தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.
மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நேற்று மாலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிள்ளையை பெறுவது மட்டும் தாய் தந்தையருடைய கடமையாக இருக்க முடியாது மாறாக பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து நல்ல பழக்க வழக்கத்தை சொல்லிக்கொடுத்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக உருவாக்குவதே அவர்களின் பிரதான கடமையாகும் உணவு, உடை, மருந்து கொடுத்து பிள்ளைகளை வளர்ப்பது மட்டும் அவர்களின் செயலாக அமையக்கூடாது. பிள்ளைகளை பாடசாலைக்கு ஒழுங்காக அனுப்ப வேண்டும் அவர்களின் கல்வி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் சரியாக வளிகாட்ட வேண்டும்.
கணிதம், விஞ்ஞானம் உட்பட பாடங்களில் சித்தி எய்துவதற்கு அப்பால் அவர்களுக்கு நல்லதை கெட்டதை சொல்லிக் கொடுக்க வேண்டும். வளர்ந்த பின்னர் தாய் தந்தையை கவனிக்காத தான் பிறந்த நாட்டிற்கு ஊருக்கு சேவை செய்யாது படித்து பெரியாளாக இருந்தும் பயனில்லை.
பிறந்த ஊரில் எல்லா வசதிகளையும் பெற்று கல்வி கற்று வெளியேறி சொந்த ஊரை விட்டு சென்று வெளிப் பிரதேசங்களில் போய் பலர் வேலை செய்கின்றார்கள். வட மாகாணத்தில் பல வைத்தியசாலைக்கு நான் சென்றபோது அங்கே வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆனால் தென்னிலங்கையில் இங்கே இருந்து சென்ற வைத்தியர்கள் வேலை செய்கின்றார்கள்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த, சகோதரனை இழந்த, தாய் தந்தையை இழந்த ஏழை மக்கள் இங்கே இருக்கின்றார்கள். படித்த பணம் அதிகம் உள்ளவர்கள் எல்லாரும் சொந்த ஊரை விட்டு வெளிநாட்டுக்கு போயிருக்கின்றார்கள். ஏழை மக்கள் தங்கள் குறையினை யாரிடம் சொல்வது. இறைவனிடத்திலா சூரியன் சந்திரன் இடத்திலா சொல்வது
இல்லை இங்கே உள்ள அரசியல் தலைவர்களிம்தான் சொல்ல வேண்டும் அவர்கள்தான் இவர்களின் குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளுக்குள் இருக்கின்ற முரண்பாடுகள் மக்களுக்கு அபிவிருத்தியை சேவையை ஒருபோதும் கொண்டுவராது. இவர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். மக்களின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
முஸ்லீம் அரசியல்வாதிகளை நீங்கள் பாருங்கள் அவர்கள் இந்த நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகின்றதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பாரிய அபிவிருத்தியை கொண்டு வந்திருக்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.