எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் A,I,J,Q,Yஆகியவை.
குண அமைப்பு
1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் அளிப்பார்கள்.
வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.
தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள்.
இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம் கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
உடல் அமைப்பு ஆரோக்கியம்
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான பலவீனம் இருக்கும்.
கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.
குடும்ப வாழ்க்கை
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிக கலாரசனை உடையவர்கள். ஆகையால் இளமையில் அடிக்கடி காதல் வயப்படுவதும், காதல் விளையாட்டுகளில் ஈடுபடவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். அனேகமாக இவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம். கூட்டுக் குடும்பத்தை விட எதிலும் தனித்து வாழ வேண்டும் என்பதே இவர்களின் விரும்பம். தனித்து வாழ்ந்தாலும் மற்றவர்களை ஆதரிக்கும் பொறுப்பிலிருந்து செய்து முடிப்பார்கள்.
திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி சில நேரங்களில் கவலைகளை உண்டாக்கும். அனுசரித்து நடக்கக்கூடிய வாழ்க்கை துணை வாய்த்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை அமைதியானதாக இருக்கும்.
பொருளாதாரம்
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை ஒரே சீராக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையையும், உயர்தரமான ஆடை அணிகலன்கள் அணிவதையுமே விரும்புவார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். கடன்கள் அதிகம் ஏற்படாது. ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றலும் இருக்கும்.
தொழில்
ஒன்றாம் எண் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. எதிலும் முதன்மையாக செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள், வாழ்வில் அதிகம் சம்பாதிக்கும் திறமை, நல்ல உயர்வான பதவிகள், பலரை நிர்வாகிக்கும் பொறுப்பு யாவும் அமையும். அரசியல் சம்மந்தப்பட்ட துறைகளில் நல்ல முன்னேற்றம் கிட்டும். அரசு உத்தியோகமும் இவர்களுக்கு அமையும். சித்த மருத்துவம் ஹோமியோபதி போன்றவற்றிலும் நல்ல முன்னேற்றம் கொடுக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு அதிகாரமிக்க பதவிகளை அடைவார்கள். தேவை யற்ற எதிர்ப்புகளும் இருக்கும்.
நண்பர்கள் பகைவர்கள்
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிகார குணம் இருக்கும். இவர்களை அனுசரித்து நடப்பவர்கள் மட்டுமே இவர்களுக்கு நண்பர்களாக இருக்க முடியும். 2,9,3 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகவும் 4,5,7,8 ஆகிய எண்களில் இவர்களுடன் ஒத்து பழக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல நட்புகள் கிடைக்கும்.
சூரியனுக்குரிய காலம்
ஒவவொரு ஆண்டும் ஆங்கில வருட ரீதியாக ஜீலை 22 முதல் ஆகஸ்டு 22 தேதிவரை சூரியனுக்குரிய காலமாகும். ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குடையது.
சூரியனுக்குரிய திசை
சூரியனுடைய திசை கிழக்கு. பிரார்த்தனை செய்யும் இடம், பூஜை அறை, சமையல் அறை போன்றவை சூரியனுக்குரியவை. எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கிழக்கு பக்கமாக தொடங்கினால் அற்புதமான நற்பலனை அடையலாம்.
அதிர்ஷ்ட கல்
சூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்ரரவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும். தனவரவும், நன்மதிப்பும் உண்டாகும்.
பரிகாரங்கள்
ஓன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் சூரிய தேவனுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டம் தருபவை
அதிர்ஷ்ட தேதி -1,10, 19, 28
அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட திசை – கிழக்கு
அதிர்ஷ்ட கிழமை – ஞாயிறு
அதிர்ஷ்ட கல் – மாணிக்கம்
அதிர்ஷ்ட தெய்வம் – சிவன்