தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் இயற்கை மருத்துவம் என்ற பெயரில் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி மனைவிக்கு கணவன் கார்த்திகேயன் அவரது நண்பருடன் பிரசவம் பார்த்ததில் மனைவி கிருத்திகா உயிரிழந்துள்ளார். அவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயன் திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் மற்றும் ரசாயன கலப்பில்லாத உணவுப் பொருட்கள் பயன்படுத்துவது போன்றவைகளில் ஆர்வம் உள்ள இவர் தனது மனைவி கிருத்திகா கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவனைக்கு செல்வதை தவிர்த்து அவரது நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருத்திகா பிரசவ வலியால் துடித்த நிலையில் நண்பர் பிரவீன் என்பவரை வீட்டிற்கு வர வைத்து இருவரும் கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது கிருத்திகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது வலியால் துடித்த கிருத்திகா வீட்டிலேயே இறந்துள்ளார். வீட்டில் பிரசவம் பார்த்தது குறித்து கார்த்திகேயன் கூறுகையில், மருந்து மாத்திர சாப்டாம, ஹாஸ்ப்பிட்டல் போகாம வீட்டுலியே குழந்த பிறக்கனும்னு நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன். அதுதான் என்னோட விருப்பமா இருந்துச்சு. அதுக்காக இயற்கை உணவு அதிகமா எடுத்துக்கிட்டோம் என்றார்.
கிருத்திகா இறந்தது குறித்து நல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உதவி ஆய்வாளர் தனசேகர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேந்திரன் என்பவர் புதுப்பாளையம் அமர்ஜோதி கார்டன் பகுதியில் தனது மகளுக்கு வீட்டில் பிரசவம் நடைபெற்றபோது இறந்ததாகவும், மகள் கிருத்திகாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பிரிவு 174ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
“பிரசவ நேரத்தில் 500 மில்லி முதல் 1 லிட்டர் வரை உதிரப்போக்கு இருக்கும். அப்போது அந்த பிரச்சனையை கையாளக்கூடிய மருத்துவர்கள் மட்டுமே பெண்னை சீரான நிலைக்கு கொண்டுவர முடியும். உதிரப்போக்கு நிற்காத நிலையில் ஒரு சில நேரங்களில் கர்ப்பப்பையை அகற்ற வேண்டி வரும்.”
“கிருத்திகா நிச்சயம் உதிரப்போக்கு காரணமாகத்தான் இறந்திருக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் என எந்தத் துறையானாலும் முறையான பயிற்சிகள் செய்யாமல் மேற்கொள்ளக்கூடிய எந்த ஒரு செயலும் விபரீதத்தை ஏற்படுத்தும். முறையான பயிற்சிகள் இன்றி யூ டியூப் மூலம் வீடியோக்களை பார்த்து அதன் மூலம் பிரசவம் போன்ற மிக அதிக ஆபத்து மிகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது உயிரிழப்பு போன்ற கேடுகளையே விளைவிக்கும்,” என்றாார் மகப்பேறு மருத்துவர் பூங்கோதை செல்வராஜ்.
இதனிடையே முறையற்ற வகையில் பிரசவம் பார்த்து உயிராபத்தை உண்டாக்கியதாக கார்த்திகேயன் குடும்பத்தினர் மீது திருப்பூர் மாநகர சுகாதார அலுவலர் சார்பில் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.