கொஞ்ச நாள்களாகக் கத்தியும் துப்பாக்கியுமாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்தியை ரத்தமும் சதையுமாகக் குடும்பக் கதைக்குள் கொண்டுவரும் முயற்சியே இந்தக் ‘கடைக்குட்டி சிங்கம்.’
ஊரில் பெரிய தலைக்கட்டு சத்யராஜ். அவருக்கு விஜி, பானுப்ரியா என இரண்டு மனைவிகள். ஆண் குழந்தை வேண்டுமென்ற அவரின் ஆசையைப் பொய்க்கச் செய்து வரிசையாக ஐந்து பெண் குழந்தைகள் பிறக்கின்றன. கடைக்குட்டியாகப் பிறக்கிறார் ‘விவசாயி’ கார்த்தி. இரண்டு அம்மாக்கள், ஐந்து அக்காக்கள், போதாக்குறைக்கு இரண்டு முறைப்பெண்கள் எனத் தேவதைகள் சூழ் உலகு கார்த்தியுடையது. ஆனால், ஒருகட்டத்தில் கார்த்தியினாலேயே குடும்பத்துக்குள் பிளவு ஏற்படுகிறது. இருக்கும் பிரச்னைகள் போதாதென்று ஒரு ஜாதிவெறி குரூப் வேறு கார்த்தியைப் போட்டுத்தள்ளத் துடிக்க, மயிரிழையில் தப்பித்துக்கொண்டே இருக்கிறார் ஹீரோ. எதற்காக அந்த ஜாதிவெறி கும்பல் இவரைத் துரத்துகிறது, குடும்பத்துக்குள் ஏற்பட்ட விரிசல் சரியானதா என்பதே மீதிக்கதை.
விவசாயி குணசிங்கமாகக் கார்த்தி. காமெடி, சென்டிமென்ட், உறவுச் சிக்கல்கள் என அவரின் முழு முதல் குடும்பப் படம் இது. ஒரு குறையும் வைக்காமல் சூப்பராக நடித்திருக்கிறார். அத்தைப் பெண்களுடன் பட்டும்படாத ஊடல், அக்காக்களிடம் மிஞ்சிக் கெஞ்சுவது, முறுக்கிக்கொண்டுத் திரியும் மாமன்களின் வெட்டி ஜம்பத்தை அசால்ட்டாக டீல் செய்வது, சத்யராஜிடம் குழைவது என எல்லா ஃப்ரேம்களிலும் கார்த்தி மட்டுமே தெரிகிறார். கொஞ்ச நாள்களாக ‘ஏ’ சென்டரில் மையம்கொண்டிருந்த அவரை பி, சி சென்டர்களில் கொண்டு சேர்க்கும் முக்கியமான படமாக இது இருக்கும்.
சயீஷா – கிராமத்து மண்மணத்துக்குப் பொருந்தா அழகோடு வந்தாலும் கண்களை நிறைக்கிறார். எக்கச்சக்க கேரக்டர்கள் உலாவரும் படத்தில் அவருக்கான பங்கு கொஞ்சம்தான் என்றாலும், உறுத்தாத வகையில் நடித்துக்கொடுத்திருக்கிறார். ஃபேஸ்புக் பைத்தியமாக வரும் பிரியா பவானிசங்கரியும் “மாமா! மாமா!” எனச் சுற்றிச் சுற்றிவரும் அர்த்தனா பினுவும் நம் அத்தைப் பெண்களின் சாயலில் லேசாகத் தெறியத்தான் செய்கிறார்கள்.
கடைக்குட்டி சிங்கத்தில் கட்டப்பாவின் கெட்டப் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சீனியர்மோஸ்ட் நடிகருக்கு நடிக்கத்தான் ஸ்கோப் இல்லை. ஒன்றிரண்டு காட்சிகளிலேயே பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திவிடும் சத்யராஜின் எனர்ஜி இந்தப் படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங்.
முன்பாதியில் ஒன்றிரண்டு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் சூரி. ஆனா, இன்னும் எத்தன நாளைக்கு இதே வாய் குழறுன மாடுலேஷனுல பேஜிகிட்டு இருக்கப்போறீங்க ஜூரி பாஜு? போரடிக்குது! இரண்டாம் பாதியில் சூரியோடு சேர்ந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் சரவணனும் இளவரசும். கிராமத்தில் லந்து பண்ணும் பெரியப்பாக்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மெளனிகா, யுவராணி, தீபா, இந்துமதி, ஜீவிதா என ஐந்து அக்காக்களும் தங்களுக்குள் யார் பெஸ்ட் எனப் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள் போல! அவ்வளவு இயல்பான நடிப்பு. மாமன்களாக வரும் ஶ்ரீமனும் மாரிமுத்துவும் பாட்டியாக வரும் அம்மாச்சியும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் என்பதால் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்லவே இரண்டு நாள்களாகும் போல! ஒவ்வொருவரும் நம் கிராமத்து சொந்தங்களை அப்படியே கண்முன் கொண்டுவருகிறார்கள். இதற்காக மட்டுமல்ல, இயக்குநரை இன்னொரு விஷயத்துக்காகவும் பாராட்டியே ஆக வேண்டும். படத்தில் அனைவருக்குமே தூய தமிழ்ப் பெயர்கள். பெருநாழி குணசிங்கம், கண்ணுக்கினியாள், அதியமான் நெடுங்கிள்ளி, வானவன் மாதேவி எனக் கம்பீரமாக ஒலிக்கின்றன பெயர்கள்.
வேல்ராஜின் கேமரா விவசாய நிலங்களின் வனப்பை அப்படியே கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் பச்சையும் பசுமையுமாக.. ஜில்ஜில்! அவருக்கு பக்காவாக ஒத்துழைத்திருக்கிறார் கலை இயக்குநர் வீரசமர். இமானின் இசையில் எல்லாப் பாடல்களும் வழக்கம்போல ‘ஆல்ரெடி கேம் ப்ரோ’ டோனிலேயே இருக்கின்றன. சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயனின் சாய்ஸா இல்லை இயக்குநரின் சாய்ஸா எனத் தெரியவில்லை. ஒரே மாதிரியான மூன்று ஸ்டன்ட் சீக்வென்ஸ்கள் – ஆடியன்ஸுக்கு கொட்டாவிதான் வருகிறது. முன்பின் ஃபினிஷிங் இல்லாத நிறைய காட்சிகளால் எடிட்டருக்கு எக்கச்சக்க வேலை இருந்திருக்கும்!
வில்லன் சந்துருவுக்கான ஆரம்பகட்ட பில்ஃப் காட்சிகள் விறுவிறு ஆக்ஷன் படத்துக்கான டெம்போவை தக்க வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஏமாற்றமளிக்கிறார். ஹீரோ விவசாயிதான். அதை நிறுவ படத்திலும் ஏகப்பட்ட காட்சிகள் இருக்கின்றனதான். ஆனால் வில்லனிடம் பன்ச் பேசும்போதுகூட, ‘நான் விவசாயிடா’ என்பதெல்லாம் ஓவர்டோஸ்!
படத்தின் முக்கிய மைனஸ் நீளம்தான். கதையின் கனம் முழுக்க இரண்டாம் பாதியில் தங்கியிருப்பதால் முதல்பாதி வீக்காக இருக்கிறது. முதல்பாதியில் அத்தனை உறவுகளையும் அறிமுகப்படுத்தும் காட்சி சற்றே நீளம் என்றாலும் புதுசு. இன்டர்வெல் வரை கேரக்டர்களின் டெஸ்க்ரிப்ஷனிலேயே கவனம் செலுத்தியதாலோ என்னவோ அந்த வீக்னஸ் துருத்தித் தெரிகிறது.
ப்ரீ க்ளைமாக்ஸும் சரி, க்ளைமாக்ஸும் சரி நிச்சயம் தாய்க்குலங்களை டிஷ்யூ பேப்பர் தேடவைக்கும். அதில் வெற்றி பாண்டிராஜுக்கே! ஆனால், படத்தின் வசனங்களில் அநியாய நாடகத்தன்மை. ‘நெல்லு வெதைக்கிறதும் முக்கியம், சொல்லு வெதைக்கிறதும் முக்கியம்’, ‘உனக்கு பாடம் எடுத்ததுக்கு அவனை பாடைல அனுப்பிட்டீயே!’, ‘சரி செய்றதை சரியா செய்யணும்’, ‘உறவுல வேகுறதைவிட வெறகுல வேகலாம்’, மொதல்ல அவன் கெத்த சாகடிக்கணும் அப்புறம் அவன் சொத்தை சாகடிக்கணும்’ – இப்படி ரைமிங் வசனங்களை வைத்து எங்களை சோதிக்கிறீங்களே இயக்குநர் சார்?
‘குழந்தைல ஆம்பள என்ன பொம்பள என்ன’ எனக் கேட்கிறார் ஹீரோ. ‘ஒரு பொண்ணும் பையனும் பேசுனாலே லவ்வா’ எனவும் சாட்டை சுழற்றுகிறார்! ஆணவக்கொலை பற்றியும் பேசுகிறார். நல்லது! ஆனால், அப்பாவும் மகனும் போட்டி போட்டுக்கொண்டு, ‘நீ ஒரு ஆம்பளன்னா நேர்ல வாடா’ என வில்லனிடம் திரும்பத் திரும்ப சொல்கிறார்களே… அதென்ன கணக்கு சார். ஏன் இந்த ப்ரிவிலேஜ் மனநிலை?
பல கேரக்டர்கள், பலமான பில்டப் எல்லாம் படத்தில் இருக்கின்றன. ஆனாலும், இயல்பான ஏதோவொன்று மிஸ்ஸிங். அனைவரும் சொல்லி வைத்ததுபோல செய்ய வேண்டியதை சரியான சமயத்தில் செய்துவிட்டுப் போகிறார்கள். கூடக்குறைச்சல் இல்லாமல் எல்லாம் அளவாக, அழகாக இருக்கிறது. இதனாலேயே மிக நேர்த்தியான மெகா சீரியல் பார்க்கும் உணர்வு உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.
வசனங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி… நீளத்தைக் குறைத்து… இப்படி சில குறைகளும் சொல்லலாம்தான்! ஆனாலும், குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கத்தைப் பார்க்க ஒரு ட்ரிப் போய்விட்டு வரலாம். ரை… ரைட்!