யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டு பூங்காவில் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகிய பனை கண்காட்சி வாரம் வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்பெறும் இக்கண்காட்சியில் பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு வகையான உணவு உற்பத்திப் பொருட்களும், கைப்பணிப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுடச் சுட ஓடியற்கூழ், பனங்காய்ப் பணியாரம் ஆகியவற்றையும் குறித்த கண்காட்சியில் பெற்றுக் கொள்ளலாம். தவிர முல்லை மாவட்ட பனை கூட்டுறவு சங்கத்தின் பனம் சோடா தனிச் சுவையாக இருந்தது. அதனை அங்கு வந்தவர்கள் ஆர்வமாக வாங்கி பருகியதனையும் அவதானிக்க முடிந்தது. பதநீரும் அங்கு அதிகளவு விற்பனையாகின. கொக்கோகோலா, பெப்சி போன்ற மேற்கத்தைய பானங்களை தவிர்த்து பதநீர், பனம் சோடாவை இந்த வெயில் காலங்களில் பயன்படுத்தினால் உடலுக்கும் வலுவை தரும்.
வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள், பனை சார் உற்பத்தி நிறுவனங்கள் என்பன இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. பொதுமக்கள் ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். எம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையாக அமைந்தது பனை மரமாகும். அவர்கள் பனையின் ஒவ்வொரு பாகத்தையும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்தி உடல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
எம் எதிர்கால தலைமுறை பனம்பொருள் உற்பத்திகளை அதிகமாக வாங்கி பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். இதன் மூலம் கிராமிய மக்களின் பொருளாதாரமும் பெருமளவில் உயரும்.