வட தமிழீழம் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறையில் மோசமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளிகள். விளக்கமறியலில் உள்ள மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்ட (இடுப்புக்கு கீழ் இயங்காத) குமாரசாமி பிரபாகரன் எனும் மாற்றுத்திறனாளி தனக்கு சிறைச்சாலையில் எவ்வித ஏற்பாடுகளும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு மலசலம் கழிக்க முடியாமல் பெரும் சிரமப்பட்டதாகவும், இது தனது உரிமையை பாதித்துள்ளது எனவும் தெரிவித்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
குமாரசாமி பிரபாகரன் என்பவரை
19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு யாழ். சிறைச்சாலைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் முன்னர் தர்மபுரம் காவல் நிலையத்தில் ஒருநாள் முழுவதும் சக்கரநாற்காலியிலேயே இருந்துள்ளார்.
அப்போது அவருக்கு மலம் கழிக்க கூட முடியாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில், சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மாற்றுத்திறனாளிக்கு உரிய எவ்வித வசதிகளும் இன்றி மிகவும் துன்பப்பட்டதையடுத்து 20ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியரின் அனுமதியுடன் யாழ். வைத்தியசாலைக்கு சென்றிருந்தார்.
எனினும், அங்கும் மாற்றுத்திறனாளி என்று பாராது தமது கையை சங்கிலியால் விளங்கிட்டு கட்டிலோடு கட்டியிருந்ததாக, முன்னாள் போராளியான குமாரசாமி பிரபாகரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே குறித்த விடையம் தொடர்பில் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் கனகராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டு வினவிய போது,
குமாரசாமி பிரபாகரன் என்பவரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், அது தொடர்பிலும் மற்றும் அரச பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய வசதிகள் காணப்படுகின்றதா என்பது பற்றியும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.