாட்டுகிறது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கிட்டத்தட்ட 17,000 கட்சி உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மற்றொரு புறம், ஊடகங்கள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதோடு, கடுமையான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றன. பயங்கரவாதக் குழுக்கள் தேர்தலில் பங்கெடுப்பது பாகிஸ்தானின் சில ஜனநாயகவாதிகளுக்கு கவலையளிப்பதாக உள்ளது.
தனக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அந்நாட்டு ராணுவம், தனது பழைய அரசியல் சூழ்ச்சிகளையே தொடர்வதாக பலரும் நம்புகின்றனர். தேர்தலில் மோசடி செய்ய “மோசமான, தீவிரமான மற்றும் இடைவிடாத முயற்சிகள்” மேற்கொள்ளப்படுவதாக கூறும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம், இது “முறையான மக்களாட்சிக்கு பாகிஸ்தான் மாறுவதில் ஆபத்தான தாக்கங்களை” ஏற்படுத்தும் என்று கூறுகிறது.
இந்த மாதம் 13ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 150 பேரை பலி கொண்ட பலூசிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல் (தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது) உட்பட தேர்தல் பிரசாரங்களில் வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்றன.
களத்தில் இருக்கும் பிரபலங்கள்
நவாஸ் ஷெரீஃப் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)), 68 வயது
மூன்று முறை பிரதமராக பதவி வகித்த நவாஸ் ஷெரீஃப்பின் குடும்பத்தினருக்கு ஊழலில் தொடர்பு இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, ஷெரீஃப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டில் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டு சிறைதண்டனையும், அவரது மகள் மரியத்திற்கும் 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்தது.
லண்டனில் சிகிச்சைப் பெற்று வரும் தனது மனைவியுடன் இருந்த அவர், மகள் மரியம் நவாஸுடன் பாகிஸ்தானுக்கு திரும்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. தற்போது தந்தையும் மகளும் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ராணுவத்தை வெளிப்படையாக விமர்சித்தது மற்றும் இந்தியாவுடன் சுமூகமான உறவுகளை விரும்பியதற்காக ராணுவம் தனக்கு எதிராக செயல்படுவதாக நவாஸ் ஷெரீஃப், விமர்சிக்கிறார். ஆனால் ராணுவம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.
தற்போது கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள சாபஸ் ஷெரீஃப், நவாஸ் ஷெரீஃபின் சகோதரர். அவர்தான் தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் முன்நிறுத்தப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)க்கு தற்போது 182 தொகுதிகள் உள்ளன.
இம்ரான்கான் (பி.டி.ஐ) 65வயது
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அரசியலில் அடியெடுத்து வைத்த பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பி.டி.ஐ, (பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்) கட்சி, அந்நாட்டின் பிரதான எதிர்கட்சியாக உள்ளது. ஆனால் பி.டி.ஐ இதுவரை நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில்லை.
இந்தமுறை, இம்ரான்கான் ராணுவத்திற்கு விருப்பமான பிரதமர் வேட்பாளராக இருப்பதாலும், ராணுவம் பிற கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாலும் இம்ரான்கானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பல அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதை இம்ரான்கானும், ராணுவமும் மறுக்கின்றனர். ஆனால் பிபிசிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜென்ரல் பாஜ்வா, இம்ரான்கானைப் போன்ற ஜனநாயகத்திற்கு ஆதரவானவரை இதுவரை பார்த்ததில்லை என்று கூறுகிறார். அல் கொய்தாவுடன் தொடர்புள்ள ஒரு குழு உட்பட நாட்டின் பல சர்ச்சைக்குரிய குழுக்கள் இம்ரான்கானுக்கு ஆதரவளிக்கின்றன.
பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சிக்கு தற்போது 32 இடங்கள் உள்ளன.
பிலாவல் பூட்டோ ஜர்தாரி (பி.பி.பி) வயது 29
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பிலாவல் பூட்டோ ஜர்தாரி, வலுவான அரசியல் பின்புலம் கொண்டவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்ஃபிகர் பூட்டோவின் பேரனான பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் தாய் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ.
பி.பி.பியின் தலைவரும், 28 வயது இளைஞரான பிலாவல் பூட்டோ ஜர்தாரி, தனது தாயின் கனவான, “அமைதியான, முற்போக்கான, வளமான, ஜனநாயக பாகிஸ்தான்” என்ற முழக்கத்துடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.
பி.பி.பி கட்சி இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன.
பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு தற்போது 46 இடங்கள் உள்ளன.
- பாகிஸ்தான் தேர்தல்: 3 பெருங்கட்சிகளும், அதுகுறித்த தகவல்களும்
- பெண்கள் அதிகம் பங்கேற்கும் பாகிஸ்தான் தேர்தல்: 5 சுவாரசியத் தகவல்கள்
கட்சிகளின் நிலைமை என்ன?
நவாஸ் ஷெரீஃபின் சொந்த மாகாணமான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வலுவாக உள்ளது. பஞ்சாப் மாகணத்தில் வலுவான கட்சியாக திகழும் இந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் நகர்ப்புற வணிகர்கள்.
நாட்டின் நாடாளுமன்றத்திற்கு நேரடியாக தேர்தல் நடைபெறும் 272 தொகுதிகளில் மேற்பட்ட தொகுதிகள் பஞ்சாப் மாகணத்தில் பாதிக்கு மேல் உள்ளது, பி.எம்.எல்-என் கட்சிக்கு சாதகமான அம்சம். தேர்தலில் பிற கட்சிகளுக்கு வலுவான போட்டியளிக்கும் முக்கிய கட்சியாக இருக்கிறது பி.எம்.எல்-என்.
தேர்தலில் வெற்றிபெற இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி கடுமையாக போராட வேண்டியிருக்கும். 2013 தேர்தலில் கைபர் பக்துங்வா பகுதியில் தெஹ்ரீக் இ இன்சாப் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
தெற்கு சிந்து மாகாணத்தில் கட்சிக்கு பரவலான ஆதரவைக் கொண்டுள்ள பி.பி.பி கட்சிக்கு கிராமப்புறங்களில் ஆதரவு அதிகமாக இருக்கிறது.
தேர்தலில் என்ன நடக்கும்?
தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று முக்கியமான கட்சிகளில், நவாஸ் ஷெரீஃபின் பி.எம்.எல்-என் கட்சிக்கும், இம்ரான்கானின் பி.டி.ஐ கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இரண்டு கட்சிகளுமே அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டால், பிலாவல் பூட்டோவின் பி.பி.பி கட்சியின் ஆதரவை பெறும் கட்சியே கூட்டணி ஆட்சி அமைக்கும்.
பி.எம்.எல் வெற்றி பெற்றால், இந்தியாவும் அமெரிக்காவும் சற்றே ஆசுவாசப்படலாம். ஏனெனில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இம்ரான்கான் காட்டும் இணக்கமும், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அவர் காட்டும் மென்மையான அணுகுமுறையும் இந்த இரு நாடுகளுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் நீண்ட காலமாக இணைந்து பாகிஸ்தான் செயல்பட்டு வந்தாலும், தனது அண்டை நாடான ஆஃப்கானிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவித்தொகையை குறைத்துவிட்டார்.
பி.டி.ஐ வென்றால், பி.எம்.எல்-என் கட்சியின் நவாஸ் ஷெரீஃப் சிறையில் இருக்கும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தலாம்.
வெல்வது யாராக இருந்தலும், பாகிஸ்தானில் முக்கியமான பங்களிப்பை வழங்குவது ராணுவமே என்பதில் எந்தவித மாற்றமும் இருக்கப்போவதில்லை.