மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை கண்டறியும் நடவடிக்கையை மலேசிய குடிவரவுத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் அங்கமாக கடந்த ஜூலை 1 முதல் தொடங்கப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 3,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 31 முதல் இத்தேடுதல் வேட்டை மேலும் தீவிரமாக நடக்க இருக்கின்றது. அத்துடன் இவ்வாறான தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தானாக முன்வந்த சரணடையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் திட்டத்தினை தொடங்கியுள்ளோம். அதன் கீழ், சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினர் ஆகஸ்ட் 30 வரை சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என குடிவரவுத்துறையின் இயக்குனர் ஜெனரல் முஸ்தபர் அலி தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு கணக்குப்படி, மலேசியாவில் வெளிநாடுகளை சேர்ந்த 6 லட்சம் பேர் சட்டவிரோதமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா, வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள்.
அதே போல், மலேசியாவின் தேயிலை தோட்டங்கள், கட்டுமானப் பணிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பல துறைகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 20 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.