மதுரையம்பதியில் தடாதகைப் பிராட்டியை (மீனாட்சியம்மை) மணந்து கொள்ள வரும் சிவபெருமான், திருமணம் முடிந்த பிறகு அருகில் இருந்த குண்டோதரனுக்கு பெரும் உணவுப்பசியை உண்டாக்கி அவனுக்கு அன்னமளிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். பெண் வீட்டாரும் எவ்வளவோ உணவு அளித்தும் அவன் பசி அடங்கவில்லை. அவர்கள் முயற்சிகள் பயனற்று போயின. உணவுப்பொருட்கள் தீர்ந்துவிட்டன. இறுதியில் சிவபெருமானே அன்னபூரணியை வரவழைத்து அவள் மூலமாக குண்டோதரனின் பசியை ஆற்றினாராம். இதுதான், திருவிளையாற் புராணம் கூறும் வரலாற்றின் சுருக்கம்.
இனி, கர்ண பரம்பரை வரலாற்றை அறிவோம். குண்டோதரனின் பசியைப் போக்குவதற்காகவும் பெண் வீட்டாருக்கு ஏற்பட்ட சங்கடநிலையை போக்கவும் இறைவனே தன் பங்கிற்கு குபேரனிடம் கடனாக நிதியுதவி பெற்று உணவுப்பொருள் வாங்கி வரவழைத்து உணவு தயாரிப்பதற்கு உதவினாராம். அவ்வமயம், கொடுத்த கடனைத் திரும்பப்பெற சிவபெருமானை தேடி அலைகின்றான் குபேரன். ஈசனும் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணிருப்பார் போலும். மேலும், நன்கு பயிர் வளர்ந்த நஞ்சை கழனியின் (வயல்) நடுவே கதிர் அறுக்கும் வேலையாட்களில் ஒருவராக தலையில் துணியினால் முக்காடு இட்டுக் கொண்டு குபேரனின் கண்களுக்கு புலப்படாமல் ஒளிந்திருந்தாராம். தேடிவந்த குபேரன் மனதில் சந்தேகம் வர எல்லா வேலையாட்களின் முகத் துணியை நீக்கி சோதனையிட ஆரம்பித்தான். வேலையாளாக வந்த சிவபெருமானிடம் வரும் தருணத்தில் துணியை விலக்கும் போது சட்டென்று மானிட உருவம் அகன்று லிங்க ரூபமாய் காட்சியளித்தாராம் சிவபெருமான். குபேரனும் தனக்கு பதவி அளித்ததே சிவபெருமான்தானே என்ற நினைப்பு பொறிதட்ட உடனே, அவரை பூஜித்து வழிபட்டானாம்.
ஈஸ்வரன் லிங்க ஸ்வரூபமாக மாறிய அந்த இடமே தற்போது திருமுக்காடு என்று அழைக்கப்படுகின்றது. காஞ்சி மாவட்டத்தில் அச்சிறுபாக்கத்திலிருந்து எலப்பாக்கம் செல்லும் சாலையில் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் “முக்காட்டீஸ்வரர்’, சுயம்புத் திருமேனி. அம்பிகைக்கு “முத்தாம்பிகை’ எனப்பெயர். ஒரு சிவாலயத்திற்கு உரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று அழகிய கழனிகள் சூழ சிறிய ஆலயமாக பளிச்சென்று கண்களுக்கு புலப்படுகின்றது. முருகனின் சந்நிதி எதிரே யானை வாகனம் உள்ளது சிறப்பு. சப்தமாத்ருகா தேவிகள் சந்நிதி சிறப்பாக அமைந்துள்ளது. நாகத்தில் நர்த்தன கிருஷ்ணனை தரிசிக்கலாம். தலமரமாக வில்வம் மற்றும் வன்னி மரங்கள் உள்ளன. ஆலயம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது.
தற்போது அச்சிறுபாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையை ஒட்டி உள்ள வஜ்ரகிரி மலையில் உள்ள பசுபதீஸ்வரர் மலையைச் சுற்றி பௌர்ணமி தோறும் கிரி வலம் வரும் பக்தர்கள் திருமுக்காடு வழியாகச் செல்கின்றனர். கடக ராசிக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் வேண்டி திருமுக்காட்டீஸ்வரரை வந்து வணங்கிச் செல்கின்றனர். பயன் அடைகின்றனர்.
தேவாரப் பாடல் பெற்ற அச்சிறுபாக்கம் தலத்தைச் சுற்றி ஐந்து பதிகள் பஞ்ச பூதத்தலங்களாக சிறப்பித்து வழிபடப்படுகின்றன. அவை, 1. அச்சிறுபாக்கம் (அக்னித்தலம் கண்ணுவ மகரிஷியும், கௌதம முனிவரும் பூஜித்தது) 2. குரும்பரை (ஆகாயம் – பிரமன் பூஜை செய்தது, செய்யூர் ரோடு சோத்துப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ) 3. திருமுக்காடு (வாயு – குபேரன் பூஜித்தது) 4. பெரும்பேறு எனப்படும் பேறை நகர் (பூமி – வருணன் பூஜித்தது மணல் லிங்கம்) 5. இந்திரனூர் எனப்படும் இந்தளூர் (நீர்- இந்திரன் பூஜித்தது) எதிர்வரும் ஜூலை 20 – ஆம் தேதியன்று திருமுக்காட்டீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீருத்ர ஹோமம், வலம்புரிச்சங்கு அபிஷேகம், பாராயணங்கள், பக்தி பாடல்கள் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.