பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால் இந்த முறை நவாஸ் ஷெரிப் சிறையில் உள்ளார். அவர் இல்லாத நிலையில் நடக்கும் இந்த தேர்தல் சர்வதேச நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.
நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சிக்குப் போட்டியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி களமிறங்கியுள்ளது.
இம்முறை முதல் முறையாக அந்நாட்டுப் பொதுத்தேர்தலில் பழங்குடியினருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு உள்ளது. இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பலூசிஸ்தானின் குவெட்டாவில் கிழக்கு பைபாஸ் பகுதியில் பயங்கரவாதிகளால் நேர்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
கைபர் – பக்துன்கவா வாக்குச்சாவடி அருகே நவாஸ் மற்றும் இம்ரான் ஆதரவாளர்களிடயே மூண்ட சண்டையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த 2 பேரும் பலியானாகக் கூறப்படுகிறது.